பியார் ப்ரேம கல்யாணம்

Rating 4/5

4

a K Vijay Anandh review

இளன் எங்கே இருந்து கதை பிடிக்கிறார் என்பது இருக்கட்டும்…. எங்கே இருந்துய்யா கதாநாயகிகளை  பிடிக்கிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அதுவும் அவர்கள் மிகவும் அழகாக இருப்பதோடு,  இளனின் இளமை துள்ளும்  திரைக்கதைக்கும் அற்புதமாக ஈடுகொடுக்கிறார்கள்.

அப்படித்தான் இந்த சான்வி மேக்னாவும், அப்படி ஒரு அழகு, சோசியல் மீடியா பிரபலம், அதுவே கிட்டத்தட்ட தொழில்முறை ஆகிவிட்ட  வாழ்க்கை, கூடவே ஒரு உதவியாளர் என்று தான் கண்ணால் பார்ப்பதையெல்லாம் இந்த உலகமும் பார்க்கவேண்டும் என்கிற  நல்லெண்ணத்துடன்  பொசுக்கு பொசுக்கு என்று வீடியோ எடுத்து வெளியிடும் அவரிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார், இளன். ஒரு வீடியோவில் அவரை சின்னாபின்னாமாக்க  நினைத்து , கடைசியில் அவரிடமே சிக்கிவிடுகிறார். சான்வி மேக்னா, ஒரு மேக்னடிக் போல ரசிகர்களை இழுத்து பிடித்துக்கொள்கிறார் படம் முழுவதும்.

என்ன ஆளுக..? ஏது ஆளுக ? என்று  ராதிகா கேட்டு முடிப்பதற்குள்  நடந்து முடிந்து விடுகிறது இளன் மற்றும் சான்வி மேக்னாவின் திருமணம்.

அதன் பிறகு இளன் வைத்திருக்கும் டிவிஸ்ட் தான் வித்தியாசமான திரைக்கதை.

நமது இளம் படைப்பாளிகள் என்னமா யோசிக்கிறாங்க என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக இந்தப்படம் வெளிவந்திருக்கிறது.

போங்க்டா உங்க …புகுந்த வீடும் வேணாம்.. பொறந்த வீடும் வேணாம்… தனிக்குடித்தனம் போறோம்டா என்று கிளம்புவது யதார்த்தமான முடிவு.

என்னங்கடா இது  நமக்கே டஃப் கொடுக்கிறாய்ங்க என்று யோசித்திருப்பார் ராதிகா, எத்தனை டிவி சிரியல்களை  தயாரித்திருக்கிறார்!!

நாதஸ் தாத்தாவாக செந்தில், அவருக்கேவா..!! அந்த இன்னொரு சிகரெட் காட்சி…

யோகி பாபு தன் மனைவியை மிரட்டும் காட்சிகள், அவர் திருந்தும் காட்சி, உனக்கு பிடிச்சத செய்யலயா… உன்னை எனக்கு பிடிக்கும்னு தான் எல்லாம் செய்யிறேன்… என்று அவரது மனைவி கூறும் காட்சி எல்லாமே கச்சிதம்.

முதல்வன் படத்தின் காட்சிகளை கட்சிதமாக கோர்த்திருப்பது ரசிக்க முடிகிறது.

பெண் மனைவியாக இன்னொரு வீட்டிற்கு செல்வதும், மகனுக்கு தாயாக இருந்து – மாமியாராக இன்னொரு பெண்ணை வரவெற்பதும் தான் உலக வழக்கம். அது மாறாது!!