a K Vijay Anandh review
முழுக்க முழுக்க கமர்சியல் மசாலா காரம் தூக்கலான படங்கள் அல்லது பிரம்மாண்டமான ஆன்மீக படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கு சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக நமது நலன் குமாரசாமி கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குனர்களின் டார்க் காமெடி வகை படங்களை போன்ற ஒரு படமாக ராவ் பகதூர் வெளியாகி இருக்கிறது.
அப்பா சிகப்பு, அம்மா சிகப்பு, பிள்ளை சிகப்பாக பிறந்தால் அது அவர்களுக்கு தான் பிறந்தது என்பது அல்ல…
அப்பா சிகப்பு , அம்மா சிவப்பு, பிள்ளை கருப்பு என்றால், அது அவர்களுக்கு பிறந்தது இல்லை என்றும் ஆகிவிடாது…
இப்படி ஒரு வித்தியாசமான ஒன் லைனர்..
இன்னொரு விதமான ஒன் லைனரும் இருக்கிறது, அதை சொல்லிவிட்டால் மொத்த கதையையும் சொல்லிவிட்டது போல ஆகிவிடும்.
தனது தந்தைக்கு வைத்தியம் பார்க்க வந்த செவிலியரை தேடித்தேடி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் ஒரு ஜமீன் வாரிசு. ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது, எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னொரு ஆண் குழந்தை கருப்பாக பிறக்கிறது அதிலிருந்து, அப்பா ராமப்பா ராவ் பகதூருக்கு பைத்தியம் பிடிக்கிறது. அந்த குழந்தை பிறந்தது பிறகு வியாபாரத்தில் வெற்றி பல்வேறு விஷயங்களில் வெற்றி என்றாலும், இவன் நமக்கு பிறந்தவன் இல்லையோ என்கிற சந்தேகம் ராமப்பாவை வாட்டி வதைக்கிறது. விளைவு பைத்தியத்தின் உச்சிக்கு சென்று விடுகிறார்.
அவ்வப்போது, மூர்ச்சையாகி கீழே விழும் ராமப்பாவிற்கு அவரது உற்ற தோழனாக இருக்கும் டாக்டர் ஆச்சாரி அடிக்கடி வந்து வைத்தியம் பார்ப்பதும், அவர்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீண்ட உரையாடல்களும் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு படத்தில் இப்படி யார் என்று இதனை பார்க்கும் மற்ற ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை வரவழைக்கும் ரகம்.
ராமப்பாவாக சத்தியதேவ், டாக்டர் ஆச்சாரியாக விகாஷ் முப்பலா, நர்ஸ் ரேணுகா ஆக வரும் தீபா தாமஸ், வீட்டில் சமையல்காரி அச்சம்மாவாக வரும் பால பரசர், மூத்த மகன் லவனா ஆக வரும் பிரனாய் வாகா, இளைய மகன் சந்தேகத்துக்குரியவனாக வரும் குசுமா , கிரண் இவர்களுடன் காவல்துறை அதிகாரியாக வரும் ஆனந்த் மொத்தமே இந்த ஆறு கதாபாத்திரங்கள் தான் இவர்களை வைத்துக்கொண்டு மிகவும் வித்தியாசமான பட ஆக்கத்தில் ராவ் பகதூர் படத்தை வெங்கடேஷ் மகா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்கள் இந்த ஆறு பேர்தான் என்றாலும், ராவ் பகதூரின் கற்பனையில் வரும் அவர்களது அத்தனை மூதாதையர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் ஆகட்டும் ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமாக பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது.
அந்த ஜமீனின் மூதாதையர்கள் அத்தனை பேருக்கும் உள்ள ஒரு சுவராசியமான பொதுவான விஷயம் அவர்களது வலது கரத்தை நெஞ்சில் வைத்துக் கொள்வது. இதனை, ரேணுகா கண்டுபிடித்து ராவ் பகதூர் இடம் சொல்லும் காட்சியில் இருந்து, அவர் வலுக்கட்டாயமாக வலது கரத்தை நெஞ்சில் வைத்துக் கொள்ளும் காட்சி, திரைப்படங்களை ஆழமாக கவனித்து ரசிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஆஹா… என்கிற சந்தேகத்தை எழுப்பி விட்டிருக்கும். அந்த சந்தேகத்திற்கான பதில், ராவ் பகதூர் இறந்த பிறகு, அவரது காதில் டாக்டர் ஆச்சாரி சொல்லும் வார்த்தையில் இருக்கிறது. அந்த இடத்தில், திரையரங்கில் ஒரு வெடி சிரிப்பு காத்திருக்கிறது.
ராமப்பா ராவ் பகதூராக நடித்திருக்கும் சத்யதேவ், நிச்சயம் இயக்குனரின் எழுத்துக்களை முழுமையாக நிஜமாக்கி இருக்கிறார், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
டாக்டர் ஆச்சாரியாக நடித்திருக்கும் விகாஷ், அந்த குடும்பத்திற்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் இந்த திரைக்கதையின் முதுகெலும்பாக பயணிக்கிறார். பொது மருத்துவராக, பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் டாக்டர் ஆச்சாரி, தனது மருத்துவ நண்பர்களின் ஆலோசனையின் படி ராவ் பகதூரின் சந்தேகத்தை தீர்த்து வைக்க உளவியல் ரீதியாக எடுக்கும் முயற்சி அற்புதம்.
ரேணுகாவாக வரும் தீபா தாமஸ், தனது அழகான இளமைப் பருவத்தையும் ராவ் பகதூரை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மகனை பெற்றெடுத்த பிறகு படும் துயரங்களையும் அற்புதமாக முகத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
தினமும் காலையில் காபி கொடுக்க ராவ் பகதூரின் அறை கதவை திறந்து, தலையை மட்டும் நீட்டி அப்பா என்று அழைக்கும் அச்சம்மா பால பரசர் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். பிளாக் காபி போடத் தெரியாமல் அசர வழியும் இடம் அருமை.
பிரம்மாண்டமான மாளிகை வித்தியாசமான அரங்க அமைப்புகள் என்று இந்த படத்தின் கலை இயக்குனர் அபாரமான உழைப்பை வழங்கியிருக்கிறார்.
கலை இயக்குனரின் அபாரமான அந்த உழைப்பை, ஒளிப்பதிவாளர் கார்த்திக் அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்
ஸ்மரன் சாய், இவரது இசையில் பழைய இளையராஜா பாடல்களின் மெட்டுக்களும் ஆங்காங்கே தெரிகிறது. இருந்தாலும், இந்தப் படத்தில் வரும் வித்தியாசமான பால் காட்சிகளை ரசிக்க முடிகிறது.
ராவ் பகதூர், அரண்மனை விருந்து!!