நிழற்குடை

mysixer rating 5/5

178

a K Vijay Anandh review

Tourist Family க்கு எந்த விதத்திலும் குறைவில்லாத படம், அதில் சசிகுமார் மனைவி மகன்கள் சகிதம் இலங்கையில் இருந்து வந்து இங்கிருப்பவர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார். இதில், இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரில் தனது குடும்பத்தினர் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு, தனியாளாக  வந்து ஒரு குழந்தையின் மனதைக்கவர்வதுடன் பிறகதாபாத்திரங்கள் மற்றும் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார் தேவயானி.

கலப்பு திருமணம் செய்துகொண்டதால் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட – கைவிடப்பட்டதாக நினைத்துக்கொண்டு தனியாக வசிக்கும்  இளம் தம்பதி விஜித், கண்மணி மனோகரன் .  அவர்களின் மூன்று வயது குழந்தையை ஒரு கேர் டேக்கரிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள், அமெரிக்க கனவுகளோடு.

படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடங்களில் அந்த குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பதைபதைக்க வைத்திருக்கிறார் இயக்குநர்

நல்லவேளையாக,  வாட்ச்மேன் மற்றும் டாக்டர் நீலிமா உதவியால் அக்குழந்தை காப்பாற்றப்பட்டு அவரைப் பார்த்துக்கொள்ள அவருக்காகவே சென்னைக்கு வந்து காத்திருந்தது போல தேவயானி வரவழைக்கப்படுகிறார்.

அடுத்து வரும் இரண்டு வருடங்களும் அக்குழந்தை, தெய்வத்தின் மடியில் வளர்வது போல ஒரு உணர்வு.  “குழந்தைவளர்ப்பு அதுவும் பெண்குழந்தை வளர்ப்பு” என்கிற அற்புதமான கதைக்களத்தில், மிகவும் விறுவிறுப்பாகவே திரைக்கதை அமைத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சிவ ஆறுமுகம்.

போரில் இழந்த தன் குழந்தையைப்போலவே இருக்கும் நிலாவை பார்த்துக்கொள்ள வரும் தேவயானிக்கு மிகவும் கண்ணியமான அதே நேரம் மிகவும் வலுவான கதாபாத்திரம் விஸ்வரூபம் எடுத்து நடித்திருக்கிறார். குழந்தையின் அன்பில் மூழ்கிப்போவதும்  தன் மீது அபாண்டமாக விழும் பழியை எண்ணி உடைந்துபோவதும், குழந்தை இனி நாம் இல்லாமலும் இருந்துவிடுவாள் என்கிற இடத்தில் அழகாக விலகிச்செல்வதுமாக கண்கலங்க வைத்திருக்கிறார்.

ஜிவி அஹனா அஸ்னி மற்றும் நிஹாரிகா முறையே மூன்று மற்றும் ஐந்து வயது நிலா கதாபாத்திரங்களில் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

நிலாவின் பெற்றோர்களாக வரும் விஜித் மற்றும் கண்மணி, வேலை வேலை மற்றும் அமெரிக்க கனவுகள் என்று மிகவும் யதார்த்தமாக நடித்து வசீகரித்திருக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரங்களை தவிர மிகவும் குறிப்பிட்டு சொல்லும் கதாபாத்திரங்களாக ஐடி கம்பெனி முதலாளியாக வரும் ராஜ்கபூர் மற்றும் காவல்துறை அதிகாரியாக வரும் இளவரசு ஆகியோர் சிறப்பாக தங்களது அனுபவ முத்திரையை பதித்திருக்கிறார்கள். குறிப்பாக ராஜ்கபூர் இதுவரை இப்படி இவரை பார்த்ததில்லை எனும் அளவிற்கு சிறப்பான தோற்றம் சிறப்பான நடிப்பு.

ஆர்பி குருதேவின் ஒளிப்பதிவு மற்றும் நரேன் பாலகுமாரின் இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.

ரத்தக்களரியாகிக்கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் மென்மையான முத்தங்களுக்கு நிச்சயம் வரவேற்பு அதிகமாக இருக்கும், நிழற்குடை நிச்சயமாக வெற்றிபெறும் !

நன்றி இயக்குநர் சிவ ஆறுமுகம்