a Harish & K. Vijay Anandh review
சிவனடியார்கள் என்றால் நெற்றியில் திரு நீற்றுப்பட்டையும் கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து ஆலயங்களில் ஒரு ஓரமாக அமர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருப்பவர்கள் என்று பலரும் ஏன் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவனடியார்கள், மாவீரர்களுக்கெல்லாம் மாவீரர்கள் , அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் , போராளிகளுக்கெல்லாம் போராளிகள் , இவ்வளவு ஏன் காதல் மன்னன்களுக்கெல்லாம் காதல் மன்னர்கள் முத்தாய்ப்பாக தியாகங்களில் அவர்களுக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை என்று இன்றைய தலைமுறைக்கு கச்சிதமாக பாடம் எடுத்திருக்கிறார் முகேஷ் குமார் சிங்.
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே….
என்று கண்ணப்ப நாயனார் பற்றி ஆறாம் திருமுறையில் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப்பாடல் உடன் பட்டிணத்தார் உள்ளிட்ட பலரும் கண்ணப்ப நாயனாரைப் பற்றி சிலாகித்து பாடியிருக்கிறார்கள் . அப்படிப்பட்ட, சிவ பக்தியின் உச்சமாக விளங்கிய கண்ணப்ப நாயனாரின் கதையை கேட்டோம், நாடகமாக பார்த்தோம், படங்களாக திரையில் கண்டோம். ஆனால் இந்தப் படத்தில் வாழ்ந்தே காட்டியிருக்கிறார்கள்.
மிக அழகாக, காதல், வீரம், பக்தி என எல்லாவற்றையும் காட்டியிருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு மிக அருமையாக இருக்கிறது. முதல் பாதியில் காதலும், அதைத் தொடர்ந்து வருகின்ற பிரச்சனைகளும், தின்னாவாக விஷ்ணு மஞ்சுவின் அசாத்திய வில் வித்தை வீரத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
ஒரு காட்டிற்கு 5 பட்டிகள், இந்த 5 பட்டிகளுக்கும் தனித் தனி ராஜ்ஜியங்கள். வாயுலிங்கத்தை கைப்பற்ற காலமுகனான அர்பித் ரங்கா வருவதாக சொல்லி, 5 பட்டிகளையும் ஒன்றிணைக்கிறார் நாதநாதனான சரத்குமார். 4 பட்டிகள் ஆண்களால் ராஜ்ஜியம் செய்யப்பட, ஒரு பட்டிக்கு மட்டும் பெண் ராஜ்ஜியம். மதுபாலா அந்த பெண் பட்டியின் தலைவராக இருக்கிறார். மதுபாலாவின் மகளாக இளவரசி நெமிலியாக நடித்திருக்கிறார்.
ப்ரீத்தி முகுந்தன். அப்பப்பா.. என்ன அழகு.. ப்ரீத்தி நிச்சயமாக திரைத்துறையை ஒருநாள் கட்டி ஆளப்போகிறார்.
ஊர் காவல் தெய்வத்தை பூஜிக்கும் மாரியம்மாவாக வருகிறார் ஐஷ்வர்யா பாஸ்கரன்.
சிறுவயதிலேயே தன் நண்பனை பலி கொடுத்த காரணத்தால், கடவுள் நம்பிக்கை அற்றவனாக வளர்கிறான் தின்னா. காலமுகனின் தம்பி தன் படைகளுடன் வாயுலிங்கத்தை எடுக்க வரும்போது, தன் பட்டியை சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட, அதை தடுத்து அவனை கொன்றுவிடுகிறான் தின்னா. இதனால் காலமுகன் எப்போது வேண்டுமானாலும் காட்டையும், காட்டில் உள்ள 5 பட்டிகளையும் எதிர்த்து போர் தொடுக்க வருவான் என்று தெரிவதால், 5 பட்டிகளையும் இணைந்து போரை சந்திக்க சொல்கிறார் சரத்குமார். 5 பட்டிகளும் தின்னாவின் தலைமையை ஏற்று போரை சந்திக்க முற்படும்போது, தின்னாவுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறாள் மாரியம்மா. ஆனால் தின்னா நெமிலியை காதலிக்கிறார். அந்த காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் அப்பப்பா.. ரொம்ப அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன. தன் மகளுடன் அதே பட்டியை சேர்ந்த தின்னாவின் நண்பன் காதல் கொண்டுள்ளதால், அவனை பலிகொடுக்க திட்டமிடுகிறாள் மாரியம்மா. ஆனால் அதை தின்னா தடுக்க, கடைசியில் தின்னாவை அந்த கிராமத்தில் இருந்தே வெளியேற்றுகிறார்கள்.
இதற்கு நடுவே தின்னா யார் என்பதை பரமேஸ்வரன் பார்வதி தேவிக்கு விளக்க, வில் வித்தைக்கு பெயர் போன அர்ஜுனன் தான் தின்னாவாக மறு ஜென்மம் எடுத்துள்ளான் என்பது தெரியவருகிறது. இதில் நடுவில் கிரதாவாக வந்து, அர்ஜுனனுக்கு அவன் யார், அவனது பலம் என்ன என்பதை புரியவைக்கிறார் மோகன்லால்.
இதைத் தொடர்ந்து தனியே வாழ்ந்து வரும் தின்னாவுடன், நெமிலியும் இணைந்து வாழ, இருவருக்கும் உண்டான காதலும், அதை காட்டும் விதமான பாடல் காட்சிகளும் அழகாகவே இருக்கின்றன. ஒருபுறம் கடவுள் நம்பிக்கை இல்லாத தின்னா, மற்றொருபுறம் வாயுலிங்கத்தை பார்த்துவிட மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் நெமிலி. இந்த இருவரும் சேர்ந்து வாயுலிங்கத்தை பார்த்தார்களா? தின்னா எப்படி கண்ணப்ப நாயனார் ஆகிறான் என்பதே மீதி உள்ள கதை. காதல் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் நீக்கிவிட்டால், மொத்த பக்தி படமாக இது மாறிவிடும். ஆனால் இன்றைய காலத்திற்கு ஏற்ப, அதை கொடுத்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாலஹஸ்தி வாயுலிங்கத்தின் தொன்மையையும், கண்ணப்ப நாயனாரின் பக்தியையும் இப்படியும் கூறலாம் என்று எடுக்கப்பட்டிருக்கிறது இந்த படம். விஷ்னு மஞ்சு தன் கண்களை எடுத்து லிங்கத்திற்கு வைக்கும்போது, ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. வரலாற்று நிகழ்வை நேரில் பார்ப்பது போல அது இருந்தது.
ஷெல்டன் சாவ் தனது ஒளிப்பதிவு திறமையை மிக அழகாக பயன்படுத்தி, வரலாற்றை தத்ரூபமாக பார்க்கும் அளவுக்கு படத்தை வழங்க ஒரு கருவியாக இருந்திருக்கிறார். ஸ்டீஃபன் தேவசியின் இசை, படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. திரைக்கதை வடிவமைப்பில் விஷ்ணு மஞ்சு சாதித்திருக்கிறார். பிரபுதேவா மாஸ்டரின் நடனக் காட்சிகளை இன்னும் அழகாக மெருகேற்றி இருக்கிறது.
சிவ அவதாரமாக கிரதாவாக மோகன்லால் மற்றும் ருத்ரனாக பிரபாஸும் வரம் காட்சிகள் பேரழகு.
அக்ஷய் குமார் பரமேஸ்வரனாகவும், காஜல் அகர்வால் பார்வதியாகவும் வருகிறார்கள். நடு நடுவே , தனது மனைவிக்கு ஒரு லைவ் காமெண்டரி போல தின்னாவின் வாழ்க்கை பயணத்தை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார் சிவன். படம் முழுவதும் அவரை தின்னா தின்னா என்றே அழைக்கிறார்களே என்று தோன்றும் , தின்னா தனது இரு கண்களையும் சிவனுக்கு கொடுத்த பிறகு , அந்த சிவபெருமானாலேயே தின்னாவுக்கு கண்ணப்பா என்கிற திரு நாமம் சூட்டப்படுகிறது.
நமது முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமான உடற்கட்டுடன் பலசாலியாக விளங்கினர் என்பதை படம் பார்க்கும் போது அறியலாம். அவர்களது வழித்தோன்றலாக தின்னாவாக வரும் விஷ்ணு மஞ்சு , இந்த இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரது ஆறடி ஆஜானுபாகுவான உடற்கட்டை வைத்து கொண்டு, கே ஜி எப் போன்று ஒரு பிரமாண்டமான கேங்ஸ்டர் படத்தை எடுத்து 1000 கோடி சம்பாதித்து விட்டு போய்க்கிட்டே இருக்கலாம். ஆனால் , அப்பா மோகன்பாபுவுடன் இணைந்து இப்படி ஒரு ஆகச்சிறந்த கண்ணப்ப நாயன்மாரின் பெருமை சொல்லும் பக்தி படத்தை இன்றைய தலைமுறையினரும் கொண்டாடி மகிழும் நோக்குடன் கொடுத்த விதத்தில் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தின்னா , கண்ணப்பாவாக மாறும் அந்த இறுதிக் காட்சியில் சாஸ்திரிகளாக வரும் அப்பா மோகன் பாபுவுக்கு மகன் விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையிலான உரையாடல்கள் அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
கண்ணப்பாவை பார்த்து மகிழாத கண்கள் வெறும் புண்களே !