தாய் கிழவி

mysixer rating 4/5

145

a K Vijay Anandh review

தாய் கிழவி, எப்படா சாவா …? என்று பெற்ற மக்களும் ஊர் மக்களும் காத்திருக்கும் நிலையில் இருந்து, எப்படியாச்சும் காப்பாத்திடனும்  என்கிற நிலைக்கு மாறுவதுதான் இந்த படத்தின் ஒருவரி கதை.

இதுவரை தான் நடித்த படங்களில், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அரிதாரம் பூசிக் கொள்ளும் ராதிகா சரத்குமார். இந்த படத்தில் தாய்க் கிழவியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

படம் ஆரம்பித்து முதல் 10 –  15 நிமிடங்களுக்கு, தாய் கிழவி யார் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட்டு , படுத்த படுக்கையாக்கி விடுகிறார் இயக்குனர் சிவக்குமார் முருகேசன். அதன் பிறகு படத்தை முடித்து வைக்கும் 10 –  15 நிமிடங்களுக்கு, அவரை உயிர்ப்பித்தும் விடுகிறார்.

நடுவில் இருக்கும் ஒரு ஒன்றரை மணி நேரம், தாய் கிழவி பெற்ற மகன்கள், மருமகள்கள்,  மகள், மருமகன்கள், பேரன்பேத்திகள்,  உற்றார் , ஊரார் என்று அத்தனை பேரையும் ஆட்டுவித்து அட்டகாசமான திரை கதையை, காட்சிப்படுத்தி இருக்கிறார் சிவகுமார் முருகேசன்.

சொத்துக்கு அடித்துக் கொள்ளும் வாரிசுகள் கதை தான், இதனை நாம் பல படங்களில் பார்த்து விட்டாலும், இந்தப் படத்தில் ஏதோ ஒரு சுவாரசியம்,  மண்ணின் மணம், கிட்டத்தட்ட கருப்பசாமி கோயில் கிடா விருந்து போல ரசிகர்களை கிரங்கடிக்கும்.

படுத்த படுக்கையாகிவிட்ட தாய் கிழவி, எந்த நிமிடமும், பரலோகம் சென்று விடலாம் என்று ஊரே காத்திருப்பது சோகத்திலும் ஒரு கலகலப்பு.

எழுதப்படிக்கத் தெரியாத சிங்கம் புலி,  அருள்தாசுக்கு எட்டாம் கிளாஸ் படித்த தம்பி பாலா சரவணன்.   எப்படியாச்சும் இவர்களுக்கு ஒரு நல்லது செய்து விட வேண்டும் என்று, ஒரு செய்தியை பற்ற வைக்கும் முனிஷ் காந்த்.  இந்த நாலு பேரும் செய்யும் அலப்பறைகள் தான் படம் முழுவதும் நம்மை பல இடங்களில் சிரிக்கவும் வைத்து, சில இடங்களில் அழவும் வைத்து, கிளைமாக்ஸ் இல் சிந்திக்கவும் வைக்க விடுகிறார்கள்.

பேசினதில் மூன்று பவுன் குறைவாக போட்டு விட்டார் என்பதற்காக, கட்டிய மனைவியை, பிறந்த விட்டிருக்கே அனுப்பி வைக்கும் முத்துக்குமார். முதலுக்கே மோசம் என்கிற கதையாக, திருமண வாழ்க்கையே இழந்து விடுகிறார்.

அவரவர் எடுக்கும் முடிவு நமக்கு சாதகம் என்பது போல, முத்துக்குமாரின் முடிவு முனீஸ் காந்திற்கு ஜாக்பாட் என்பதாக கிளைமாக்ஸ் இல் ஒரு காட்சி வருவது அட்டகாசத்தின் உச்சம்.

இந்த படத்தின் கதையை ஸ்கிரிப்ட் ஆக எழுதி நடிகர்கர்களை நடிக்க வைத்தாரா…? அல்லது, அப்படி ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் கேண்டிட் கேமராவை வைத்து லைவாக ஷூட் பண்ணி இதனை ஒரு படமாக கொடுத்திருக்கிறாரா என்கிற அளவிற்கு, நடித்த ஒவ்வொருவரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

முக்கியமாக, இந்த படம் தாய் கிழவியாக நடித்திருக்கும் ராதிகாவிற்கும், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா விற்கும் தான் போட்டி என்கிற அளவிற்கு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்திற்காக நடிப்பிலும் இசையிலும் பங்களித்திருக்கிறார்கள்.

தாய் கிழவி, வீட்டில் சமைத்து ஆதரவற்ற பெரியவர்களுக்கு தூக்குச் சட்டியில் உணவு செல்வது,

அம்மா படுக்கையில் இருக்கிறாரா.? சாகப்போகிறாரா…? அல்லது எழுதிருச்சு வருவாரா..? என்கிற எல்லாவற்றையும் சமமாக பாவிக்கும் மகள் ரேச்சல், அவளுக்கு அந்த மனதிடத்தை கொடுத்த அம்மா ராதிகா சரத்குமார்.

25 பவுன் என்று சொல்லி 22 பவுனாச்சும் போட்டிருக்கிறார்களே என்று சந்தோசமாக வாழாமல், மூன்று பவுனுக்கு ஆசைப்பட்டு நான்கு லட்சத்தை இழக்கும் முத்துக்குமார். மொத்தத்தில் திருமணத்திற்கு செலவு செய்த பணம் தாய் கிழவிக்கே திரும்ப வருவது.

மறு திருமணம் என்கிற விஷயத்தை ஆரோக்கியமாக ஊக்குவிப்பது.

ராதிகா சரத்குமார், பல்லாங்குழியில் பெண்களுக்கு வாழ்க்கை பாடம் எடுப்பது.

மருத்துவமனையில், ஆங்கிலம் தெரியாவிட்டாலும் மருத்துவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு ஆமாம் சாமி போட்டு, எதையும் தவறாக புரிந்து கொள்ளாமல்,  என்ன சிகிச்சை செய்யப்படுகிறது…? நோயாளியின் உண்மை நிலை என்ன..? என்பதை தங்களுக்கு புரிந்து மொழியில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது,

போன்ற, பல நல்ல விஷயங்கள் இந்த படத்தில் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.

கமல்ஹாசனின் படங்களில் பெண் ரசிகைகள் அவர்களது இதயத்தில் கமல்ஹாசனின் கைப்பட ஆட்டோகிராப் வாங்குவார்கள்,  அதன் தாக்கமோ..? என்னமோ ? சிங்கம் புலியும், அந்த இடத்தில் போட்டுக் கொள்கிறார் டாட்டூ .

இன்சூரன்ஸ் திட்டங்களை, ஆளும் முதலமைச்சர்கள் பெயரில் வைப்பது எவ்வளவு பெரிய அபத்தமானது என்பதை, நகைச்சுவையாக மருத்துவமனையில் சொல்லி இருக்கிறார்கள். கலைஞர் காப்பீட்டு திட்டம்  என்று பெயர் வைத்தால், மற்ற கட்சிக்காரர்கள் எப்படி அந்த காப்பீட்டு திட்டத்தை பெற்றுக் கொள்வார்கள்..? என்பதாக ஒரு நகைச்சுவை காட்சியில் அதனை புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன்.

பாதிக்கப்படுவது மக்கள், கொடுக்கப்படுவது அரசு பணம் , இதற்கு எதற்கு ஐந்து வருடங்களில் தூக்கி எறியப்படும் அரசியல்வாதிகள் பெயர் வைக்க வேண்டும்..? நல்ல சிந்தனை!

இவர் நடிக்கவில்லை , வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது இந்த படத்தில் ராதிகா சரத்குமாருக்கு 100% பொருத்தமாக அமைந்திருக்கிறது.

மற்றபடி படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

தாய் கிழவி, தமிழ் சினிமாவின் தெய்வத்தாய்!