மதராஸி

mysixer rating 4.5/5

221

a K. Vijay Anandh review

மதராஸி மேஜர் முகுந்தாக அமரனில் எல்லைக்கு வெளியே இருக்கும் வில்லன்களை வேட்டையாடிய சிகார்த்திகேயன், இதில் மதராஸி ரகுராமாக உள்ளூர் வில்லன்களை வேட்டையாடுகிறார்.  முன்னதிலாவது அவர் ஒரு ராணுவவிரர், இதில் போலீஸும் இல்ல, என் ஐ ஏ அதிகாரியும் இல்ல, ஆனாலும், சம்பந்தமே இல்லாமல், உள்ளே புகுந்து வெறித்தனம் பண்ணுவதான் இந்தப்படத்தின் சுவராஸ்யமான திரைக்கதை. ஏ ஆர் முருகதாஸ் அதில் மாஸ்டர் ஆகிற்றே! இவரது பார்வையில் யோசித்தால் இந்தப்படத்திற்கு துப்பாக்கி 2 என்று கூட டைட்டில் வைக்கலாம்,

25 வருடங்களுக்கு முன்னால் எங்கோ ஒரு மூலையில் ஒன்றிரண்டு பேர்  சாராயம் குடிக்கும் நிலை மாறி, இன்று அது ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது போல, ஆளாளுக்கு துப்பாக்கி தூக்கும் கலாச்சாரம் நம்மூரில் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அதை, சிலரது விருப்பத்தின் பேரில் செயல்படுத்த துடிக்கும் வித்யூத் மற்றும் சபீர் ஆகியோரை வேட்டையாட களமிறங்கும் என் ஐ ஏ. நடுவில் , சிவகார்த்திகேயன் எப்படி உள்ளே வருகிறார் என்பதிலிருந்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான ஆக்‌ஷன் கமர்ஷியல் மசாலாவாக இந்தப்படத்தை கொடுத்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.

வழக்கம்போல பட்டையைக்கிளப்பும் இடைவேளை காட்சி. அப்பாவியாக, வில்லன்களையும் என் ஐ ஏ அதிகாரியையும் கான் காலில் இணைக்கும் சிவகார்த்திகேயன் என்று சீட் நுனியில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.

ஒரு நடிகராக,  முழுமையான ஒரு மாஸ் அவதாரம் எடுக்க இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பை அவர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.  தன் கண்முன்னே அப்பா, அம்மா, அத்தை , மாமா, தாத்தா, பாட்டி என்று ஒட்டுமொத்தமாக அத்தனை சொந்தங்களையும் பறிகொடுக்கும் பிளாஷ்பேக் காட்சி,  16 வருடங்களாக தொடர்ந்து வரும் அதன் தாக்கம், அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகியை தூக்கிக்கொண்டு ஓடுவது வரை தொடர்வது, வித்தியாசமான திரைக்கதை.

இனிமே இப்டித்தான் என்று சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் பேசுவார், அதுவே அவரது படங்களுக்கும் பொருந்தும். இனிமே இவர் மாஸ் ஹீரோ தான். காதலிச்சாலும், காமெடி செஞ்சாலும், ஆக்‌ஷன் செஞ்சாலும்!

வித்யூத் மற்றும் சபீர் மிரட்டியிருக்கிறார்கள். இருவருடனான சிவகார்த்திகேயன் போடும் துப்பாக்கிச்சண்டை முதல் , கிளைமாக்ஸில் வித்யூத்துடன் மோதும் சண்டைக்காட்சிகளும் ரசிகர்களுக்கு பெரிய விருந்து. அமெரிக்கா இஸ் கான், அப்படின்னா ஹாலிவுட்டும் தானே! ஹாலிவுட் எப்பொழுது காணாமல் போய்விட்டது.  ராஜமெளலி படங்கள் முதல் போனவாரம் வெளியான லோகா வரை ஹாலிவுட்டா போய் ஓரமா போய் விளையாடுங்கப்பா என்று ரசிகர்களை சொல்ல வைத்துவிட்டது. அதன் நீட்சியாக, ஆக்‌ஷன் அதிரடியில் மதராஸி இணைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.  மதராஸி படத்தின் சண்டைப்பயிற்சியாளர்களுக்கு ஒரு சபாஷ், சண்டை கலைஞர்களுக்கும் !

பிஜு மேனன் அப்பாவாகவும், விக்ராந்த் மகனாகவும் ஒரே நேரத்தில் என் ஐ ஏ வில் பணிபுரிவதும் ஒரே அபரேஷனில் பங்குகொள்வதும் புதுமை. இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, விக்ராந்த், ஒரு கண்ணியமும் வீரமும் நிறைந்த அதிகாரியாக முத்திரை பதித்திருக்கிறார். அதே குழுவில் இருக்கும் ரிஷி ரித்விக்கும் சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

ருக்மணி வசந்த், பல் மருத்துவ மாணவியாக வந்து, சிவகார்த்திகேயனை காதலித்து, வழக்கம் போல ஏ ஆர் முருகதாஸின் டிரேட் மார்க் நாயகி கதாபாத்திரங்களைப் போலவே சவாலான ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மதராஸி, அதிரடி ஆக்‌ஷன் விருந்து !