a K Vijay Anandh review
சமீபத்தில் வயநாட்டில் நடந்த நிலச்சரிவுக்குப் பிறகு தான் இந்த கதை எழுதியிருக்கவேண்டும். திரைக்கதை எழுதியிருக்கும் K R சுனில் மற்றும் தருண் மூர்த்தி இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நிலச்சரிவுக்குப் பின் நடக்கும் மிட்புப்பணிகள், அங்கே கண்டுபிடிக்கப்படும் ஒரு விஷயம், அதை மிக நேர்த்தியாக இரண்டாம் பாதிக்கு கொண்டுவந்து, மயிர்க்கூச்சரியும் கிளைமாக்ஸ் படைத்திருக்கிறார்கள்.
ஒரு சாதாரண மனிதன், மோசமான அதிகார வர்க்கத்திடம் சிக்கிக்கொண்டால் அவனது வாழ்க்கையும் குடும்பமும் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை காட்டி பயமுறுத்தியிருக்கிறார்கள்.
மோகன்லால், ஷோபனா ஜோடி அமைந்துவிட்டாலே அடிபொலிதான் போலும். இரண்டு வளர்ந்த குழந்தைகளின் பெற்றோர்களாக, ஒரு நடுத்தரவர்க்கத்திற்கும் கீழான வர்க்கக்குடும்பமாக அற்புதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
மோகன்லால், ஒரு முழுமையான நடிகர் என்கிற டைட்டில் இவரைத்தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. அந்தளவிற்கு, மனைவியுடன், குழந்தைகளிடம், செல்லப்பிராணியிடம், வீட்டிற்கு வெளியே நண்பர்களிடம், தன் காரில் பயணிக்கும் பயணிகளிடம் மற்றும் வில்லன்களிடம் என்று ஒவ்வொரு சூழ் நிலைக்கும் ஒவ்வொரு முகம் காட்டியிருக்கிறார்.
என்னதான் முன்னாள் சினிமா சண்டைக்கலைஞர் என்றாலும், ஒரு புள்ளி வரை அவர் காட்டும் பணிவு மற்றும் கெஞ்சல் அபாரம். எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் அட்டகாசம்.
ஷோபனா, கணவரைப் பார்த்து, என்னாச்சு இவருக்கு ?? என்று குழம்புவதிலிருந்து, தங்கள் மீது பொய் வழக்கு போட்டு கொடுமைப்படுத்தும் காவலர்களிடம் பொங்குவது வரை, சிறப்பாக நடித்திருக்கிறார்.
மோகன்லாலின் நண்பர்கள், மெக்கானிக் ஷெட் என்று அழகான கவிதை போலவும், இன்னொருபக்கம் பிரகாஷ் வர்மா, பினு பப்பு என்று மிரட்டும் காவல்துறை அதிகாரிகள் என திரைக்கதை அமைப்பதில் கதகளி ஆடியிருக்கிறார்கள்.
மூத்த சண்டைப்பயிற்சியாளர் பாரதிராஜா, அவரது மாணவர்களாக மோகன்லால், விஜய்சேதுபதி, இளவரசு என்று நல்ல கற்பனை.
ஜாக்ஸ் பிஜாயின் இசை மற்றும் ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு அபாரம்.
நிஷாத் யூசுப் மற்றும் ஷவீக் ஆகியோரின் எடிட்டிங்குக்கு ஒரு ராயல் சல்யூட்.
வழக்கம் போல, ஒரு அற்புதமான மலையாள சினிமாவை தமிழ் ரசிகர்களுக்காக தமிழ்ப்படம் போலவே வசனங்கள் அமைத்து விருந்து படைத்திருக்கிறார் ஆர் பி பாலா.
இப்படத்தின் வெற்றி தொடரும் !