மெஸஞ்ஜர்

mysixer rating 3/5

183

a K Vijay Anandh review

எத்தனை பேர் கூட வேண்டுமானாலும் பிரேக் ஆகலாம். ஆனால் மனைவி என்று வந்துவிட்டால், ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் அவள் ஒருவள் தான் என்கிற கருத்தை, மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், வித்தியாசமாகவும் பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.

பிரேக் அப் ஆகி காயம் பட்ட இதயத்திற்கு பேஸ்புக் மூலம் மருந்து தடவும், ஆனந்தியுடன் காதல் வயப்படுகிறார்  சக்திவேலன். சரி இவள் தான் நமது வாழ்க்கை துணை என்று முடிவு செய்யும் பொழுது அவள் உயிரோடு இல்லை.

அவளுடன் மெசேஞ்சரில் மட்டுமே தொடர்பு கொண்டிருப்பதால் அதே மெசஞ்சர் மூலமாக இறந்தவள் அவனை தொடர்பு கொள்கிறாள். அவனது நம்பிக்கைக்கு அவனது அம்மா உள்ளிட்டவர்கள் ஒத்துப் போகிறார்கள்.

இறந்து ஆவியாக இருப்பவர்களுடன் திருமணம் என்பதே ஒரு வேடிக்கையான ஒன்று, 10 மாதத்தில் அவளுக்கு குழந்தை பெற போகிறது என்று சொல்வது அதைவிட வேடிக்கையானது தானே! ஆனால் அதற்கு விஞ்ஞான ரீதியாக மிகச் சரியான தீர்வு கொடுத்து, ஆனந்தியுடன் குழந்தை பெற்றுக்கொள்கிறான் சக்திவேலன். நம்ப முடியாத வகையில் காட்சிகளை நகர்த்தி கொண்டு போய் கடைசியில் அறிவியல் பூர்வமாக இதுதாண்டா என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர்.

நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்,  ஏற்றுக்கொண்ட ஐடி ஊழியர் கதாபாத்திரத்திற்கும், இறந்த பெண்ணுடன் மெசேஞ்சரில் காதலிக்கும் காதலன் கதாபாத்திரத்திற்கும் அட்டகாசமாக பொருந்தி போகிறார். என்னதான் பாத்திமா நகும் உடைய ஆவி, வைஷாலி ரவிச்சந்திரன் உடம்பில் இறங்கினாலும்,  உடலுறவுக்கு கூட இன்னொரு உடல் தேவை இல்லை என்று தவிர்க்கும் காட்சிகளில் ஆச்சரியப்பட வைக்கிறார்!

பாத்திமா நகும், கிராமத்து அழகியாக மிகவும் இயல்பாகவும் அப்பாவியாகவும் நடித்து ரசிகர்களை கவர்கிறார். அவருடைய தோழியாக வரும் வைஷாலி ரவிச்சந்திரனும், துறுதுறுவென்று அருமையாக நடித்திருக்கிறார்.

ஸ்ரீராம் கார்த்திக்கின் முன்னாள் காதலியாக வரும், மனிஷா ஸ்ரீ , நடுவிலேயே பிரேக்கப் ஆன காதலி என்றாலும் கடைசி வரை அவரது கதாபாத்திரத்தை கொண்டு போன விதம் அருமை அவரும் அட்டகாசமாக பொருந்தி இருக்கிறார்.

லிவிங்ஸ்டன் மற்றும் ஜீவா ரவி ஆகியோர், நடிப்பில் தங்களது அனுபவ முத்திரைகளை அழுத்தமாக பதித்திருக்கிறார்கள்.

அபூபக்கரின் இசை பாலகணேசனின் ஒளிப்பதிவு  மெசஞ்ஜரை ஒரு நேர்த்தியான படமாக ஆக்கி இருக்கின்றன. எடிட்டர் பிரசாந்த் ஆரின் மாயஜாலம் ஒரு புள்ளியில் இந்த படத்தை தூக்கி நிறுத்துகிறது.

சிறிய பட்ஜெட் படங்கள் பிரபலமாகாத நடிகர்கள் என்றாலும் நல்ல கருத்துக்களை சொல்லும் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ்.

அந்த வரிசையில்,

நிரந்தரமான துணையாக இருப்பதற்கு உடல் பிணைப்பு தாண்டி உள்ள பிணைப்பு இருந்தால் போதும் என்கிற மெசேஜை  சொல்லி இருக்கிறது இந்த மெசஞ்சர்.