ஹபீபி

Rating 5/5

38

a K Vijay Anandh review

மண்ணின் கலைஞன் பாரதிராஜாவை அவரை பெற்றெடுத்த மண்ணிற்குள் நல்லடக்கம் செய்கிறார்கள். அடுத்த நாள், ஹபீபி திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டப்படுகிறது. மூத்த பத்திரிகையாளர் சிக்கல் தம்பி ஜெயபால், ஹபீபி பட இயக்குனர்  மீரா கதிரவனைப் பார்த்து சொல்கிறார், ” நேற்று ஒரு  மண்வாசனைக்கலைஞன் மண்ணிற்குள் செல்கிறார், இன்று நீங்கள் புதிதாய் முளைத்திருக்கிறீர்கள் …”  என்று.

அவ்வளவு தான், ஹபீபி படத்திற்கான விமர்சனம், சான்றிதழ் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

திரைக்கடலோடியும்  திரவியம் தேடு என்கிற தமிழனின் வாழ்வியலை இசுலாமிய பின்னணியில் அச்சு அசலாக , உயிரோவியமாக கொடுத்திருக்கிறார் மீரா கதிரவன். திருமணம் முடிந்த கையோடு வெளிநாடு சென்றுவிடும் கணவன், அவரது பிரிவில் மனைவியர் படும் துன்பம் என்று மிகவும் யதார்த்தமான படமாக ஹபீபி விரிகிறது.

சோறு போட்ட தறி யை விடமுடியாத தந்தை யூசுப், மனதில் புகுந்துவிட்ட காதலியை விட முடியாத மகன் அபு தாஹிர் இருவருக்குள்ளும் நடக்கும் பாசப் போராட்டம், அவர்களது வாழ்வியல் என்று அட்டகாசமாக படம் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது.

யூசுபின் உற்ற நண்பன் மயில்வாகனன், போட்டோகிராபர், நூலக உதவியாளர் என்று மூன்றே மூன்று இந்துக்கதாபாத்திரங்கள் தான். மீதி அத்தனை பேரும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்.

இரண்டரை மணி நேரப்படம் தான், ஆனால், நம்மை 25-45 வருடங்களுக்கு அவர்களது பகுதியில் தங்க வைத்த உணர்வு.

யூசுப்புக்கு அபு தாஹிர் மகனாக பிறப்பதலிருந்து ஆரம்பிக்கும் கதை அபு தாஹிரின் மைய வயது வரை நகர்கிறது.

கடையநல்லூர் பகுதிகளில், தமிழ் இஸ்லாமியர்களின் வாழ்வியல் எவ்வளவு அழகாக, கட்டுக்கோப்பாக இருக்கிறது என்பதை பார்த்து வியக்க தோன்றுகிறது.

சித்தப்பாவை திருமணம் செய்துகொண்டு சித்தியாக வரும், அனுஶ்ரேயா ராஜன் முதல், நிலொபராக வரும் மாளவிகா மனோஜ் வரை ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கச்சிதமாக படைக்கப்பட்டிருக்கின்றன.

இஷா, அபு தாஹிராக வாழ்ந்திருக்கிறார். அவரது பள்ளி படிப்பு, இளமைப்பருவம், அதற்கு அடுத்த ஒரு கட்டம் என்று மூன்று விதமான தோற்றங்களில் வந்து அசத்தியிருக்கிறார். இவருக்கு இது முதல்படம் என்று சொன்னால், சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள். அவருக்கு சரியான கால அவகாசம் கொடுத்து மிகவும் பொறுமையாக இந்தப்படத்தை செதுக்கி இருக்கிறார் மீரா கதிரவன்.

வழி தவறிசெல்லும், நாயகன் சரியான இலக்கை அடைவதாக வரும் கிளைமாக்ஸ் அட்டகாசம்.

அரபி பள்ளியில் தேசபக்தியுடன் படிக்கும் இசுலாமிய மாணவர்கள், அவர்களுக்கு ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து செல்லும் தூக்குச்சட்டி சாப்பாடு என்று அவர்களின் வாழ்வியலை அற்புதமாக காட்டியிருக்கிறார்கள்.

90  களில் அதற்கு முற்பகுதியில் வாழ்ந்த தமிழ் இசுலாமிய பெண்கள், பாவாடை தாவணியில் தான் பவனி வரும் அழகே அழகு. பொழுது சாய்ந்த பிறகு தண்ணீர் அள்ள தோழியுடன் வருவது காணவே கண்கோடி வேண்டும். அவ்வளவு அட்டகாசமாக படமாக்கியும் இருக்கிறார்கள். அதன்பிறகு 2000 ஆண்டுகளில் புர்கா எனும் ஆடை போர்த்திக்கொள்கிறது, அதனையும் மிகவும் நேர்மையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

காதல் கைவிட்டுப்போக, வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று திரும்பும் அபு தாஹிருக்கு கதீஜா பர்வீனுடன் நிச்சயம் நடக்க, அதுவும் முறிந்து போகிறது. கடேஜாவாக நடித்திருக்கும் தனு ஶ்ரீ, ஒரு இசுலாமிய போராளிப்பெண்ணாக வருகிறார். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் சுய உரிமையின் உச்சக்கட்டமாக இருந்து பெண்ணடிமைத்தனம் இங்கில்லை என்று உரைக்கிறார்.

படத்தின் சுவராசியத்திற்குள் ரசிகன் செல்லும் வரை, ஹபீபிக்குள் அவனை கட்டிப்போடும் கதாபாத்திரம் சாச்சா சாலியா பீவி யாக வரும்  அனுஶ்ரேயா ராஜன் தான் என்று சொன்னால் மிகையல்ல. அவரது அழகு, ஆற்றாமை, கோபம், தவிப்பு, பாசம் என்று படம் முழுவதும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

எதுக்கு, யூசுப் கதாபாத்திரத்திற்கு கஸ்தூரிராஜா என்று தான் படம் ஆரம்பிக்கும் போது தோன்றும். ஆனால், போகப்போக முதல் மரியாதை 2 என்கிற அளவிற்கு சிறப்பாக நடித்து நம்மை வியக்க வைத்திருக்கிறார்.

கைத்தறி,  காக்குழி என்கிற  கால்குழி  ஐ மூடுவதிலிருந்து  மனிதர் நடைப்பிணமாக ஆகிவிடுகிறார்.

VS முகமது அமீன், வட்டார வழக்குகளையும் தமிழ் இஸ்லாமியர்களின் வாழ்வியலையும் அற்புதாக எழுத அதனை இம்மி பிசாகாதவாறு இயக்கியிருக்கிறார் மீரா கதிரவன்.

சாம் சிஸ் இன் இசை இந்தப்படத்தில் ஒரு மேஜிக் நிகழ்த்தியிருக்கிறது.

இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது, ஹபீபிக்கு கிடைக்கும், கிடைக்க வேண்டும்.