a K Vijay Anandh review
பிப்ரவரி 13, பாலு மகேந்திராவின் நினைவு நாள். அதே நாளில் . மிகவும் ஏதேச்சையாக வெளியாகியிருக்கும் மைலாஞ்சி, அவரை, அவரது படங்களை நினைவுபடுத்துகிறது.
குறிப்பாக இந்தப் படம் மூன்றாம் பிறை படத்தை நினைவுபடுத்துகிறது.
அந்தப் படத்தில் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக அதாவது குழந்தை தனமான ஸ்ரீதேவி. இந்தப் படத்திலும், குழந்தைத்தனமான க்ரிஷா குருப. இதைத்தவிர படத்தின் கதைக்களம் மலைப் பாங்கான இயற்கை எழில் கொஞ்சம் காடுகள், நீரோட்டங்கள் அவற்றை பாலுமகேந்திரா போன்று படம் பிடித்து இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியன் என்று எல்லாமுமாக சேர்ந்து பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை கொடுத்த அனுபவத்தை மைலாஞ்சி நினைவுபடுத்துகிறது.
இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் அஜயன் பாலா, தீவிர இடதுசாரியும் அல்ல, வலது சாரி என்றும் சொல்லிவிட முடியாது, ஆனாலும் இந்த கதையை எழுதி இயக்கிய விதத்தில் ஒரு நேர்மையான இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தனது சொத்துக்களை அபகரிப்பதற்காக தனது குடிகார தம்பிக்கு தன்னை மணமுடிக்க திட்டமிடும் சித்தியிடமிருந்து தப்பிப்பதற்காக, கதாநாயகி சுட்டித்தனமான சிறுவன் ஒருவனிடம் ஆலோசனைகள் கேட்கும் இடங்கள் அருமை. அந்த சிறுவன் அருமையாக நடித்திருக்கிறான்.
நாயகி மலைப்பாங்கான இடங்களில் சைக்கிளில் வருவது, சிறுவனுடன் உட்கார்ந்து பேசும் இடங்கள் என்று காட்சிக்கு காட்சி அழகாக இருக்கிறது.
க்ரிஷா குருப், மிகவும் தேர்ந்தெடுத்து நல்ல கதைகளில் அழகாக பொருந்திப் போகிறார். தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு மூடநம்பிக்கை இருந்தது அந்த மூடநம்பிக்கையை தகர்த்து திறமை தான் ரசிகர்களை ரசிகரிக்கும் ஆயுதம் என்ற நிரூபித்த நடிகைகளுள் இவரும் ஒருவர்.
சிரிக்கும் பறவையைத் தேடி ஊட்டிக்கு வரும் ஸ்ரீராம் கார்த்திக், புன்னகை பூக்கும் கிரிஷா குருப்பிடம் மனதை பறி கொடுப்பது அழகான கவிதை. ஸ்ரீராம் கார்த்திக், கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இவரை காதலிக்கலாம் என்று முடிவு செய்ய அவரோ, தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று இன்னொருவரை காதலிப்பதாகச் சொல்ல, உடைந்து போகும் இடங்களில் ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இறுதியில் இவர்கள் காதல் என்ன ஆகிறது என்பதை சுவாரசியமான கிளைமாக்ஸ் இல் அஜயன் பாலா அற்புதமாக காட்டியிருக்கிறார், கதையையும் சிறப்பாக முடித்து வைக்கிறார்.
முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி கதாபாத்திரங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
முன்பே சொல்லியிருப்பது போல, அஜயன் பாலா மற்றும் செழியன் ஆகியோரின் பங்களிப்புகள் இந்த படம் பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறையை நினைவு படுத்தினாலும், இளையராஜா இன்னும் கொஞ்சம் அதிகமாக மெனக்கட்டிருந்தால் மைலாஞ்சி, மூன்றாம் பிறையை கூட விஞ்சி இருக்கலாம். பின்னணி இசையும் பாடல்களுக்கான இசையும் இளையராஜாவின் பெயரை சொல்லும் அளவிற்கு இல்லை.
ஆயினும், கதைக்கருவிலும் திரைக்கதை அமைப்பிலும் எந்தவிதமான குறைகளும் சொல்ல முடியாத நேர்மையான ஒரு சிறு கவிதை, இந்த மைலாஞ்சி!





