அப்பா குட்டி

Rating 4/5

139

a K Vijay Anandh review

சாதாரண மக்கள் செய்தித்தாள்களை படித்துவிட்டு கடந்து போய்விடுவார்கள். மிகவும் சாதாரண மக்கள், செய்தித்தாள்களை பஜ்ஜிகளில் உள்ள எண்ணெயை பிரித்து எடுக்க பயன்படுத்துவார்கள்.

ஆனால், படைப்பாளிகள் அப்படியல்லவே! ஒரு சின்ன புள்ளியை பார்த்துவிட்டால் கூட அழகான கோலமாக்கி விடுவார்கள். அப்படி இருக்கும் போது சுவராஸ்யமான செய்தியை படிக்க நேர்ந்தால் விட்டுவிடுவார்களா..?

சமூகப்பொறுப்பு, பெண்ணுரிமை, குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றை கலந்து  அத்துடன் ஒரு ஆணின் தியாகத்தையும் சேர்த்து அதியற்புதமான திரைக்கதை அமைத்து அப்பா குட்டி எனும் உணர்ச்சி மிக்க படத்தை வழங்கியிருக்கிறார்கள்.

பழத்திற்காக கோவித்து கொண்டு பழனிக்கு வந்து  மலையில் கோலோடு நின்றுகொண்டு அவ்வைப்பாட்டியிடம்  எனக்கென்று ஒரு நாடு, என் மக்கள் , என் மொழி என்று இருந்துவிடுகிறேன் என்று முருகன் சொல்வதைப்போல , தமிழ் சினிமாவில் தனி ஆவர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு சில நடிகர்களுள் முதன்மையானவர் விஜய் ஆண்டனி. இவருக்காகவே எழுதப்பட்ட கதைகளையே தேர்ந்தெடுக்கிறார்,  அதில் எவ்வளவு பெஸ்டாக அனைத்தையும் கொடுக்க முடியுமோ, இசை, நடிகர்கள் தேர்வு, எடிட்டிங் என்று அனைத்தையும் கொடுத்து விடுகிறார்.

பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகள் மட்டும் அனாதைகள் அல்ல, பெற்றோர்கள் இருந்தும் அவர்களது ஸ்பரிசம் கூட கிடைக்காத குழந்தைகளும் அப்படித்தான். துரதிஷ்டவசமாக  அப்படிப்பட்ட குழந்தைகள் அதிகம் இருக்கும் இந்த உலகில், தனக்கு சம்பந்தமே இல்லாத குழந்தையை தன் மகளாக எடுத்து வளர்ப்பது மட்டுமல்ல, அக்குழந்தைக்கு ஒன்று என்றால் எந்த எல்லைக்கும் சென்று அதைக் காப்பாற்ற போராடும் தகப்பனாக,  சாமியாக அல்லது தகப்பன் சாமியாக தாண்டவமாடியியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

இரண்டாவது பாதியில், இவருக்கு பெரிய அளவில் வசனங்களே இல்லை,  தியாவின் உயிரைக்காக்க சம்பந்தப்பட்டவர்களை கையெடுத்து கும்பிட்டு காலில் விழுந்து கதறுவதைத் தவிர. அந்த இடங்களில் தான் ஒரு ஹிரோ  என்றெல்லாம் டைரக்டரிடம் விவாதித்து கொண்டு இருக்காமல், முற்றிலும் சரணடைந்துவிடுகிறார்.

ஒரு சில காட்சிகளில் வரும் தனது காதலுக்காக விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்த நடிகை, ரசிகர்களுக்காக படம் முழுவதும் வருவதற்காக தேர்ந்தெடுத்த பிரீத்தி அஸ்ராணி என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும்  தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவரவர் பிடிவாதங்களுக்கு அவரவருக்கு நியாயமான காரணங்களும் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, ஒரு பச்சைக்குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறதா என்பதே கிளைமாக்ஸ்.

இரண்டாவது பாதியில், முருகானந்தத்தின் நகைச்சுவை அப்பா குட்டிக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது, அதுவும் பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல், போகிற போக்கில் மனிதர் செய்யும் அலப்பறைகள் அட்டகாசம்.

தியாவாக நடித்திருக்கும் லிதன்யா சிறப்பாக நடித்திருக்கிறார். அஞ்சலி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்த  கிளாசிக் படங்களின் வரிசையில்  மு.மாறனின் இயக்கத்தில், லிதன்யாவின்  அப்பா குட்டியும்  இடம் பிடிக்கும்!