இருமுடி

Rating 5/5

8

a K Vijay Anandh review

இருமுடி, இந்தப்படம் நமக்கு பாடல்கள் மூலம் அறிமுகமாகியிருந்த நிலையில்,  சுவாமி ஐயப்பன் கதையோ ? பக்தி படமோ ?  என்கிற மாதிரியான ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இது, வருடாவருடம் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் ஒரு எளிய கிராமத்து மனிதன், குடும்பத்தலைவன் பற்றிய, அவன் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய படம்.

அதிலும், மாலை போட்டிருக்கும் 41 நாட்கள் தவிர்த்து வருடம் முழுவதும் மதுவும் மாமிசமுமாக இருக்கும் சராசரி மனிதனை பற்றிய படம்.

ஆனால், அந்த சராசரி மனிதன் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாக வரும் போது, ஒரு அற்புதமான மனிதனாக மாறிவிடுகிறான்.

” எனக்கு  பிறந்த பெண்  மட்டும் எனக்கு மகள் அல்ல, இந்த ஊரில் இருக்கும் அத்தனை பெண் பிள்ளைகளும் எனக்கு மகள்கள் தான் ” என்கிற  உன்னதமான  உயர்வான  வாழ்க்கை வாழும் அற்புத மனிதன் அல்லது அற்புதமான தகப்பன்.

” வீட்டை விட்டு வெளியே சென்றால் செல்லும் ஒவ்வொரு இடத்திலும், தெருவுக்குள்ள, ஊருக்குள்ள ஆத்துக்கு அந்த பக்கம், இந்தப்பக்கம் என்ன நடந்தாலும் அப்பாவிடம் சொல்லவேண்டும்…” என்று பெண் பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்கும் இடம் அருமை.

ரவிதேஜா,   கலையை ஆத்மார்த்தமாக நேசிக்கும் எந்த ஒரு கலைஞனுக்கும் அவனது காத்திருப்பு வீண்போகாது என்பது சத்தியமான உண்மை.  ரிஷப் ஷெட்டிக்கு ஒரு காந்தரா மாதிரி ரவிதேஜாவுக்கு  இந்த இருமுடி. ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக,  ஐயப்பன் பஜனை பாடல்களில் அவர் போட்டிருக்கும் ஆட்டம், திரையரங்குகளில் எதிரொலிக்கிறது.

ஜீவி பிரகாஷ் குமாரின் இசையில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை என்றால், அதற்கு நடனம் அமைத்த  பாபா பாஸ்கர், VJ சேகர் ஆகியோரின் பங்களிப்பும் மகத்தானது. பாலாஜி வேணுகோபாலின் இயல்பான வரிகளில் வரும் பக்தி பாடல்கள் அருமை. இந்த சபரி மலை சீசனில் ஆரம்பித்து இனி ஒவ்வொரு வருடமும் இந்தப்படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும், மண்டல பூஜை, கன்னி பூஜை, இருமுடி கட்டு, படி பூஜை நடைபெறும் ஐயப்பன் சாமி வீடுகளிலும்.

மணிகண்டா என்கிற பெயருடன் வளரும் ரவி தேஜா மகளான நக்ஷத்திரா அப்பாவிற்கு ஏற்ற மகளாக , எந்த  சூழ்நிலையிலும் எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அப்பாவின் அறிவுரையை பின்பற்றுவதில் உறுதியாக நிற்கும் இடங்கள் அருமை.

பிரியா பவானி சங்கர்,  டக்குனு ஒரு 1000 கோடி வசூல் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்து  குடும்ப தலைவியாக, தானுண்டு தங்களது வாழைத்தார் வியாபாரம் உண்டு என்று வாழும் ஒரு அன்பு மனைவியாக, அன்பு அம்மாவாக இயல்பாக நடித்திருக்கிறார்.

பள்ளிக்கூடங்களில் ஆய்வுக்கு வருகிற அரசியல்வாதிகளை நினைத்தால் பயமாக இருக்கிறது.  ஒன்று அழகான  சிறுமிகளை அவர்களுக்காக பிக் பண்ண செல்கிறார்கள் அல்லது அவர்களின் பிரியமானவர்களுக்கு விருந்தாக்க பிக் பண்ண சொல்கிறார்களோ என்கிற பயம் தொற்றுக்கொள்கிறது . இந்தப்படத்தில் வரும் MLA கதாபாத்திரத்தை பார்க்கும் போது.

நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த சுவாசிகா -க்கு காமா பிடித்த அதிலும் சின்ன பிள்ளைகள் மீது வெறி கொண்ட MLA க்கு  மாமா வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்து பயமுறுத்தியிருக்கிறார்.

பெண் குழந்தைகளுக்கு பயம் ஒரு ராம ரக்ஷா என்று சொல்லி வளர்க்கும் குருசாமி சாய்குமார் இறுதியாக தோற்று போகிறார். அவர் கருத்திலும், வாழ்க்கையிலும்.  அவரால் நக்ஷத்திரா இறந்து போவது போன்ற காட்சியை இன்னும் நம்பும்படியாக வைத்திருக்கவேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பயம் அல்ல ராம ரக்ஷா அவர்களது தைரியம் தான் ராம ரக்ஷா என்று ரவி தேஜா சொல்லும் இடங்கள் அருமை, அது தான் உண்மையும் கூட.

மிகவும் இயல்பான வசனங்களில் இந்தப்படத்தை அனைவருக்கும்  கொண்டு சேர்க்க உதவியிருக்கிறார் தமிழ் வசனகர்த்தா விஜய் பாலாஜி.

இருமுடி, இந்தப்படம்  சபரிமலைக்கு மாலைபோடும் இந்துக்களுக்கான படம்  மட்டும் அல்ல. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும், பெண் குழந்தைகளை பெற்றிருக்கும் ஒருவொரு தகப்பனுக்கும், பெண் குழந்தைகள் வைத்திருக்கும் ஒவ்வொரு குடு.பத்திற்குமான படம்.

தேசத்திற்கு எதிராக ஆங்காங்கே புற்றீசல் போல கிளம்பியிருக்கும்  டுபாக்கூர்கள் அல்ல எங்கள் GenZ, தேசியமும் தெய்வீகமும் சமூகப்பொறுப்பும் நிறைந்தவர்கள் எங்கள் GenZ என்று உலகுக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷிவ நிர்வானா.

இறுதிக்காட்சியில் மணிகண்டா பேசும் வசனம், இந்தப்படத்திற்கும் பொருந்தும், “நான் உனக்கு மகளாக பிறந்தது ஒரு காரண காரியமாகத்தான்…”  அதைப்போலவே, செக்குலர்  என்கிற போர்வையில் சனாதானத்திற்கு எதிரான பரப்புரைகள் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் இந்தப்படமும், இறைவனின் செயல் தான்.

திரையரங்குகளில் இருமுடி படத்தின் பாடல்களுக்கு நடனமாடி மகிழும் ஒவ்வொரு GenZ களும்  அதற்கு சாட்சி.

இரு முடி,  1000 கோடி கிளப்பில் இணையவிருக்கும் இன்னொரு தென்னிந்திய திரைப்படம்.