a K Vijay Anandh review
அசுரன், பாண்டி முனி
எம் ஜி ஆர் படங்களில் பார்த்திருப்போம் , ரஜினி – கமல் படங்களில் பார்த்திருப்போம். படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியில் அவர்கள் இரட்டை குழந்தைகளாக பிறப்பார்கள் , அவர்களில் ஒருவர் எப்படியோ இடம் மாறுவார். கிளைமாக்சில் இருவரும் சேர்வார்கள். எம் ஜி ஆர் , ரஜினி , கமல் ஆகியோருக்கு பிறகு அப்படி ஒரு காட்சி இரட்டை வேட சினிமாவில் நடிக்கும் பாக்கியம் யாருக்கும் கிடைக்கவில்லை .
ஆனால் அசுரன், பாண்டிமுனி என்கிற காளை கன்றுகளுக்கு கிடைத்திருக்கிறது.
நட்டி நடராஜ் வீட்டில் பிறக்கும் அந்த இரட்டை கன்றுகளில் ஒன்று அதன் குறைபாட்டால் இடம் மாறுகிறது.
ஒன்று அசுரனாக நட்டி வீட்டிலும் பாண்டி முனியாக விமல் வீட்டிலும் வளர்கிறது.
சாம்பியன் வட மாடுகளான இருவரையும் சுற்றியே அட்டகாசமாக திரைக்கதை பயணிக்கிறது .
வட மாடுகளின் கம்பீரம் , வட மாடு பிடிக்கும் வீரர்களின் சாகசம் , நமது மண்ணின் பெருமை , உறவுகளின் பிணைப்பு , பழிவாங்கல் என்று வடம் திரைப்படம் விறுவிறுப்பாக நகர்கிறது .
இதில், நட்டியோ அல்லது விமலோ வட மாடு பிடி வீரர்களாக இல்லாமல் , அந்த மாடுகளை வளர்ப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . ஆகவே படத்தின் முக்கிய நாயகர்கள் என்றால் அது அசுரனும் பாண்டி முனியும் என்றால் அது மிகையாகாது.
அதற்கு ஏற்றார்ப்போலவே , அசுரன் மற்றும் பாண்டி முனி களமிறங்கும் போது , அவற்றிற்கு என்று பிரத்யேகமாக பாடல்கள் இசைத்திருக்கிறார் டி இமான் . குறிப்பாக பாண்டி முனி களமிறங்கும் போது , விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று மாஸான பாடல் ஒன்றை தந்திருக்கிறார் டி இமான்.
ஒரு பக்கம் தனி ஆளாக , நட்டி ., இன்னொரு பக்கம் அம்மா , அப்பா, மாமா , அத்தை , அக்கா , தங்கை , மச்சான், பாட்டி என்று விமலின் பெரிய குடும்பம்.
வேறொரு பக்கம் விமலை பழிவாங்க காத்திருக்கும் நாயகியும் சங்கீதா , அவரது அக்கா என்று பக்காவான குடும்ப படமாக வடம் வெளியாகியிருக்கிறது.
போட்டி பொறாமை , அன்பு அரவணைப்பு , பழிவாங்கல் என்று மூன்று புள்ளிகளையும் அற்புதமாக ஒரு கட்டத்தில் இணைத்திருக்கிறார் இயக்குனர் கேந்திரன்.
வடம், ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர் .