a K Vijay Anandh review
ஆணவக்கொலை என்று ஆவணப்படுத்தப்பட்ட காதல் கொலைகளை ரிவர்ஸ் இல் திரைக்கதை அமைத்து சொன்ன விதத்தில் இயக்குநர் சரஜ் சீலன் கவனிக்க வைத்திருக்கிறார்.
பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் கையில் தான் அனைத்தும் இருக்கிறது. அவர் கொடுக்கும் அறிக்கையை மையமாக வைத்தே தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. கொலையா ? தற்கொலையா ? விபத்தா ? என்று ஆதாயம் பெற்றுக்கொண்டு அறிக்கை கொடுத்துவிட்டால், அவ்வளவுதான் யார் வலிமையாக இருக்கிறார்களோ அவர்களது பக்கம் நீதி தராசு சாய்ந்துவிடும்.
இதில், அப்படி ஒரு பிரேத பரிசோதனை செய்யும் அரசு மருத்துவர் அதுவும் மிகவும் நேர்மையான மருத்துவராக குரு சோமசுந்தரம் அட்டகாசமாக நடித்திருக்கிறார். தனது குடும்பத்தை காட்டி மிரட்டும் அதிகார வர்க்கத்திற்கு கட்டுப்பட்டு, அறிக்கையில் சமரசம் செய்துவிட, அந்த குற்ற உணர்ச்சியே அவரை உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நாளும் உடற்கூறு ஆய்வு செய்து விடுகிறது.
காதல் திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி அனுமோல் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாமல், சரணடைய சொல்லும் இடங்கள் சிந்திக்க வைத்திருக்கின்றன.
அப்படி, ஒவ்வொரு வீட்டிலும் இருந்துவிட்டால் சமூகத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் பெரிதும் குறைந்து காணாமல் போய்விடும். அப்படி ஒரு நிலையை விரும்பி தான் இந்தப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார்களோ என்னவோ!
காதல் ஜோடியாக வரும் சாய் விக்கி – நயனா சாய் மையக்கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
குருசோமசுந்தரம் – அனுமோல் தம்பதியரின் மகளாக வரும் அர்ச்சனா குமார் அவரது வெளி நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் காதலன் விஜய் விஷ்வா ஆகியோரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
பாரிஸ் இல் ஒரு கபே இல் வைக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து பிளாஷ்பேக் விரிவது அற்புதம். வெளிநாட்டில் நடைபெறுவது போன்ற காட்சிகளை விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் படமாக்கி, சுயாதீன படைப்பாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
படம் ஒரு டாக்குமெண்டரி பீல் கொடுத்தாலும், சொல்லப்பட்டிருக்கும் கருத்து நன்றாகவே இருக்கிறது.
இந்த கபே க்கு சென்று ஒரு கப் காபி குடிக்கலாம் !