மண்டாடி

Rating 4.5/5

25

a K Vijay Anandh review

2009 இல் இது போன்றுதான் விளையாட்டு, கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படம், வெண்ணிலா கபடி குழு. ஆட்டத்தில் ஒருவனாக, பரோட்டா சூரியாக அறிமுகமாகிறார்.

2026 இல், வீரதீர சாகசங்கள் நிறைந்த கடல் பாய்மரப்படகு போட்டி, இதில் இவர் தான் ஆட்டநாயகனே!  சூரியின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது, அவரது தன்னம்பிக்கை சினிமா மீது வைத்திருக்கும் காதலே அதற்கு காரணமாக இருக்கமுடியும்.

நண்பனின் துரோகத்தால், காதலியின் சாபத்தால்,  முகவை மைந்தனாக இருந்த முத்துக்காளி சூரி, சென்னை மைந்தனாக தீம் பார்க்கில் நீச்சல்  குளத்தில் குளிக்கும் மக்களுக்கு பாதுகாவலாராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கடலில், வளர்ந்தவருக்கு நீச்சல் குளம் என்பது டம்பளர் தண்ணீரை விட சிறியது தான். ஆனாலும், துரதிஷ்டவசமாக இதில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்ட்ருப்பவரின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு மாற்றம், முகவை மைந்தன் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறான்..

அவர் சீமைராஜாவிலேயே சிக்ஸ் பேக் கொண்டுவந்துவிட்டார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு, அந்த மண்ணின் பேச்சுவழக்கை கொஞ்சம் பிடித்து ஜமாய்க்கவேண்டும்.

இயக்குனரும், அந்த ரிஸ்க் எடுக்காமல் சாதாரணமாக பேச்சுத்தமிழையே  அனைத்து கதாபாத்திரங்களையும் பேசவைத்திருக்கிறார். சூரியை மிகவும் குறைவாக பேசவைத்து நிறைவாக நடிக்க வைத்திருக்கிறார்.

அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரைகளில் வீடுகள் கட்டியிருப்பதை சென்னை வாசிகள் , நகர வாசிகள் பார்த்திருப்பார்கள். முதுவை மைந்தர்களின் ஊரை கடல் வந்து முத்தமிடுகிறது.  வீட்டை விட்டு வெளியே வந்தால் கடலில் தான் கால் வைக்கவேண்டும் என்கிற அளவிற்கான அட்டகாசமான ஒரு  நிலப்பரப்பு.  வெளியே வந்து சைக்கிளில் ஏறுவது போல படகில் ஏறவேண்டும், அடடா அற்புதம் ஐயா!

பாய்மர படகுப்போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் பிரமாண்டமாகவும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வண்ணமும் படமாக்கப்பட்டிருக்கின்றன.  ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பெரிய பாராட்டுகள், உயிரை கொடுத்து வேலை செய்திருக்கிறார்கள். கடலுகுள் வரும் சுழல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அற்புதம். ஜீவி பிரகாஷ் குமாரின் இசை பங்களிப்பும் பிரமாதம்.

மஹிமா நம்பியார், பாவாடை தாவணியிலும் 20 வயது மகனுக்கு அம்மாவாகவும் அற்புதமாக பொருந்திப்போகிறார்.  அவரது கணவராக வரும் ரவிந்திரா விஜய், வில்லனாக  வரும்  சுஹாஸ் என்று அனைவஎரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

தேவர் மகனில் ஒரு கையை இழந்த வடிவேலு கதாபாத்திரம் போன்று ஞானம் கதாபாத்திரம் பத்மனுக்கு, வில்லனுக்கு பக்கபலமாக வலம்வருகிறார்.

சத்யராஜ்,  மச்சமுனி என்கிற பெரியமனிதர் வேடத்தில் சில காட்சிகளே ஆனாலும் சிறப்பாக  வந்துபோகிறார். குறிப்பாக அவரது செம்மப்படையும் நரையும் கலந்த சுருட்ட முடி ஹேர்ஸ்டைல் அந்த கதாபாத்திரத்திற்கு  மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது, கவனிக்க வைத்தது.

இந்தியாவில் நீளமான கடற்கரை , பல லட்சம் மீனவர்கள் கொண்ட மாநிலம் தமிழகம்.  அதுமட்டுமல்ல, தமிழர்கள்  ஓடம், பர்சில், மிதவை, க்ட்டுமரம், வள்ளம், வத்தை, தோணி, நாவாய் என்று ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஏற்ப பல்வேறு வடிவங்களில் சிறியதும் பெரியதுமாக படகுகள் மற்றும் கப்பல்களை கட்டிய பெருமைக்கு சொந்தக்காரர்கள், சங்க காலம் தொட்டே! அவ்வளவு ஏன் முதன் முதலில் கடற்படயை உருவாக்கியவர்களே  தமிழர்கள் தாம்! அபப்டிப்பட்ட மூத்த குடிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர்களின் வீரத்தை  கடல் ஆளுமையை பறைசாற்றும் விதமாக, மண்டாடியை எழுதி இயக்கியிருக்கும் மதிமாறன் புகழேந்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும், தயாரித்த எல்ரெட் குமாருக்கும் பாராட்டுகள்.

கார் ரேஸ், பைக் ரேஸ் எல்லாம் நவீன காலத்தின் பிரதிபலிப்பு, பாய்மர படகு போட்டி என்பது, நமது பாரம்பரியத்தின் ஒரு அங்கம், ஜல்லிக்கட்டு போல அதுவும் கடலில் ஒரு வீர தீர சாகச விளையாட்டு.

அஜித் குமார் அணி பங்கேற்கும் கார் ரேஸை தொடங்கி வைக்க லண்டன் சென்றிருக்கும் தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய், மண்டாடி பார்க்கவேண்டும். ஜல்லிக்கட்டு போல  ஆண்டுதோறும் தமிழக கடலோர பகுதிகளில் பாய்மரப்போட்டிகள்  நடைபெற ஆவண செய்யவேண்டும்.  மீன்வளத்துறை அமைச்சரும் திரைப்பட இயக்குன்ருமான ஸ்ரீ நாத் இந்த விஷயத்தை  அவரது நெருங்கிய  நண்பர் தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜயிடம் கொண்டு செல்ல வேண்டும்!

மண்டாடி,  நம் மண்ணின், கடலின், மீனவர்களின் பெருமை!