a K Vijay Anandh review
படம் ஆரம்பிப்பதற்கு முன், இயக்குனர் சுரேஷ் சங்கையாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் பணியாற்றிய காட்சிகளை காண்பித்தார்கள். உண்மையில்,அவரது உடல் நலம் சரியில்லாதது அவரது முகத்தில் தெரிந்தது. அந்த நிலையிலும் படப்பிடிப்பில் அவர் சுறுசுறுப்பாக இயங்கிய விதமும், குறிப்பாக டிராக்டரில் இருந்து கிராமத்து மக்கள் கீழே விழுவதாக வரும் காட்சி எடுக்கப்படும் முன் உதவி இயக்குனர்களை வைத்து பரிசோதித்து பார்க்காமல் தானே டிராக்டரில் இருந்து சறுக்கி விழுந்து பாதுகாப்பாக இருக்கின்றோமா என்பதை உறுதிப்படுத்தி அந்த காட்சியை எடுத்துவிதத்தில் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். கிராமம் கலாச்சாரம் வாழ்வியல் மற்றும் மண் சார்ந்த கதைகளுக்கு சொந்தக்காரராக சுரேஷ் சங்கையாவிற்கு மனப்பூர்வமான அஞ்சலிகள்.
சிறு வயதிலேயே, பெற்றோர்களை இழந்துவிட்ட நிலையிலும் சுதந்திரப் போராட்ட தியாகியான தாத்தாவின் அரவணைப்பில் வளரும் கிராமத்து பூசாரியாக யோகி பாபு. இதுவரை இவர் ஏற்றிராத வேடம், அதேநேரம் இவருக்கு மிகவும் பொருத்தமான வேடமாக அமைந்திருக்கிறது.
அந்த கிராமத்தில் அந்த சிறு கோயிலில் உண்டியலில் எவ்வளவு சேர்ந்து விடப்போகிறது..? ஆனாலும் அதிலும் அதே கிராமத்து மக்களுக்கு உதவி செய்யும் அழகே அழகு.
தண்ணீர் பிரச்சினை தான், அவருக்கு திருமண தடையாகவும் இருந்து விடுகிறது. கோயிலுக்கும் அவரது மண்வீட்டிற்கும், இடைப்பட்ட இடத்தில் தான் தண்ணீர் இருக்கிறது என்று நீரோட்டம் பார்ப்பவர் சொல்ல, அந்த இடத்தில் கிணறு தோண்ட யோகிபாபு மறுக்க, சரி கிணறு தோண்டி தண்ணீர் வந்து விட்டால் நமக்கு திருமணம் நடந்து விடும் என்கிற ஆறுதலில், அதற்கு சம்மதிக்க, கிணறு தோண்ட போய் பூதம் வந்த கதையாக, டைனோசர்ஸ் எலும்புக்கூடுகள் தெரிய அதன் பிறகு நடக்கும் களேபரங்கள் தான், கெணத்த காணோம் படத்தின் இரண்டாவது பகுதி.
இந்த படத்திற்கு இப்படி ஒரு டைட்டில் வைத்து படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சரி இது ஏதோ அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்த போகும் படம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் லெப்டில் இன்டிகேட்டர் போட்டுவிட்டு ரைட்டில் திரும்பும் நமது ஆட்டோக்களைப் போல, டைனோசர்ஸ் என்று ஒரு டுவிஸ்ட் கொடுக்கும், திரைக்கதையை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்துவிட அந்த இடமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் சென்று விட, ஒரு கட்டத்தில் டைனோசர்ஸ் எலும்புகளும் காணாமல் போகின்றன. கெணத்த காணோம் என்கிற டைட்டில் விட டைனோசர்ஸை காணோம் என்பதுதான் பொருத்தமாக இருந்திருக்கும்.
யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு, லவ்லின் சந்திரசேகரன் அற்புதமான நடிப்பு. கிராமத்தார்களின் நக்கல் நையாண்டிகள், குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தை கலாய்க்கும் விதம் என்று படம் கலகலப்பாக நகருகிறது.
நமது , அதாவது தமிழின் தமிழரின் தமிழினத்தின் தொன்மையை காசாக்கும் தெலுங்கர்கள் என்பதாக காட்சிப்படுத்தியது, அதிலும் குறிப்பாக தெலுங்கு ஊர் தலைவரும் தெலுங்கு டீச்சர் சுபாஷினியும் சேர்ந்து தமிழ் பிள்ளைகளிடம் காசு வசூலிப்பது, சமகால அரசியலை அதாவது சீமான் தொண்டை தண்ணி வற்ற மேடைக்கு மேடை கத்திக் கொண்டிருக்கும் தமிழகத்தின் சமகால அரசியலை, ஒரே காட்சியில் காட்சிப்படுத்தியது போன்று இருந்தது.
இந்த படத்தை ஒருவேளை தெலுங்கில் டப் செய்தால், அவர்கள் இருவரை மட்டும் தமிழ் பேச வைப்பார்கள், அது வியாபார உக்தி.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக வரும் ரேச்சல், ராமகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் ஆக வரும் ஜார்ஜ் என்று அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் மோகன் ராஜா மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோரின் பாடல்கள் அருமை.
இறுதியாக, டைனோசர்ஸ் எலும்புக்கூட்டை சாமியாக வழிபடுபவர்களாக, தமிழர்களை காட்டியிருப்பது கொஞ்சம் சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான், ஒரு செங்கலை கூட மஞ்சள் தடவி வழிபடுபவர்கள் தான், ஆனால் டைனோசர்ஸ் எலும்புக்கூட்டை வழிபடும் அளவிற்கு பகுத்தறிவை இழந்தவர்கள் அல்ல.
தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து ஆரம்பிக்கும் கதை, தொல்லியல் டைனோசர்ஸ் என்று பயணித்து ஒரு சராசரியான பொழுதுபோக்கையும் தருகிறது.