3BHK

mysixer rating 4/5

159

a K.Vijay Anandh review

என்னடா இது இந்தவாரம் விஜய்சேதுபதி மகனுக்கும் சித்தார்த் மகனுக்கும் போட்டியா ..? அது சரி சினிமால தான் ஒருத்தரோட மகன் அவரை மாதிரியே இருப்பான், நிஜத்திலுமா..? என்றெல்லாம் நினைக்கத்தோன்றும் , சரத்குமார் – தேவயானியின் மகனாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவனாக சித்தார்த்தை பார்த்த போது அப்படித்தான் தோன்றியது. அப்புறம் , இயக்கு நர் ஸ்ரீகணேஷிடம் இது என்ன..? ஏ ஐ யா..? என்று கேட்டபோது, இல்லை, டயட் பிட்னெஸ் இல் எல்லாம் கவனம் எடுத்து  சித்தார்த் அப்படி தன்னை மாற்ற்றிக்கொண்டார் என்று கூறினார். அவர் மட்டுமல்ல, சரத்குமார், தேவயானி ஆகியோரும் 2007 முதல் 2027 வரையிலான ஒரு 20 ஆண்டுகால  வயது மூப்பு காலகட்டத்தை மிகவும் சிரத்தையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அப்படின்னா சித்தார்த் தங்கையாக நடித்திருக்கும் மீத்தா ரகுநாத்..? பாவடை சட்ட்டையில் அண்ணனுடன் வம்பிழுக்கும் காலகட்டம் முதல், கல்யாணம் பண்ணி – கணவனை பாட்டிலால் போட்டு தாக்கிவிட்டு , ஒரு குழந்தையோடு பிறந்த வீடு திரும்பும் காலகட்டத்தை வெறும் உடையலங்காரம் மற்றும் முதிர்ச்சியான நடிப்பின் மூலமே காட்டி அசத்திவிடுகிறார்.

சரத்குமார், இளமையும் ஆரோக்கியமும் இருக்கும் போது  ஒவ்வொரு தடவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.. நான் இருக்கேன்ல… என்பதும்… ஒரு கட்டத்திற்கு பிறகு, மகன் சித்தார்த்தை பார்த்து என்னை மாதிரி ஆகிடக்கூடாது… என்று உடைவதுமாக ஒவ்வொரு அப்பாக்களையும் கண்முன் கொண்டுவந்திருக்கிறார், அது சரி இவர் ஏற்கனவே தமிழகத்தின் சித்தப்பாவாயிற்றே!  அந்த சித்தப்பாவும், சித்தாவும் சேர்ந்து இந்தப்படத்தை சிறப்பான ஒன்றாக்கியிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நாயகி சைத்ரா ஆச்சார், சித்தார்த்தின் பள்ளித்தோழியாக சீருடை அணிந்துகொண்டும், 34 வயதில் புடவைக்கடை சீருடையுடனும் அட்டகாசமாக கதாபாத்திர முதிர்ச்சியை கொண்டுவந்து விடுகிறார்.

3 படுக்கையறைகள் கொண்ட வீடு வாங்கவேண்டும் என்கிற கனவோடு பயணிக்கும் நடுத்தரவர்க்க குடும்பம். அப்பா சரத்குமார் மட்டும் தான், சம்பாதிப்பவர். மகனும் மகளும் பள்ளி செல்கிறார்கள். வீட்டில் அனைவரையும் அன்புடன் கவனித்துக்கொள்ளும் அம்மா.

ஏழரை லட்சம் சேமித்தால், வீட்டின் விலை 15 லட்சம் ஆகிவிடுகிறது. சரி இரண்டு வருடங்களில் சேமித்துவிடலாம் என்றால், மகனின் மேற்படிப்பு மகளின் திருமணம் என்று பணத்தேவைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. வீட்டைவிட குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம் என்று நினைக்கும் , அனைத்து வீடுகளிலும் இருக்கும் நல்ல அப்பாக்களை நினைவு படுத்துகிறார் சரத்குமார்.

அவர் காலகட்டத்தில், அவர் பார்க்கும் வேலைக்கு வீட்டுக்கடன் கிடையாது. ஆனால், ஐடி வேலை பார்க்கும் சித்தார்த்திற்கு பேங்கில் அழைத்து லோன் கொடுக்கிறார்கள். அவர்களை லோனில் சிக்கவைத்து ஈ எம் ஐ கட்டவதற்காகவே வாழ் நாள் அடிமையாக வைத்திருக்கும் கோரமுகத்துடன் ஐடி உயரதிகாரிகள். இதிலிருந்து தப்பித்து தனக்கு பிடித்த வேலையைச் செய்து , அப்பாவின் கனவை நிறைவேற்றுகிறார் சித்தார்த்.

நம்மூரில் பெரிய சதவிகிதத்தில் இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின்  வாழ்வியலை கண்முன் கொண்டுவந்து, அவர்களின் சோகங்களையும் தோல்விகளையும் மட்டுமே காட்டிக்கொண்டிருக்காமல், ஒவ்வொரு முறை அவர்கள் துவண்டு போகும் போது  தன்னம்பிக்கையுடன் எழுந்து ஜெயிப்பதையும் காட்டி ஒரு நேர்மறையான படமாக இந்தப்படத்தை கொடுத்திருக்கும் ஸ்ரீகணேஷிற்கு பாராட்டுக்கள்.

இது ஒரு சாதாரண குடும்ப படம், குடும்ப கதை என்று நினைத்துவிட முடியாத அளவிற்கு, 20 வருட காலமாற்றத்தை ஒவ்வொரு நடிகர்களும் பெரிதும் மெனக்கெட்டு, ஒப்பனை மற்றும்  வயதிற்கேற்ற நடிப்பு மற்றும் உடல்மொழிகளுடன்  ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை எடுத்திருக்கிறார்கள்.

3 பி ஹெச் கே நடிகர்களுக்கு மரியாதை!