IMMORTAL

Rating 3.5/5

21

a K Vijay Anandh review

ஜீவி பிரகாஷ் குமார் – கயாது லோகர் சம்பந்தப்பட்ட இப்படத்தின் போஸ்டர் களை பார்த்த போது, காதலும் காமமும் தான் என்றும் அழியாத விஷயங்கள் என்று சொல்லப்போகிறார்களோ என்று தோன்றியது.

அந்தளவுக்கு, இருவரின் முக பாவனைகள் கூடுதலாக கயாது லோகரின் கவர்ச்சியான தோற்றம் என்று ரசிகர்கள் வேறு மாதிரியான ஒரு எதிர்பார்ப்பில் இருந்தார்கள், நான் உட்பட.

ஆனால், படம் பார்த்தபோது இயக்குனர் மாரியப்பன் சின்னா வேறு ஒரு கோணத்தில் மிரட்டிவிட்டார்.

கயாது லோகரை காட்டேரி ஆக்கி ஜீவி பிரகாஷ் குமார் உட்பட அனைவரையும் பயமுறுத்தி விட்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் மாயாஜாலங்கள் கச்சிதமாக பொருந்திய படம் இது தான் என்றால் மிகையாகாது.

ஜீவி பிரகாஷ்குமார், அவரது மாமா லொள்ளு சபா மாறன், நண்பன் கதிர், கயாது லோகர், டி எம் கார்த்திக் அப்புறம் அந்த சுவிகி ஆள் உள்ளிட்ட ஒன்றிரண்டு பேர் அவ்வளவு தான் படத்தின் ஒட்டுமொத்த கதாபாத்திரங்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கயாது லோகரை பெற்று , கொல்ல  முயன்று விட்டுவிடும் பெற்றோர் சம்பந்தப்பட்ட காட்டுக்குள் நடக்கும் காட்சிகள் அட்டகாசம்.

தங்கியிருக்கும் ரூமை காலி செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடியில் ஜீவி பிரகாஷ் குமார் எதிர்பார்க்கும் 5000₹ வாடகைக்கு ஒரு ஷேரிங் ரூம் கிடைக்கிறது.

அதனைத்தொடர்ந்து படத்தின் பெரும்பகுதி அந்த அபார்ட்மெண்டிற்குளாகவே நடக்கிறது.

எதற்கோ ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய எலியாக ஜீவி பிரகாஷ் குமார் படும் அவஸ்தை மிகவும் யதார்த்தம்.

ஒருவழியாக தப்பித்து வந்தால், மிரர் எபெக்ட் போன்று எதிரே  அவர் வந்த இடமே இருப்பது அட்டகாசமான இடைவேளை காட்சி.

அதிலிருந்து, இன்னொரு பாதியை விறுவிறுப்பாக சொல்லிய விதம் அருமை.

சாம் சி எஸ் இன் இசை நிச்சயமாக படத்தின் விறுவிறுப்பிற்கு உதவியிருக்கிறது. அத்துடன் அட்டகாசமான கிராபிக்ஸ் உம் .

பாடத்திற்கு படம் வெவ்வேறு கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்கிற ஜீவி பிரகாஷ் குமாரின் இம்மார்டல் சிந்தனைக்கு சரியான விருந்தாக இந்தப்படம் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.