One Man

Rating 5/5

24

a K Vijay Anandh review

ஆகஸ்ட் 21 இல் வெளியான  இருமுடி, மொத ராத்திரி, ராம்  அண்ட் லீலா ஆகிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக ஒன் மேன் இருக்கின்றது என்று சொன்னால் அது பொய் அல்லது உண்மையாக இருக்க முடியாது

ஆம் , சினிமா கண்டுபிடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் வெளியான பல கோடி திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் ஒன் மேன் என்று சொன்னால் அதுதான் உண்மையாக இருக்கும்.

இதுவரை வந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் என்று சொல்வதைக் காட்டிலும் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு இதுபோன்ற ஒரு படம் ராஜ்குமாரை தவிர இன்னொருவரால் எடுக்க முடியுமா என்னும் அளவிற்கு வெளியாகி இருக்கும் ஒரு படம் ஒன் மேன்.

படம் முடிகிறது, ரோலிங் டைட்டில் ஆரம்பிக்கின்றது, ஒரு பக்கம் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் இசை என்று சினிமாவின் 24 கிராஃப்டுகளும் சினிமாவிற்கு பக்கபலமாக இருக்கின்ற அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் இருந்து 74 கிராப்ட் களுமாக ஓடிக்கொண்டே இருக்கின்றது இன்னொரு பக்கம் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு பெயராக சங்ககிரி ராஜ்குமார் பெயர் நிலைத்து நிற்கின்றது.

ஆம், சங்ககிரி ராஜ்குமார் இவர் ஒருவரே இந்த படத்தின் அத்தனை துறைகளையும் கவனித்துக் கொண்டு ஐந்து முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளிட்ட படத்தில் தோன்றும் அத்தனை கதாபாத்திரங்களாகவும் இவரே இவர் ஒருவரே நடித்தும் இந்த படத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

ஒரு காட்சி, திரையரங்கில் படம்  பார்த்துக் கொண்டிருக்கும் மெக்கானிக் ராஜ்குமாருக்கு இன்னொரு ராஜகுமாரிடமிருந்து ஃபோன் வருகிறது. போனை எடுக்கும் மெக்கானிக் ராஜ்குமாரை காட்டினால், அட அவருடன் அந்த அரங்கம் முழுவதும் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் ராஜ்குமாரின் பல்வேறு வடிவத்தினரே.

அதிகம் கூட்டமில்லாத ஒரு அரங்கை அவர் காட்டி இருக்கலாம் ஆனாலும் ஹவுஸ்புல் ஆன ஒரு அரங்கில் ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொரு விதமாக ராஜ்குமாரை அமர வைத்த விதம் இந்த படத்தின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றுப் பதம்.

நான்கு சாதனையாளர்கள் ஒரு டிரைவர் என்று விருது பெரும் நிகழ்ச்சிக்கு பயணிக்கிறார்கள். நடுவே தவறுதலாக ஒரு ஆராய்ச்சி கூடத்திற்குள் நுழைய அங்கிருந்து கதை சூடு பிடிக்கின்றது.

அம்மாவாக வருபவரும் ராஜ்குமார், வீட்டில் வேலை செய்யும் வளர்ச்சி குறைந்த நபரும் ஒரு ராஜ்குமார், ஏன் ராஜ்குமாரின் காதலியாக வருபவரும் ஒரு ராஜ்குமார் என்று படம் முழுவதும், ராஜ்குமார் ராஜ்குமார், ராஜ்குமார் தான்.

உலகம் முழுவதும் பயணிக்க ஆசைப்படும் ராஜா மற்றும் நண்பர்கள், திரைக்கதைக்கு வசதியாக உலகத்தில் உள்ள அத்தனை பேரையும் இன்விசிபில் ஆக்கிவிட்டு பயணிக்கிறார்கள். எல்லோரையும் காட்டுவதாக இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு கோடி ராஜ்குமார்களை உருவாக்கி இருக்க வேண்டுமே!

பிரம்மாண்டமான கட்டிடங்கள் பிரம்மாண்டமான பாலங்கள் நூற்றுக்கணக்கான கார்கள் ஹெலிகாப்டர் என்று ஹாலிவுட் படங்களை மிஞ்சும் காட்சி அமைப்பு மற்றும் ஆக்சன் என்று அசத்தி இருக்கிறார் ராஜ்குமார்.

சராசரியான ஒரு படைப்பாளிக்கு கனவிலும் எட்டாத ஒரு முயற்சி, அதேநேரம் புதிதாக திரைப்படத்துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அசாத்திய நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று சொல்லலாம்.

மிகவும் குறைவான எண்ணிக்கைகளில் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் திரையரங்குகள் நிச்சயம் போதுமானதாக இருக்காது.

இப்படிப்பட்ட படங்களுக்கு பிரத்யேக சலுகைகள் அளிக்கப்பட்டு, முழுவதுமாக வரி விலக்கு அளித்து, திரையரங்குகளும் நேரடியாக இந்த படத்தை தயாரித்த ராஜ்குமார் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு, குறைந்தபட்சம்  மூன்று நாட்கள் 300 திரையரங்குகள் என்கிற அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.

அல்லது, ஒரே ஒரு நாள் தமிழகத்தின் அத்தனை திரையரங்குகளும் இந்த படத்தை வெளியிட்டு வருமானத்தை திரையரங்கு உரிமையாளர்களும் ராஜ்குமார் பங்கு போட்டுக் கொள்ளலாம்.

இந்தப் படத்தைப் பற்றிய முன்கூட்டிய விளம்பரங்களுடன்!

இப்படிப்பட்ட விஷயங்களை செய்வதற்கு ஒரு மனம் வேண்டும், அந்த மனம் இன்றைய முதல்வர் அதுவும் திரைப்படத்துறையில் இருந்து வந்திருக்கும் முதல்வர் விஜய்க்கு இருக்கும் என்று நம்புவோம்!

ஒன் மேன், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இந்திய படைப்பாளிகளுக்கும் பெருமை!