a K Vijay Anandh review
ஒரு முகூர்த்த நாளில் , அந்த நாளின் முழு இரவு வரை நடக்கும் கதை தான் மொத ராத்திரி.
அதுக்காக, ஏதோ கசமுசா படமாக இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மொத ராத்திரி நடக்கும் கலாட்டா தான் முழுப்படமும்.
விருப்பமில்லாமல் தாலிகட்டும் ரிஷிகாந்த், விருப்பமில்லாமல் கழுத்தை நீட்டும் அனிஷ்மா அனில்குமார். இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சினைகளும் இவர்களால் இவர்கள் குடும்பத்தாருக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளும் அன்றிரவு யாரையும் தூங்க விடாது, படம் பார்க்கும் ரசிகர்களையும். அந்தளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு பிரேமை உம் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
மாப்பிள்ளை வந்திடுவானா என்று காத்திருக்கும் மணமகன் வீட்டார், இவளுக்கு கல்யாணம் நல்லபடியா நடந்துடுமா என்கிற டென்ஷனில் இருவீட்டாருக்கும் இடையிலான அந்த நீண்ட முதல் காட்சி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கிட்டத்தட்ட 7-8 நிமிடங்களுக்கும் மேலாக ஒரே ஷாட்டில் ஓடும் அந்த காட்சியில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் இந்த இளம் வயதிலேயே தனது முதல் படத்திலேயே அப்படி ஒரு காட்சியை அற்புதமாக இயக்கியிருக்கும் ராஜா கருப்பசாமிக்கும் பாராட்டுகள்.
அந்த காட்சி மட்டுமல்ல, முக்கியமான நீளமான பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருகிறது போலும்.
24 மணி நேரங்களில் நடக்கும் இப்படத்தை 20 மணி நேரங்களில் படமாக்கியிருக்கிறார்களோ என்கிற சந்தேகத்தை வரவழைக்கும் அளவிற்கு, எழெட்டு காட்சிகளிலேயே படம் முடிந்துவிடுவது போன்ற பிரமை.
திடீரென்று ஒரு படம் நாயகனின் வாழ்க்கையை மாற்றும், ரிஷிகாந்திற்கு இந்தப்படம். ஏற்கனவே சந்தித்த காதல் தோல்வி, காதலி மறைவினால் ஏற்பட்ட மனக்காயம், இப்படி குடும்பத்தார் செய்து வைத்த கல்யாணத்திலும் இன்னொருவனுடன் ஓடிப்போக காத்திருக்கும் – காலையில் தாலி கட்டிய மனைவி என்று சந்திக்கும் பிரச்சினைகளையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சுமை தாங்கியாக ரிஷிகாந்த் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அனிஷ்மா அனில்குமார், ஒரு குட்டி நடிப்பு ராட்சசியாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார். அம்மா அவ்வளவு கண்டிப்பு நான் என்ன தான் செய்யிறது என்று தேம்பி தேம்பி அழுது கொண்டே பேசும் இடத்திலும், வேண்டா வெறுப்பாக மணமேடையில் குத்தாட்டம் போடும் இடத்திலும் என்று ஒவ்வொரு காட்சிகளிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக நடித்திருப்பவரும் மச்சான் ஆக நடித்திருக்கும் அப்துல் லீயும் இந்தப்படத்தின் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம்.
மரியாதையை கேட்டு கேட்டு வாங்கி மொத்தமாக அவமானப்படும் உறவினர் கதாபாத்திரத்தில் பக்ஸ் பகவதி பெருமாள், கடைசியில் மனைவியிடமும் அரை வாங்குகிறார்.
ஒரு நெல்லை சீமை குடும்பம், குடும்ப திருமணம்,நடுவில் ஒரு சாதிப்பாகுபாடு அதற்கும் ஒரு நல்ல பினிஷிங் என்று அந்த பகுதி மக்களின் வாழ்வியலை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
பாடலாசிரியர் முத்தமிழுக்கும் ஒரு நல்ல கதாபாத்திரம், கல்யாண விட்டில் மைக் பிடித்து பாடுவதிலிருந்து, இரண்டு குடிகார கும்பல்களிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவது வரை சிறப்பாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம், ,ஒரே ஒரு முண்டு கட்டிக்கொண்டு குலதெய்வ கோயில் குருக்களாக வரும் சேத்தன் தனி ஆவர்த்தனம் ஆடியிருக்கிறார்.
என்ன மாதிரி யாரும் உன்னை காதலிக்க முடியாது… என்று வசனம் வேண்டுமானால் பேசிக்கொள்ளலாம் ஆனால அது வாழ்க்கைக்கு உதவாது என்று யதார்த்தை சொல்லி GenZ மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் ராஜா கருப்பசாமி, இன்னொரு GenZ.
இந்த வாரம் மைத்ரி மூவி மேக்கர்சுக்கு ஜாக்பாட் வாரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு பக்கம், இருமுடி இன்னொரு பக்கம் மொத ராத்திரி என்று ரசிகர்கள் கொண்டாடும் வெவ்வேறு வகை படங்களை கொடுத்திருக்கிறார்கள்.