கட்டா குஸ்தி 2

Rating 5/5

262

a K Vijay Anandh review

ஒரு திரைப்படம் பார்க்க செல்கிறோம் என்றால் என்ன தேவை? முக்கியமாக பொழுதுபோக்கு, அதற்கு அடுத்து தான் மற்றவை. நல்ல கதையாகட்டும், திரைக்கதையாகட்டும், சுவாரசியமான காட்சிகள் ஆகட்டும், காட்சிகளை படமாக்கிய விதமாக கட்டும், திரைக்கதையோடு பயணிக்கும் பின்னணி இசை ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும், அவை ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பொருந்திப் போவதாகட்டும், அந்த காட்சிகளில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பு திறமையாகட்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள் கட்டா குஸ்தி 2 இல்.

சமீபத்தில் பெண்களின் திறமையை முன்னிறுத்தும் பல திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை கட்டா குஸ்தி 1 படம் தான் அதற்கு ஒரு மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது என்றால் மிகை அல்ல.

முதல் பாகத்தில் விஷ்ணு விஷாலும் ரெஸ்லிங் சாம்பியன் ஐஸ்வர்யா லட்சுமியும் திருமணம் செய்து கொண்டார்கள், குழந்தையும் பிறந்து வட்டது. அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் ? அடுத்த பாகத்தில் என்ன கதை சொல்லப் போகிறார்கள்? என்பது  சவால்கள் நிறைந்த எதிர்பார்ப்பு தான். அந்த எதிர்பார்ப்பை, மிக கச்சிதமாக அதேசமயம் மிகவும் யதார்த்தமாக திரைக்கதை அமைத்து கட்டா குஸ்தி 2 படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர், செல்ல அய்யாவு.

ரெஸ்லிங் சாம்பியன் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரயில்வேயில் வேலை கிடைத்து வட்டது, ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் ஒரு பிளாட்டும் கிடைத்துவிட்டது. ஒரு உயர் நடுத்தர வர்க்க குடும்பமாக, ஒரு குட்டி மகாராணியுடன் அழகான வாழ்க்கை. விஷ்ணு விஷால், ஹவுஸ் ஹஸ்பண்டாக சமையல் முதல் அத்தனை பொறுப்புகளையும் தோள் மீது ஏற்றிக்கொண்டு, மனைவியை தேசிய அளவில் ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயார் செய்வதாகட்டும், சராசரியாக படிக்கும் தனது செல்ல மகளை அவள் போக்கில் விட்டு அன்பு செலுத்துவதாகட்டும், ஓய்வு நேரங்களில் அந்த குடியிருப்பு வாசிகளுக்கு பிட்னெஸ் ட்ரைனிங் எடுப்பதாகட்டும், விஷ்ணு விஷால் அற்புதமாக நடித்திருக்கிறார். இதுபோன்ற, இவர் காட்டும் உடல் மொழிகளை, இந்திய அளவில் ஷாருக்கான் படங்களில் மட்டுமே பார்க்க இயலும்!

படிப்பு அறிவு இல்லாத காரணத்தால், கோச்சின் சதி திட்ட வலையில் விழுவது, அதிலிருந்து மீள்வது வரை, மனைவியிடம் உண்மையை நிரூபிக்க போராடுவது வரை விஷ்ணு விஷால், பெண்களுக்கு பிடித்த கதாநாயகனாக இந்த படத்தில் கோலோச்சி இருக்கிறார்.

பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அத்தையை நிற்க வைத்து ஜெயிக்க வைத்து, மாமா கருணாஸிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும்  இடங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும். அப்படி போடு…. பாடல் காட்சியும் ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமைந்து, திரையரங்குகளில் ரசிகர்களின் சிரிப்பொலி  டால்பி அட்மாஸ் க்கு சவால் வடும் வகையில் ஒலிக்கும்.

ஐஸ்வர்யா லட்சுமி, உண்மையான ரெஸ்லிங் சாம்பியன் அதுவும் இதுபோன்ற ஒரு நடுத்தர வர்க்க பின்னணி கொண்ட ரெஸ்லிங் சாம்பியனின் உடல் மொழிகள் தோற்றுப் போகும் அளவிற்கு, மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

மனைவி ஐஸ்வர்யா லட்சுமி ரெஸ்லிங் சாம்பியன், கணவன் விஷ்ணு விஷால், தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் புரட்டி போடும் அளவிற்கு அன்னபிஷியல் ரெஸ்லிங் சாம்பியன். இந்த அப்பா அம்மாவை மிஞ்சும் அளவிற்கு இன்னொரு சாம்பியனாக, இன்னும் சொல்லப்போனால் பிளேயர் ஆப் தி மேட்ச் என்கிற அவார்டு கொடுப்பதாக இருந்தால், அதனை தட்டிப் பறிக்கும் அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார் இவர்களின் மகளாக வரும் சாரா சியனா. ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக, நீதிமன்ற காட்சியில், நீதிபதியாக வரும் ரம்யா கிருஷ்ணனை ஓவர் டேக் செய்து, சாரா தனது குழந்தைத்தனமான அதேசமயம் அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க உணர்வுபூர்வமான வாதங்களால் அனைவரையும் கவர்கிறார்.

இவரை பார்த்தால் மோக்ஷமா, இவரிடம் படித்தால் மோக்ஷமா எனும் அளவிற்கு ஒரு தேவதை போன்ற ஆசிரியை ஆக மோகஷா,  அவரது கதாபாத்திரமும் கதாபாத்திரத்திற்கான தேவையும் மிகவும் நியாயமாக இந்த படத்தில் அமைந்திருக்கிறது.

முதல் பாகத்தில் வந்தது போலவே, ஒரு பக்கம் பெண்களும் ஒரு பக்கம் ஆண்களுமாக போடும் கூட்டம் இந்த படத்திலும் இருக்கிறது, இடைவேளை முடிந்து உடனடியாக வந்து விடும் இந்த காட்சியை தவற விட்டு விடாதீர்கள்.

எதிர்வீட்டு டி டி ஆர் ஆக கருணாகரன் முதல் ஊர்க்காரர்கள் கருணாஸ்,  காளி வெங்கட், முனிஷ்காந்த், கஜராஜ் என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அதுவரை அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் லிஸி ஆண்டனி, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு காட்டும் உடல் மொழிகள் அற்புதம். மனைவியை பதவியில் தேர்ந்தெடுக்க வைத்து விட்டு, நாற்காலியில் அமர்ந்து ஆட்டம் போடலாம் என்று நினைக்கும் கணவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குனர்  செல்ல அய்யாவு.  குழந்தைகள் தற்காப்பு கலையை படிக்கட்டுமே, அதுவும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று லிசி ஆண்டனி விஷ்ணு விஷாலிடம் பேசும் வசனம், இதோ படம் வெளியாகும் அன்று நிஜமாகி இருக்கிறது.  அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது, அதுவும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியான நாளன்று.

நீதிமன்றத்தில் நீதிபதியாக வரும் ரம்யா கிருஷ்ணனும், கணவன் மனைவிக்குள் நடக்கும் ரெஸ்லிங் போட்டிக்கு நடுவராக வரும் யோகி பாபுவும் குறைந்த காட்சியிலே வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் இதுவே என் கட்டளை கட்டளையே என் சாசனம் என்று தனது ட்ரேட் மார்க் வசனத்தை பேசி ரம்யா கிருஷ்ணனும், கட்டா குஸ்தி போடு போடுவதற்கு முன் வீட்டில் கட்டில் குஸ்தி போட்டு இருக்கிறார்கள் என்று யோகி பபுவும் டைமிங் ஆக பேசி கலகலப்பு ஊட்டுகிறார்கள்.

இப்படி படத்தில் ஒவ்வொரு ஃபிரேமையும் ரசிக்கும் அளவிற்கு இயக்குனர் செல்ல அய்யாவுவும் , ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரனும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும், சம்பந்தப்பட்ட காட்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கும் நடிகர்களும் அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.

சமுதாயத்திற்கு தேவையான, பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தேவையான கருத்துக்களை மையமாக வைத்து அற்புதமான ஒரு பொழுதுபோக்கு படமாக கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை தயாரித்த வகையில் ஐசரி கே கணேஷ், விஷ்ணு விஷால் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

குடும்பத்தோடு பார்த்து மகிழ, குறிப்பாக குழந்தைகளுடன் பார்த்து மகிழ வேண்டிய படமாக கட்டா குஸ்தி 2 வெளியாகி இருக்கிறது!