தி ராஜா சாப்

mysixer rating 3.5/5

45

a K Vijay Anandh review

வேதபுரி அரசியின் பேரன் என்றால் அவர் வேதபுரி அரசின் இளவரசன் தானே!

பிரபாஸுக்கு மற்றும் ஒரு அற்புதமான கதாபாத்திரம் மற்றும் கதைக்களம். பாட்டி பொறுப்பிலிருந்த, துர்க்கை அம்மனுக்கு சொந்தமான ஆபரண பெட்டி திருடு போன நிலையில் அதை எடுத்துச் சென்றது யார் ..? பாட்டியை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தாத்தா, எங்கே இருக்கிறார் என்கிற தேடுதல் பயணம் பிரபாஸுக்கு.

வழித்துணையாக மட்டுமல்ல, காதலாகவும் இருவர் உடன் வருகிறார்கள். நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போன்ற அழகு.

நிதி அகர்வால், இவருக்கு தனியாக தேவதை கிட்டப் எல்லாம் போட வேண்டாம் சாதாரணமாக நடந்தாலே தேவதை போல தான் இருக்கிறார்.

மாளவிகா மோகனன் ஒரு படி மேலே சென்று ஆக்சன் காட்சிகளில் அதகளப்படுத்துகிறார்.

பிரபாஸ், தனது தாத்தா சஞ்சய் தத் மாளிகைக்குள் சிக்கிக் கொண்ட பிறகு நடக்கும் காட்சிகள் கிராபிக்ஸ் மற்றும் மயிர் கூச்செரியும் ஆக்சன் நிறைந்த காட்சிகள்.

உண்மையில், படம் முழுவதும் கொஞ்சம் பொறுமையாக சகித்துக் கொண்டு அமர்ந்திருந்தால் இரண்டாவது பாதியில் அதிலும் கிளைமாக்ஸுக்கு நெருக்கமான காட்சிகளில், அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் இயக்குனர் மாருதி ரசிகர்களுக்கு மாயாஜால விருந்து அளித்திருக்கிறார்.

விடிவி கணேஷ், பிரபாஸின் நெருக்கமான காவல் அதிகாரியாக படம் முழுவதும் அவருடன் பயணித்து அவ்வப்பொழுது சிரிப்பு மூட்டவும் செய்கிறார்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், நம்ம ஊர் அம்மு அபிராமி தான் பிரபாஸின் இளவயது பாட்டி, அவருக்கு ஜோடி சஞ்சய் தத் .சஞ்சய் தத் – அம்மு அபிராமி காம்பினேஷன், அற்புதம்.

தி ராஜா சாப், படத்தை முழுக்க முழுக்க பேய் மற்றும் மாந்திரீகம் என்று எடுக்காமல், சைக்காலஜிக்கல் ரீதியாக கையாண்டு சஞ்சய்தத் செய்யும் அற்புதங்கள் அறிவியலுடன் ஒத்துப் போகின்றன, ஆகவே பெரிய அளவில் லாஜிக் ஓட்டைகள் ஏதுமின்றி, படத்தை ரசிக்க முடிகின்றது அதுவே இந்த படத்தின் ஒரு பிளஸ் பாயிண்ட்.

தி ராஜா சாப், பொழுதுபோக்கு விருந்து!