பராசக்தி

mysixer rating 4/5

346

a K. Vijay Anandh review

பராசக்தி, இன்றைய திராவிட மாடல்  மு.க.ஸ்டாலின் அரசின் , ”அரசுப்பள்லிகளில் இருமொழிக்கல்விக்கொள்கை மட்டுமே , மூன்றாவது மொழிக்கு இடமில்லை, குறிப்பாக ஹிந்திக்கு இடமில்லை..” என்கிற உறுதியான கொள்கைக்கு , தமிழகத்தில், அன்றைய காங்கிரஸின் நேரு தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக 1960 களில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை மீண்டும் நினைவுபடுத்தி பயன்படுத்திக்கொள்கிற ஒரு திரைப்பிரச்சாரம்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்..

ஒன்று, எந்த ஒரு மொழி அழிந்தாலும், அச்சமூகம் அழிந்துவிடும், பிறமொழிகளைக்கற்றுக்கொண்டு தாய்மொழியை மறந்து விட்டு பிழைத்திருந்தாலும், அச்சமூகம் அழிந்துவிட்டதற்கு சமமே!

ஆகவே, தாய்மொழிகள் காக்கப்பட வேண்டும். அதுவே தமிழாக இருப்பின், சந்தேகமே இல்லாமல் தன்னுயிரைக்கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும், பராசக்தி படத்தில், சிவகார்த்திகேயன் தன்னுயிருக்கு நிகரான தனது தம்பி அதர்வாவைப் பறிகொடுத்து தமிழைக்காத்து நிற்கிறார்.

சரி தமிழ் ஏன் காப்பாற்றப்படவேண்டும், அது தான் உலகின் மூத்தமொழி, அது தான் இலக்கண இலக்கியச்செழுமை கொண்ட மொழி, அது தான் இறைவனையே காத்த மொழி, இறைவனாலேயே சங்கம் அமைத்து காப்பாற்றப்பட்ட மொழி!  மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல மொழிகளுக்கே அது தான் தாய்மொழி, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை கூட அதை உணர்ந்துதான் என்னவோ “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்று பலவாகிடினும்..” என்று தமிழை போற்றி பாடியிருக்கிறார்.

இரண்டாவது, 1200 ஆண்டுகளாக அந்நிய தேசத்தவர்களால்  அடிமைப்பட்டுக்கிடந்து ஒருவழியாக 1947 இல் நமக்கான சுதந்திர தேசத்தை உருவாக்கியபோது, இந்த தேசத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதக்கூடிய இடத்தில் இருந்தவர்கள் குறிப்பாக ஜவர்ஹலால் நேரு,  பல ஆயிரம் மொழிகள் பேசும் இனக்குழுக்கள் இருக்கும் இந்தியாவிற்கென அனைத்து மொழி இனங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க சரியான ஒரு மொழிக்கொள்கையை வகுக்காமல், தங்களுக்குத் தெரிந்த ஒரு மொழியை இந்தியாவின் ஒட்டுமொத்தமான மொழி ஆக்கவேண்டும் என்கிற அன்றைய நேரு தலைமையிலான ஒன்றிய காங்கிரஸ் துடித்ததன் எதிர்வினை தான், தமிழகத்தில் தமிழக மாணாக்கர்களால் தோற்றுவிக்கப்பட்ட மொழிப்போர்.

படம்…

உணர்ச்சித்தூண்டல்கள் இல்லாமல், காரணகாரியங்களும் நிறைந்த அந்த மொழிப்போரை மிகவும் நேர்மையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. எந்தளவுக்கு நேர்மையாக என்றால், அன்று ”மாணவர்களால் நடத்தப்பட்ட மொழிப்போருக்கு, நான் காரணமல்ல…  அதற்கு பின்னாலும் நாங்கள் இல்லை… “ என்று முன்னாள் முதல்வர் – அவர் முதல்வர் ஆவதற்கு முன்னரே – சி என் அண்ணாத்துரையே வாக்குமூலம் கொடுக்கும் அளவிற்கு நேர்மையாக பதிவு செய்திருக்கிறார், உண்மையில் அது பாரட்டத்தக்க ஒன்று!

புறநானூற்றுப்படைத்தலைவன் செழியனின் ஊர் மதுரையாக காட்டப்பட்டிருப்பதும், மதுரை காங்கிரஸ் அலுவலகத்தை கண்ணகி எரித்திருப்பாரோ என்பன போன்ற வசனங்களும் மிக மிக சுவராஸ்யமான விஷயங்கள்.

புறநானுற்று படைத்தலைவனாக  1960 களின் செழியனாக சிவகார்த்திகேயன்,  தனது பேச்சு, உடல்மொழி, ஒப்பனை மற்றும் ஆடைகள் என்று அசத்திருக்கிறார்.  பாட்டி மற்றும் தம்பிக்காக,  தான் ஆரம்பித்த மொழிப்போரிலிருந்து தற்காலிகமாக விலகி நிற்பதும், பின்பு தென்னாப்பிரிக்காவில் இரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தி,  இந்திய விடுதலைக்காக களமிறங்கியதைப்போல – இரயில்வேயில் டி டி ஆர்  வேலை கிடைக்காத – அதற்கு உனக்கு இந்தி முழுமையாக தெரியவில்லை என்கிற காரணம் சொல்லப்பட – இப்படி எத்தனை பேர் திறமையிருந்தும் இந்தி தெரியாத காரணத்திற்காக வேலை மறுக்கப்படுகிறார்கள் என்கிற ஆத்திரத்துடன் – கண்முன்னே இரயில் நிலையத்தில் தீக்குளித்த மாணவனைப்பார்த்த பயம் , எல்லாமுமாகச் சேர்ந்து மறுபடியும் போர்க்களத்திற்கு வரும் காட்சிகள் அற்புதம்.

பராசக்தி, மிகவும் உணர்வுப்பூர்வமான படமாக இருக்கவேண்டிய களம் என்பதால், தனது வழக்கமான நகைச்சுவைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டாலும், தனது பாட்டியிடம் முதியோர் கல்வி கற்கச்செல்லும் மாணவிப்பாட்டிமார்களைப் பார்த்து, ஒழுங்கா படிக்கனும் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச்செல்லும் காட்சி, ஒரு சிறு நகைச்சுவைக்கவிதை!

சிவகார்த்திகேயன் அதர்வாவைச் சந்திக்கும் காட்சி,  இருவரும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு, நீ இனிமேல் போராட்டம் அது இது என்று படிப்பை கோடைவிடக்கூடாது என்று சத்தியம் வாங்கும் காட்சி,  அந்த சில நிமிடங்களில் தனது குருநாதர் இயக்கத்தில் வெளிவந்த அக்னி நட்சத்திரம் என்கிற  முழுப்படத்தையும் பார்த்த திருப்தியை கொடுத்துவிடுகிறார் சுதா கொங்கரா!

ஒரு முழு நீள பொழுதுபோக்கு ஆக்‌ஷன் அதிரப்படமாக 1000 கோடி வசூல் செய்யும் படமாக 25 வது படம் அமைவது எளிது, ஆனால், ஒரு மொழிப்போரில் ஈடுபடும் புற நானூற்றுப்படை தலைவனாக மைல்கல் என்று சொல்லப்படும் எண்ணிக்கையான 25 ஆவது படம் அமைவது அரிது. அதனைக் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு அமரனுக்குப் பிறகு அற்புதமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள்!

ரவி மோகன், திருநாடன் என்கிற காவல்துறை உயரதிகாரி கதாபாத்திரத்தில்,  அன்றைய நேரு தலைமையிலான ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவுகளை ஈவு இரக்கமின்றி தமிழர்கள் மத்தியில் பிரயோகித்து, இந்தித்திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கும் மாணவர்களை ஒடுக்கும் அதிபயங்கரமான கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருக்கு,  சாதாரண தமிழனை விட தமிழின் அத்தனை வடிவங்களும் தெரியும்,  அப்பாவும் தமிழன், அந்த வகையில் அரை தமிழனாக இருந்தாலும், அவரது ஆப்ரேஷனில்  மொழிப்பாசத்தால் கடமை தவறி போராட்டக்காரர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளைப் போல் அல்லாமல், அன்றைய ஒன்றி அரசுக்கு 100% கீழ்ப்படிந்து கடமயை மட்டுமே செய்யும் கம்பீர அதிகாரியாக  தனது கதாபாத்திற்கு உயிரூட்டிருக்கிறார். இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான, இரயிலில் நடைபெறும் சண்டைக்காட்சிகள் அற்புதம்.

அதர்வா, மறுபடியும்  அக்னி நட்சத்திர இளவலான நவரச நாயகனை நினைவுபடுத்தும் துறுதுறுப்பான கதாபாத்திரம், சின்னத்துரையாக சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனைச் சீண்டும் காட்சிகளும், அண்ணனுக்குள் இருக்கும் ரத்ன மாலா மீதான காதலை வெளிப்படுத்த உதவும் காட்சிகளும் , போராட்டக்களத்தில் பரிமாறப்படும் சிற்றுண்டி ரகம்!

ஸ்ரீலீலா, இந்தப்படத்திற்காக கதாநாயகன் உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களைத் தனது பேனாவால் எழுதிய சுதா கொங்கரா, ரத்ன மாலா என்கிற ஸ்ரீலீலா கதாபாத்திரத்தை மட்டும் தனது குளோனிங் ஆகவே படைத்துவிட்டார் போலும்! அந்தளவிற்கு, ஸ்ரீலீலா வின் கதாபாத்திரம் கொள்ளை அழகு அத்துடன் கொள்கைக்கு உயிர்கொடுக்கும் அறிவு என்று மிகச்சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது. ரத்ன மாலாவாக, ஸ்ரீலீலா, அன்றைய காலகட்டத்து பேரழகிகளின் பிரதிநிதியாய் ஒத்த ஆளாய் ரசிகர்களைக்கட்டிப்போடுகிறார். இருவருமே, அதாவது அதர்வாவும் , சிவகார்த்திகேயனுமே ஸ்ரீலீலா காரில் ஒரே மாதிரி துள்ளிக்குதித்து ஏறுகிறார்கள். ஆனால்,  சிவகார்த்திகேயன் மட்டுமே ஸ்ரீலீலாவின் மனதிலும் ஏறுகிறார், அதாவது காதலனாக குடியேறுகிறார். இவர் நடக்கிறாரா..? ஆடுகிறாரா..? அத்தனையும் மான் போல இருக்கிறது.  அந்தப்பாட்டில், அவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அரங்கேற்றும் நடனம், அடடா!  நடன அமைப்பாளருக்கு பாராட்டுக்கள் !

முன்னாள் முதல்வர்கள் சி என் அண்ணாத்துரை மற்றும் மு.கருணாநிதியாக நடித்த சேத்தன் மற்றும் குரு சோமசுந்தரம் கச்சிதம்!

இந்தி எதிர்ப்பை அடக்கும்  அன்றைய ஒன்றிய அரசின் தமிழ முகமான , மெட்ராஸ் ஸ்டேட் முதலமைச்சராக  நடித்திருக்கும், பிரகாஷ் பெல்லவடியும் அருமை!

சிவகார்த்திகேயன் – அதர்வாவின் அப்பத்தாவாக நடித்திருக்கும், குலப்புல்லி லீலா பாட்டியும், தமிழ்க்குலப்புலியாக  சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட தபால் நிலையக்காட்சி அற்புதம்.

காளி வெங்கட் குறிப்பாக இந்திராகாந்தியாக நடித்தவர் உள்ளிட்ட  அனைவரும்தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

புறநானூற்றுப்படையில்  மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் வங்காளமொழி பேசுவோர் என்று அனைவரும்  இந்தி திணிப்புக்கான தமிழர்களின் மொழிப்போருக்கு ஆதரவாக துணை நிற்பதாக  காட்டிருக்கிறார்கள். இந்த ஒற்றுமை ஏன் இன்று வரை தொடரவில்லை என்பது ஒரு கேள்விக்குறி!  மலையாளிகளுடன் முல்லைப்பெரியாறு மற்றும் மருத்துவக்கழிவுகள் , கன்னடர்களுடன் காவிரி மற்றும் சமீபத்தில் தக் லைஃப் வெளியீட்டுப்பிரச்சினை என்று பல களையப்பட்டிருக்கலாம் !  அதிலும் குறிப்பாக  இளவயது மம்தா பானர்ஜி போன்று வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாப்ரி கோஷ், வங்காள மொழியில் பாடவும் செய்கிறார், அது இன்றைய மம்தா போல ஹம்ப ஹம்பா.. ரங்க ரங்க.. கம்பகம்பா… தும்பாதும்பா… பும்பாபும்பா… பம்பாபம்பா…என்று இல்லாமல் இருப்பதால் ரசிக்கமுடிகிறது.

தொழில் நுட்ப ரீதியாக…

ஜீவி பிரகாஷ்குமாரின் இசையில் அமைந்த அத்தனை பாடல்களும் அருமை.  ஆர்ட் டைரக்டர் மற்றும் ஆடை அலங்கார இயக்குநர் ஆகியோருக்கு சிறப்பான பாராட்டுகள். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு அருமை என்றாலும், வறட்சியில் புரட்சியாவது ஒன்றாவது என்கிற வசனத்திற்கும் அவர் காட்டியிருக்கும்  பசுமையான செழுமையான தமிழகத்திற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது ஒரு குறை!

முடிவுரை:

மொழிப்போர் என்கிற களத்தை மையமாக வைத்து பல நூறுகோடி செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்திருக்கும் பராசக்தி படத்தின் நிஜமான வெற்றி என்பது, அது குவிக்கப்போகும் வசூல்களில் அல்ல…

தமிழ் மொழியை காப்பாற்றவே இந்தித்திணிப்புக்கான போராட்டம் என்பது உண்மையானால், அந்தப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல நூறு  தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழர்களின்  தியாகத்தை  மதித்து,  அதற்காகவே, அன்றைய திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்கிற இருமொழிப்பாடத்திட்டம் மட்டுமே  என்று அன்றைய முதலமைச்சர் சி என் அண்ணாத்துரை எடுத்த  கொள்கை  முடிவு சரியானது என்றால்,  அது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் அனைத்துப்பள்ளி மாணவர்களுக்கும் என்பதை உறுதிசெய்யவேண்டியது திமுக சார்பாக இன்றைய முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினின் தலையாய கடமை. அதுவே, பராசக்தி திரைப்படத்தின் நிஜமான வெற்றியாக இருக்க முடியும் !

அந்தவகையில், ஒரு  திரைப்படத்தின் வெற்றி நேரிடையாக ஒரு அதிகார மட்டத்தின் வெற்றியுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றால், அதுவே பராசக்தி திரைப்படத்தின் தனித்துவத்தை காட்டுகிறது.  தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன், வெளியிட்ட இன்பன் உதயநிதி ஆகியோருக்கும் பாராட்டுகள்.