a K Vijay Anandh review
பெருவணிகம் செய்ய கடலில் மூழ்கி முத்தெடுத்த தமிழர்களை, வயிற்றுப்பிழைப்புக்காக கடலில் மூழ்கி காசு பொறுக்க வைத்த இந்த திராவிட மாடல்களை என்னவென்று சொல்வது ?
அரசியலை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
இந்த இராமேஸ்வரம் தவசிமுத்துவின் வாழ்க்கைக்கு வருவோம்.
அதற்கு முன், இந்தப்படத்தை இயக்கிய சஜீவ் பழூர், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வேறு ஒரு மலையாளப்படத்தின் சூட்டிங்கிற்காக இராமேஸ்வரம் வந்த அவர், கோடி தீர்த்தமென்று அழைக்கப்படும் கடற்கரையில் மனிதர்கள் கடலில் மூழ்கி காசு பொறுக்குவதை பார்க்கிறார். அதனை அடிப்படையாக வைத்து அட்டகாசமான திரைகதையை எழுதி, என்ன விலை படத்தை இயக்கி வெளியிட்டும் இருக்கிறார். கடலில் காசு பொறுக்குவது எப்பொழுதும் நடப்பது தான், அது இங்கிருக்கும் படைப்பாளிகளின் கண்ணில் படாமல், மலையாள இயக்குனரின் கண்ணில் பட்டு தமிழப்படமாக வெளியாகி இருப்பது உண்மையிலேயே ஆச்சிரியமான விஷயம் தான்.
அப்படி வயிற்றுப்பிழைப்புக்காக, அன்றைக்கும் கடலில் மூழ்கி காசு பொறக்க ஆரம்பிக்கும் தவசி முத்துவின் கைகளில் ஒரு பதக்கம் கிடைக்கிறது. சில்லரை காசுகளைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படாத தவசிமுத்து, மிகுந்த கண்ணியமாக நடந்துகொண்டு அதனை காவல்துறையிடம் ஒப்படைக்க, அளவுக்கு அதிகமான நேர்மையே அவரது வாழ்க்கையை புரட்டியும் போட்டுவிடுகிறது.அதிலிருந்து அவரும் அவரது குடும்பமும் மீண்டதா என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.
சமூகவலைத்தளங்கள் இல்லாத காலகட்டத்தில், ஏதேனும் குற்றச்செயலுக்காக எங்காவது ஒரு மூலையில் அப்பாவி மனிதர்கள் கைது செய்யப்படுவார்கள். அது பத்திரிகையில் எங்காவது ஒரு மூலையில் பெட்டி செய்தியாக வரும், கொஞ்சம் பேரு படிப்பார்கள், பின் அந்த பேப்பர் போண்டா மடிக்க சென்று விடும்.
ஆனால், சமூகவலைத்தள காலமான இன்று, காலைக்கடன் கழிக்கிறார்களோ இல்லையோ, பார்க்கும் பதிவுகள், செய்திகள், வீடியோக்களுக்கு லைக் ஷேர் கமெண்ட் போடவில்லையென்றால் நமாட்களுக்கு காலைக்கடனே கழிக்க முடியாது! அடுத்த சில மணி நேரத்தில் அந்த செய்தி பல லட்சம் பேரை சென்றடைந்து, எங்கோ ஒரு மூலையில், தன்னையறியாமல் ஏதோ ஒரு தவறு செய்த ஒருவனின் மானம் மாவட்டம், மானிலம், தேசம் , சர்வதேசம் என்று எல்லைகள் கடந்து கப்பலேறிவிடுகிறது.
தீவிரமான சட்டப்போராட்டத்தின் மூலம் அவன் நிரபராதி என்று தீர்ப்பு வந்தாலும், போன மானம் திரும்பி வரவா போகிறது.? அந்த மானத்தின் விலை என்ன ? என்று கேட்டு அசத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.
வித்தியாசமான திரைக்கதை, மிகவும் யதார்த்தமான கோர்ட் காட்சிகள் என்று என்ன விலை, ரசிகர்களை கட்டிப்போடப்போவது உறுதி.
20 வருடங்களுக்கு முன்னால், நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்கிற காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமான கருணாஸ், இதில் கதையின் நாயகன், அதே இராமேஸ்வரம். மனைவி, இரண்டு குழந்தைகள், தங்கை என்று தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழும் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை தன்னுடைய நடிப்பால் அசாத்தியமாக வெளிப்படுத்துகிறார். செய்யாத குற்றத்திற்காக, காவல்துறை தன்னை கைது செய்துவிடுவார்களோ என்று டேபிளுக்கு அடியில் ஒளியும் காட்சிகள் அட்டகாசம். எம்.எஸ் பாஸ்கருக்கு கிடைத்தது போன்று இவருக்கும் தேசிய விருது கிடைக்கலாம்.
டி ஆர் பிக்காக மீடியாக்கள் ஒரு சாமான்யனைக்கூட எப்படி துரத்துகிறது என்று அழகாக காட்டியிருக்கிறார்கள். இன்று மீடியாக்கள் என்றால் அது யூடியூப் சேனல்களும் தான், விஞ்ஞான வளர்ச்சி என்பதா ? மனித குலத்திற்கு வேதனை என்பதா ?
கருணாஸ் மனைவியாக வரும் விஜயலட்சுமி வீரமணி , மிகவும் யதார்த்தமான நடிப்பில் படம் ஒரு லைவ்வாக நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல நீதிமன்ற காட்சிகள் மிகவும் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. நீதிபதிகளாக வரும் டி எஸ் ஆர் ஸ்ரீனிவாசன் முதல் நிழல்கள் ரவி, பூர்ணிமா பாக்யராஜ் வரை அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
மக்கள் முதலமைச்சராக வரும் பிரபு, அட்வகெட் ஜெனரலாக வரும் ஒய் ஜி மகேந்திரா அல்டிமேட்!
கருணாஸ் சார்பாக மிகவும் தீர்க்கமான சட்டப்போராட்டம் நடத்தி வென்று காட்டும் இளம் வழக்கறிஞராக நிமிஷா சஜயன், அற்புதமாக நடித்திருக்கிறார்.
அந்த கோடிக்கணக்கான விலைமதிப்புள்ள பதக்கம், ஒரு தெலுங்கு நடிகையின் மூலம் இராமேஸ்வரம் கடலுக்கு வந்தது என்று அமைந்திருக்கும் திரைக்கதை அற்புதம்.
இராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளை ஆல்பி ஆண்டனி மிகவும் அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு பக்கம் எம் எஸ் சுப்புலட்சுமி படத்திற்கு அனிருத் இசையா ? என்கிற ஆச்சிரியம் கலந்த விவாதம் போய்க்கொண்டிருக்கும் வேளையில், என்ன விலைக்கு இசை சாம் சி எஸ்ஸா என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு தனது 100 படங்களில் இசைக்காத ஒரு இசையை இந்தப்படத்திற்காக கொடுத்திருக்கிறார். தண்ணீருக்குள் இருந்து வெளிவரும் குமிழி போன்ற பின்னணி இசை அட்டகாசம்.
என்ன விலை படத்தை , என்ன வேலையிருந்தாலும் நேரம் ஒதுக்கி பார்த்துவிடுங்கள் !