சீதா பயணம்

mysixer rating 5/5

68

a K Vijay Anandh review

ஐஸ்வர்யா அர்ஜுன், இந்த படத்தின் கதாநாயகியான இவரது பெயரை சீதா என்று வைத்து. அவரது பயண அனுபவங்களாக திரைக்கதை அமைத்து சீதா பயணம் என்கிற இந்த படத்தை இயக்கியிருக்கிறார் நமது ஆக்ஷன் கிங் அர்ஜுன்.

இவர் தெரிந்து,  இப்படி ஒரு பெயரை வைத்தாரா ?  இப்படி ஒரு கதையை எழுதினாரா..? ராமாயணத்தையொத்த திரைக்கதையை அமைத்தாரா.?  அல்லது எதைச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை.

உண்மையில்,  அர்ஜுன் திரையில் ஒரு ராமாயணம் எழுதியிருக்கிறார்.

இராமாயணத்தில் பல காண்டங்கள் அதாவது பல்வேறு பகுதிகளாக இராமாயணம் இயற்றப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

அதில் சீதா பயணம் என்கிற தலைப்பில் ஒரு காண்டம் அமைந்திருந்தால், கிட்டத்தட்ட இந்த படத்தின் திரைக்கதையை 100% ஒத்துப் போயிருக்கும்.

ஏனென்றால், சீதையின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய  பெரும்பாலான பயணங்கள் அனைத்துமே துயரங்கள் நிறைந்ததாகவே இருக்கும். வடக்கில் அமைந்திருக்கும் நேபாளத்திலிருந்து அயோத்திக்கு தெற்காக பயணப்பட்ட நாள் முதல், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை கரம் பிடித்த மகிழ்வான தருணம் தவிர, அயோத்தியில் இருந்து கானகம் சென்றது, அங்கிருந்து இன்னும் தெற்காக இலங்கைக்கு கடத்தப்பட்டது , மீண்டும் கர்ப்பவதியாக அயோதியிலிருந்து தெற்கு நோக்கி அனுப்பப்பட்டது என்று அவரது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணங்கள் எல்லாமே துயரங்கள் நிறைந்தது.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய பயணங்கள் அனைத்தும் மகிழ்ச்சி ததும்பக் கூடியது.

ஆம், ராவணனை வதம் செய்து, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியுடன் தெற்கிலிருந்து வடக்காக அயோத்தி பயணப்படுகிறார் சீதை. அதன்பிறகு கர்ப்பவதியாக தென்பகுதியில் வால்மீகி ஆசிரமத்தில் தங்கி லவ குச  ஆகிய இரண்டு மகன்களுடன் மீண்டும் ஸ்ரீ ராமனுடன் அயோத்திக்கு பயணப்படும் வடக்கு நோக்கி பயணமும் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இராமாயணத்தை, சீதாவின் பயணம் என்கிற கோணத்தில் பார்த்தால், அர்ஜுன் இயக்கியிருக்கும் சீதா பயணம் இன்னொரு ராமாயணம் என்பதை ஒத்துக் கொள்வார்கள்.

இதிலும்,  சென்னையில் வசிக்கும் தந்தை சத்யராஜுடன் வசிக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் தெற்கு நோக்கி அதாவது மதுரைக்கு கிளம்பி செல்கிறார்.  முன்பே குறிப்பிட்டது போல, வழியில் நாயகன் நிரஞ்சனை சந்திக்கிறார். அவரை  சந்திப்பதால் ஏற்பட்ட  காலதாமதத்தால் காலதாமதத்தால் மதுரையில் மிகப்பெரிய ஒரு தீ விபத்தில் இருந்து தப்பிக்கிறார்.

வீட்டிலிருந்து கிளம்பி நேராக, குறித்த நேரத்தில் அந்த இடத்திற்கு சென்று இருந்தால் ஒருவேளை அந்த தீ விபத்தில் தானும் பலியாகி இருக்கக்கூடும், என்பதை உணர்ந்த ஐஸ்வர்யா வழியில் தனது பயணத்தில் தாமதம் ஏற்படுத்திய ஒவ்வொருவரையும் குறிப்பாக நாயகன் நிரஞ்சன் மற்றும் குடும்பத்தார் அனைவரையும் சந்தித்து நன்றி சொல்வதற்காக மிகவும் மகிழ்ச்சியுடன் வடக்கு நோக்கிய தனது பயணத்தை ஆரம்பிக்கிறார்.

படம் சுபமாக முடிகிறது.

நாயகன் நிரஞ்சனின் தாத்தாவாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் அவரது ஆறு பிள்ளைகள் அவர்களது பிள்ளைகள் என்று உறவுகள் நிறைந்த குட்டி கிராமமே ஒரே வீட்டில் இருப்பதும், அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்வுடன் கலாச்சாரங்களை போற்றுபவர்களாகவும் இருப்பதும் பார்ப்பதற்கு அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக பிரகாஷ்ராஜ் , ” கோயில் இருக்கும் ஊரில் கலாச்சாரம் தழைச்சிக்கும், பள்ளிக்கூடம் இருக்கும் ஊரில் பகுத்தறிவுப் பிழைச்சுக்கும்…” என்று பேசும் இடம் அருமை.

சாதாரண மனிதனாக இருந்து இன்று 100 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் செல்வந்தராக உயர்வதற்கு காரணம் எனக்கு கிடைத்த மனைவி அவள் மூலம் கிடைத்த வாரிசுகள் அவர்கள் மூலம் கிடைத்த பேர பசங்கள் அவர்கள்  எல்லோரும் மூலமும் கிடைத்த சந்தோஷம் என்று அவர் குறிப்பிடும் காட்சியும் சிந்திக்க வேண்டிய ஒரு காட்சி.

குடும்பத்தினர்களை பாரமாக  கருதி சிங்கிள் சைல்டு கலாச்சாரத்திற்கு மாறுபவர்களுக்கு ஒரு நல்ல பாடம்.

அங்கிருந்து, சாலையில் பழம் விற்ற சிறுமியை பார்க்கிறார்கள், அவளுக்கு நன்றி சொல்கிறார்கள் அவளையும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுகிறார்கள்.

அப்படியே வரும் வழியில், சாலையோர உணவகம் நடத்தி வரும் கோவை சரளாவின் மகனையும் மருமகளையும் மணமுறிவில் இருந்து காப்பாற்றுகிறார்கள்.

பசுமாட்டை குறுக்கே விட்டு தாமதம் ஏற்படுத்திய, சிறுவனை தேடிச் செல்லும் பொழுது அவனது பசுவை சிலர் கடத்திச் சென்றதை அறிந்து, துருவா சர்ஜா மூலம் மீட்கிறார்கள்.

வழியில் தாமதம் ஏற்படுத்திய அந்த பகுதியில் தாதா அர்ஜுனை தேடிச்சென்று நன்றி தெரிவிக்க செல்லும் பொழுது, அவருக்கு அவர்கள் இருவரையும் கொள்வதற்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அதிலிருந்து, அவர்கள் எப்படி மீண்டு திரும்பவும் சென்னைக்கு வந்து பதை பதைத்துப் போய் இருக்கும் தந்தை சத்யராஜ் உடன் சேர்கிறார்கள் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன்.

அதன் பிறகு, ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் நிரஞ்சனுக்கும் இடையில் ஏற்படும் காதல் எப்படி கை போடுகிறது என்பதையும் இன்னும் ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று அருமையாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அர்ஜூன்.

எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாரதியார் பாடினதை போல, படத்திலும் எங்கெங்கு காணினும் ஸ்ரீராமனும் சீதையும் அனுமனுமாகவே தெரிகிறார்கள்..

வழியில் பார்வையற்ற குழந்தைகள் கொண்டாடும் விஜய் திவாஸ் என்று, நடிகர் அர்ஜுனுக்கே உரிய தேசப்பற்றையும் அழகாக சொல்லி இருக்கிறார்.

அட இது தமிழ் படம் தானா என்று நம்மை நாமே கிள்ளி பார்க்க தோன்றுகிறது.  இது போன்ற நல்ல விஷயங்கள், நமது மாநிலத்திற்கு வெளியே எடுக்கப்பட்டு தான் தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கிறது என்பது ஒரு பெரிய வருத்தமான விஷயம் தான்.

ஐஸ்வர்யா அர்ஜுன். கதாபாத்திரத்திற்கு ஏற்ற கொள்ளை அழகு அருமையாக நடித்திருக்கிறார். நிரஞ்சன் ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் வசீகரித்து இருக்கிறார். நிச்சயம் ராஜமவுலி இவரை பயன்படுத்திக் கொள்வார்.

பிரகாஷ் ராஜ் கேட்கவே வேண்டாம் அற்புதமான ஒரு நடிகர், இந்த படத்திலும் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நம்மை மகிழ்விக்கிறார்.

சத்யராஜ்,  ஒரு பணக்கார தொழிலதிபர் தந்தை கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்தி போகிறார். இவரது ஹேர் ஸ்டைலை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும், அந்த கலைஞருக்கு வாழ்த்துக்கள்.

சீதா பயணத்தை பார்ப்பதற்கு பயணப்படுபவர்களுக்கு ஏமாற்றம் இல்லை!!

மாறாக நவீன இராமாயணத்தை பார்த்த ஒரு அனுபவம் கிடைக்கும்.