a K Vijay Anandh review
தயாள் பத்மநாபனின் படங்கள் என்றாலே ஒரு வித்தியாசமான தீனி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள், அதனை இன்னும் வித்தியாசமான படைப்போடு பூர்த்தி செய்து இருக்கிறார்.
சமகாலத்தில் உச்சபட்ச மரண தண்டனையை எதிர்நோக்கி குற்றவாளி கூண்டில் நிற்கும் மதன், அவருக்கு தூக்கு தண்டனையை கொடுத்து விடுவதா வேண்டாமா என்று பெரும் குழப்பத்தில் இருக்கும் நீதிபதி. அவரது மேஜையில் அறிவுமதி எழுதிய என் தலையெழுத்து என்கிற புத்தகம்.
பிளாஷ்பேக்கில், வெற்றி சம்பந்தப்பட்ட அழகான ஒரு கதை. நன்கு படித்து நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் வெற்றியை, திருட்டுத் தொழிலுக்கு திசை திருப்புகிறார் மாறன்.
அது ஒரு கொலையில் போய் முடிகிறது, 1969இல் நடக்கும் அந்த கொலைக்கு 1972ல் தூக்கு தண்டனையும் விதிக்கப்படுகிறது. தூக்குத் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் வெற்றி, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது என்பதாக என் தலையெழுத்து என்கிற தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறார்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வரும் சிறை அதிகாரி ரங்கராஜ் பாண்டேவிடம் அதனை புத்தகமாக வெளியிடச் சொல்லி , அந்த இடத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் தான் மொத்த படமும்.
கர்ணம் தப்பினால் மரணம் என்கிற முயற்சி தான், என்றாலும் தனது சிந்தனையில் இதுதான் படம் என்று முடிவு செய்ததை சிரத்தையாக எடுத்து அதனை திரைக்கு கொண்டு வந்திருக்கும் தயாள் பத்மநாபன் பாராட்டி தன் ஆக வேண்டும்.
வட்டி கட்டுவதற்கு தானே இதுவரை திருடினாய், ஒருமுறை அசலையும் கட்டிவிடும் அளவிற்கு திருடிவிட்டால் அத்தோடு திருட்டை விட்டுவடலாம், நமது நிலத்தில் உழைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்கிற இடத்தில் பிரிகடாவும்…
தூக்கு மேடையில் ஏறி தூக்கு கயிற்றை எதிர்கொள்ளும் வரை மிகவும் நிதானமாக இருக்கும் வெற்றி, கடைசி நொடியில் என் மனைவியையும் குழந்தைகளையும் ஒருமுறை பார்த்து விடவா என்று பயந்து கெஞ்சும் இடத்தில், எவ்வளவுதான் தைரியமாக இருந்தாலும், நானும் மனிதன்தானே என்பதாக உணர்ச்சிகளை காட்டும் வெற்றியும்…
நன்றாக நடித்து விடுகிறார்கள்.
வட்டிக்கு பணம் கொடுத்து, கட்ட முடியாதவர்கள் கட்டிய மனைவிகளை கட்டிலுக்கு அழைக்கும் கொடூர வில்லனாக கவிதா பாரதியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வெற்றியின் அம்மாவாக எடுத்திருக்கும் லிஸி ஆண்டனியும், பொறுப்பில்லாத தந்தையாக நடித்திருப்பவரும் மிகவும் எதார்த்தம்.
தூக்கு மேடையை பராமரிக்கும் தொழிலாளியாக வரும் சுப்பிரமணிய சிவா, நொண்டி நொண்டி நடந்து வழக்கம்போல ஒரு வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
ரங்கராஜ் பாண்டேவுக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரியான கதாபாத்திரம், அவரது உடுப்புகள் வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அவரது உதடுகளில் இருந்து வரும் வாதாடும் திறன் என்றைக்கும் சோடை போகாது என்கிற அளவில் வெற்றியுடன் ஒரு அருமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
1972 இல் நடந்த சம்பவத்தை, 2012ல் ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கும் நேரத்தில் நினைவு படுத்தி, கொலைக்குப் பின் ஏதேனும் நியாயமான காரணங்கள் இருக்கலாம் என்பதாக சந்தேகப்பட்டு, மறு விசாரணைக்கு உத்தரவிடும் நீதிபதி என்பதாக கதை முடிகிறது.
தூக்குத் தண்டனை கூடாதா..? அல்லது தூக்குத் தண்டனை பெறும் குற்றவாளிக்கு கொலைக்கு ஏதேனும் நியாயமான காரணங்கள் இருந்தால் என்ன செய்வது? என்கிற இரண்டு கேள்விகளையும் விதைத்து படம் நிறைவடைகிறது.
ஒரு காம்பேக்ட் ஃபிலிம் மேக்கிங் என்கிற வித்தையை இந்த படம், திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்கிற கனவுடன் வரும் படைப்பாளிகளுக்கு பெரிய உத்வேகத்தை கொடுக்கும் என்றால் மிகை அல்ல!