பெத்லேகம் குடும்ப யூனிட்

Rating 4/5

12

a K Vijay Anandh review

இப்படி ஒரு பக்கத்து வீட்டு காதலைப் பார்த்து பல வருடங்கள் ஆகியிருக்கும் என்றால் அது மிகையாகாது. கேரளாவில், ஒவ்வொரு சர்ச்சுகளுக்கு செல்பவர்களும் அந்தந்த சர்ச்சுகளின் குடும்ப யூனிட்டுகளாக அறியப்படுவது சுவராஸ்யமாக இருக்கிறது.  தசம பாகம் மேலும் சர்ச்சுக்கு கொடுக்கப்படும் கட்டணங்கள் போன்று காணிக்கையாக கொடுக்கவேண்டி இருப்பதால், ஒரு குடும்பம் ஒரு சர்ச்சு என்று விதிக்கப்பட்டிருக்கிறது போலும்.

அப்படி இரு குடும்பங்கள், இருவரும் பெத்லேகம் குடும்ப யூனிட்டுக்குள் வருபவர்கள்.

காலகாலத்தில கல்யாணம் ஆகாமால், ஏரியாவில் ஒரு செல்லப்பிள்ளையாக கேட்டரிங் நடத்திக்கொண்டிருக்கும்  ஜஸ்டின்  ஆக நவீன் பாலி. பக்கத்து வீட்டிற்கு குடிபுகும் கல்லூரி மாணவி ஆஸ்லே மமீதா பைஜு. இருவருக்கிடையிலும் வயது வித்தியாசம் கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் மலர்கிறது காதல். நாயகனுக்கோ பெரிய தயக்கம், இறுதிவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை.  அதற்காக தம்பி காத்திருப்பாரா?  அவர் காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் போது, அண்ணனின் காதலும் கைகூடுகிறது.

முன்பே குறிப்பிட்டது போல மிகவும் எளிமையான கதைக்கருதான், ஆனால், பக்கத்து பக்கத்து இரண்டு வீட்டாரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அடைத்து வைத்து வேடிக்க காட்டுவது மாதிரி, மிகவும் இயல்பாக அதைவிட அதிக சுவராஸ்யமாக எழுதி இயக்கியிருக்கிறார் கிரிஷ் ஏ டி. அந்த சுவராஸ்யம் குறையாமல் தமிழுக்கு தந்திருக்கிறார் RP பாலா.

விஸ்வநாதன் & சன்ஸில் ஸ்கோர் செய்தது போலவே இதிலும் மமிதா பைஜுவின் ஆதிக்கம் தான். தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போடுகிறார்.

ஒளிப்பதிவு இசை என்று ஜமாய்த்திருக்கிறார்கள்.

வாரவாரம் ரத்தக்களரிகள் தெறித்துக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் , திடீரென ஒரு நந்தவனம் பூத்தது போன்ற உணர்வு இப்படத்தை பார்க்கும் போது நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் , புதுமணத்தம்பதிகளின் முதல் தேர்வாக இந்தப்படம் இருக்கலாம்! கடந்த வாரம் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் வீட்டு புதுமண ஜோடி பி காளிஸ்வர் – எஸ் நித்திலாவுக்கு இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கின்றேன்.

மொத்தத்தில், பெத்லேகம் செல்லமுடியாதவர்கள் , பெத்லேகம் குடும்ப யூனிட்டுக்கு சென்று சிரித்து மமிழ்ந்துவிட்டு வாருங்கள்.