a K Vijay Anandh review
ரா கார்த்திக் இயக்கி இருக்கும், மேட் இன் கொரியா படம் பார்த்த பிறகு, உலகில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்குள் எல்லைகளுக்குள் அடங்கி விடாமல், ஒரு குறிப்பிட்ட தேசத்தின் குடிமகனாக மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல், ஒரு குளோபல் சிட்டிசன் என்கிற அடையாளத்தை பெற வேண்டும் எல்லைகள் தாண்டி மானிடம் ஒன்றிணைய வேண்டும் என்கிற சிந்தனை தோன்றியது.
ஒரே பூமி பந்தில் எதற்கு இத்தனை எல்லைகள், எல்லை கோடுகள், வேலிகள் ?
அதற்காக இது, குடியேற்றம் அல்லது அகதிகள் தொடர்பான படம் என்று நினைத்து விட வேண்டாம்.
பள்ளியில் படிக்கும் பொழுது, மாறுவேடப் போட்டியில் கன்னியாகுமரியில் இருந்து கொரியாவிற்கு சென்று அந்த மண்ணை ஆண்ட செம்பவளம் என்கிற , அரசியின் வேடம் பூண்டதிலிருந்து ஊட்டி கோலப்பூரில் வசிக்கும் செண்பாவிற்கு ஒரு நாள் கொரியாவிற்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை மட்டுமே அவரது வாழ்நாள் ஆசையாக மாறிப் போகிறது.
நடுவில், காதல் பிரச்சினை வீட்டிற்கு தெரிய வர, காதலனுடன் சென்னைக்கு பயணம் ஆகிறாள். அந்த நேரத்தில் கிடைக்கும் பணத்திற்காக முழுவதுமாக சுயநலமாக யோசிக்காமல் செண்பாவை மட்டும் கொரியாவிற்கு அனுப்பி வைக்கிறான் காதலன்.
அங்கே அவளுக்கு கிடைக்கும் தோழன், அவன் மூலம் கிடைக்கும் வேலை என்று கதை மிகவும் அழகாக பயணிக்கின்றது.
ஒன்று மட்டும் புரிகிறது…
எந்த தேசங்களையும் விட மிகவும் தொன்மையான பாரம்பரியங்கள் கொண்ட நமது தேசம் மட்டும் இன்னும் உள்கட்டமைப்பில் மேம்பட வில்லை என்பது.
சியோல் நகரின், அழகு அங்கு ஓடும் சாக்கடை கலக்காத ஆறு, சுய ஒழுக்கங்களுடன் கூடிய மனிதர்கள், குப்பைகள் இல்லாத தெருக்கள், சக மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் சக மனிதர்கள் என்று ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
கொரியன் கோவை சரளா போன்று ஒரு பாட்டிக்கு பணிவிடை செய்யும் வேலையை ஏற்கிறார் பிரியங்கா மோகன்.
மகனின் மருமகளின் பார்வையில் படுத்த படுக்கையாக இருக்கும் அந்த பாட்டி, செய்யும் சேட்டைகள், பிரியங்கா மோகனுக்கும் அவருக்குமான உறவு என்று மேட் இன் கொரியா ஒரு அழகான கவிதையாக பயணிக்கின்றது.
நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்கிற ஒரு பிளாக் ஹியூமர் படத்தில் நடித்த அனுபவமோ, பிரியங்கா மோகன் கொடுக்கும் சின்ன சின்ன , முகபாவனைகள் சிரிப்பை வரவழைத்து ரசிக்கவும் செய்கின்றன. செக்கச்செவேர் என்கிற அவரது முகத்தில், சிறு கீற்றாக வைத்துக் கொள்ளும் திருநீறு கொள்ளை அழகு.
வேலைக்குச் செல்லும் பிரியங்கா மோகன் கொரியாவில் முருகனின் வேலை நட்டு அவனது திருநீறை பூசிக்கொள்ளும் காட்சிகள் மிகவும் எதார்த்தம், அழகு.
அதற்கு முன், பிரியங்கா மோகன் கோலப்பூரில் இருக்கும் பொழுது, மொபைல் சிக்னல் கிடைக்காத நிலையில் யானை மீது ஏறி நின்று கொண்டு சிக்னலை தேடுவது அழகான காட்சி.
அங்கு அவருக்கு கிடைக்கும் புதிய தோழன் அல்லது காதலன் மற்றும் நண்பர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து சென்ற செம்பவளம் கொரியாவை ஆண்டாள். செண்பா என்கிற கதாபாத்திரம் மூலமாக கொரியாவிற்கு செல்லும் பிரியங்கா மோகன் இந்த படம் பார்க்கும் ரசிகர்களின் இதயத்தை ஆள்வார்.
முழுக்க முழுக்க தமிழ் திரைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்டிருக்கும் மேட் பை தமிழர்கள் என்று சொல்லத் தக்க மேட் இன் கொரியா திரைப்படம், ஒரு அற்புத அனுபவம்.
Made in Korea is available on Netflix from today the March 12, 2026