பூக்கி

mysixer rating 4.5/5

70

a K Vijay Anandh review

முதல் காட்சியிலேயே காதலர்களாக இருக்கும் அஜய் திஷன் மற்றும் ஆர் கே தனுஷா ஆகியோர் எல்லாம் முடிந்து விட்டது, என்கிறார்கள். ஆனால் அதன் பிறகு தான் முழு படமும் தொடர்கின்றது. பொதுவாக, அவர்கள் பிரிந்த பிறகு அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் எப்படி ஒருவரை ஒருவர் ப்ரொபோஸ் செய்து கொண்டார்கள் என்பதாகத்தான் பிளாஷ்பேக் கதை விரியும். ஆனால், முழுக்க முழுக்க அவர்களது பிரேக்கப் ஜர்னி யை மட்டுமே அடுத்தடுத்து  வரும் காட்சிகளாக அமைத்து, மிகவும் வித்தியாசமான திரை கதையை எழுதி இருக்கிறார் புதிய பரிதி, அதனை இம்மியளவும் சறுக்கி விடாமல் இயக்கி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் கணேஷ் சந்திரா.

நாயகனும் நாயகியும் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தங்களது வருத்தங்களை பதிவு செய்வதும், அதனைத் தொடர்ந்து வரும் சுவாரசியமான காட்சிகளும் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

ரஜினி முதல் சிம்பு வரை கடந்த 30 முதல் 60 ஆண்டுகள்  கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் திரைப்பட உலகில், பிரதீப் ரங்கநாதன், அபிஷன் ஜீவித் , இந்த படத்தின் மூலம் அஜய் திஷன் என்று புதிய புதிய மலர்கள் பூப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அஜய் திஷன் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்து விட்டாலும் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி அடுத்த கட்டத்திற்கு தனது நடிப்பு திறமையை எடுத்துச் சென்றிருக்கிறார். மிகவும் இயல்பான ஒரு உதாரண இளைஞராக அட்டகாசமாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.

நாயகி ஆர்கே தனுஷா, இவரும் கொள்ளை அழகு, காதல் , பிரேக் அப் என்று ரசிகர்களையும் இவரது கவலைகள் தொற்றிக்  கொள்ளும் அளவிற்கு, சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரேக்கப்  துயரங்களை மறக்க , விகாஸ் வைப்ஸ், தெளிவு பிறக்கட்டும் ஆசிரமத்துக்கு செல்லும் காட்சிகள் புதிய பொழுதுபோக்கு, குறிப்பாக சுனில் அவரது உடல் மொழிகள் மற்றும் வசன உச்சரிப்புகள் அட்டகாசம்.

அஜயின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா ஆதித்யா கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகல.

நீண்ட நாட்களுக்கு பிறகு நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் பாண்டியராஜன், ஒரு தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் நடுத்தர வர்க்க தகப்பனாக அச்சு அசலாக பொருந்திப் போய் இருக்கிறார்.

பெங்களூரில் வசிக்கும் முறைப்பெண்ணாக, வரும் இன்னொரு கதாநாயகியும் சிறப்பாக நடத்தி இருக்கிறார். அவரிடத்தில் இருந்து அவர் பேசும் வசனங்கள் நியாயமாக இருக்கின்றது.

விஜய் ஆண்டனி இசையில் இவர் எப்பொழுதுமே மாயாஜாலங்கள் செய்பவர் என்றாலும் இந்த படத்தில் எடிட்டிங்கிலும் மாயாஜாலங்கள் செய்திருக்கிறார். வீசி எரியும் மோதிரத்திற்குள், நாயகன் மற்றும் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்து போவது நல்ல ஒரு விஷுவல் . சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

திரைக்கதை ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் கே பாக்யராஜ், நிச்சயமாக அவர் பெருமை கொள்ளும் அளவிற்கு பல இளைஞர்கள் என்று திரைக்கதையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் புதிய பரிதியும் இடம் பிடிப்பார் என்றால் மிகை ஆகாது.

பூக்கி, இளம் மொட்டுக்களின் வாசம்!