சத்தியவான் சாவித்திரி

Rating 4/5

37

a K Vijay Anandh review

கணவன்கள் சத்தியவான்களாக இருந்துவிட்டால், அக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும்,  அவர்களது மனைவியர் சாவித்திரிகளாய் இருந்து  எமனிடம் இருந்து அவர்களை காப்பாற்றுவார்கள்.  ஆனால், அவனே சத்தியம் தவறி சத்தியவான்களாக இல்லாவிட்டால்,  கலியுக் சாவித்திரிகள் தாங்களே அவர்களுக்கு எமனாகவும் மாறிவிடுவார்கள்.

இது தான் இந்தப்படத்தின் ஒரு வரிக்கதை.

பிரவீன் எஸ் விஜய்,  நமது தேசத்தின் பெருமையான சத்தியவான் சாவித்திரி நாடகக்காட்சியை காண்பிக்காமல் நேரடியாக, கீர்த்தி  சுரேஷ்  கதைக்கு வந்திருக்கலாம். ஆனாலும்,  சாவித்திரியாக எமனிடம் போராடி தன் கணவனை மீட்கும், பிரிகடா நடிக்கும் நாடகக்காட்சியில் இருந்து கதையை ஆரம்பித்து, அதனை கச்சிதமாக படத்தின் இறுதியில் கோர்த்த விதம் அருமை.

அதேநேரம் அந்த மேடை நாடகத்திற்கு ஏற்ற அற்புதமான இசையில் மிரட்டும் சாம் சி எஸ்ஸின் இசை, படம் முழுவதும் தொய்வே இல்லாமல் அட்டகாசமாக பயணிக்கிறது. இது ஒரு கோர்ட் டிராமா அப்படி என்ன ஸ்கோர் செய்ய வாய்ப்பு இருந்துவிடப்போகிறது என்று தான் பலரும் யோசிப்பார்கள். ஆனால், சாம் சி எஸ் தன்  இசைக்குள் , அந்த கோர்ட் டிராமா நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறார்.

ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாக அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ், இது வரை எந்த வழக்கிலும் தோற்காத  சீனியர் வக்கீல் மார்கண்டேயன்  – மிஷ்கினை தனது துடிப்பான  வாத்திறமையால் தோற்கடிக்கும் வக்கீல் வேடத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவ்வப்போது அவர் காட்டும் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புகள் அச்சு அசலாக விஜயை  பிரதிபலிப்பது ஆச்சிரியத்திலும் ஆச்சிரியம். அட ஆமாங்க, தற்போதைய முதல்வர் சி ஜோசப் விஜய் நடித்த பல காட்சிகளில் இருக்கும் சின்ன சின்ன சேட்டைகளை அர்புதமாக இமிடேட் செய்திருக்கிறாரா அல்லது இயல்பாக வந்திருக்கிறதா என்கிற அளவிற்கு கிர்த்தி சுரேஷ் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

மார்கண்டேயன் மிஷ்கினிடம் இருந்து  கீர்த்தி சுரேஷிடம் ஒட்டிக்கொள்ளும் பால சரவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பை ஊட்டுகின்றன.

கலகலப்பும் விறுவிறுப்புமாக செல்லும் முதல்பாதி, வழக்கமான ஒரு திருமணத்திற்கு முன்னதான  ஒரு காதல், அதன் பிறகு டிவி சீரியல் போன்ற திட்டமிடல்கள் என்று கொஞ்சம் சறுக்கினாலும்,  கீர்த்தி சுரேஷின் கெத்தான நடிப்பும் சாம் சி எஸ்ஸின் அற்புதமான இசையும அருள் வின்செண்ட்டின் அட்டகாசமான ஒளிப்பதிவும் , இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் மற்றும் எடிட்டர் பிரசன்னா ஜிகே யின் மாயஜாலமும் ரசிகர்களை சீட் நுனியில் அமரவைத்துவிடுகின்ரன.

இவள் கலியுக சாவித்திரி, ஆனால், தப்பு செய்த கணவனை   தர்மதேவனிடம் காவு கொடுக்கும் சாவித்திரி!