a K Vijay Anandh review
வால்மீகி மற்றும் கம்பராமாயணம் உட்பட 300 க்கும் மேற்பட்ட இராமயணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சினிமாவுக்கு முன் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான முறைகளாக மேடை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம்.
சினிமா எனும் நவீன பொழுதுபோக்கு வந்த பிறகு, பல்வேறு மொழிகளில் வெவ்வேறு காலகட்டத்தில் ஏறத்தாள 50 க்கு மேற்பட்ட திரைப்படங்களாகவும் சில தொலைக்காட்சி தொடர்களாகவும் இராமாயணம் மக்களை சென்றடைந்துகொண்டு தான் இருக்கிறது.
முற்றிலும் இஸ்லாமிய தேசமாக அறிவிக்கப்பட்ட இந்தோனேஷியாவில், இன்றளவும் இராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், இந்த உலகம் இருக்கும் வரை ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு மொழியில் யாரோ ஒரு சிலரால் இராமாயணம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். அவற்றுள், அதாவது கதை சொல்லலில் ஒரு சில வேறுபாடுகள், சில கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தில் ஒரு சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், இராமனும், சீதையும், லட்சுமணனும், அனுமனும் ஒரு பக்கமும் இராவணன் இன்னொரு பக்கமும் இருந்துவிட்டாலே அது இராமாயணம் தான்.
அப்படி, யுகம் யுகமாக இந்த மண்ணில் பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் இதிகாசத்தை மிகவும் பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி.
அடிமைப்பட்டு கிடக்கும் அரக்கர் கூட்டத்தை தலை நிமிரச்செய் என்கிற அன்னையின் வாக்குக்கு கட்டுப்பட்டு, கடுந்தவம் புரிந்து, பிரம்மனிடம் வரம் வாங்கி, இலங்கையில் குபேரனை விரட்டி அரியணையில் அமரும் இராவணன் , இனி தாமே மூவுலகுக்கும் அதிபதி என்று சபதம் செய்வதோடு ஆரம்பிக்கும் இராமாயண முதல் பாகம்.,
ஜடாயுவை கொன்று சீதையை கடத்தி சென்ற இராவணனை கொல்வேன் என்கிற இராமனின் சபதத்துடன் நிறைவு பெறுகிறது.
முதல் பாதியின் , முதல் பாதி முழுவதும் இராவணனின் வீர தீர சாகசங்கள் தான். யஷ், இராவணனே மறுபடியும் அவதாரம் எடுத்துவிட்டானோ எனும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்/ அவர் சம்பந்தப்பட்ட பாதாள லோகம் சம்பந்தப்பட்ட காட்சிகள், கைலாய தவம், பிரம்மா காட்சி கொடுப்பது, இலங்கைக்கு புயலாக திரும்பி, அரியாசனத்தில் அமர்ந்து முடிசூடிக்கொண்டு, அரக்கர்களுக்கு விடுதலை பெற்று தருவது என்று, இராவணனின் அறிமுக காட்சியிலேயே மிரட்டியிருக்கிறார்கள்/
இரவு என்றால் பகல் வரும் தானே! அயோத்தியில் இராமன் பிறக்கின்றான். அதனைத்தொடர்ந்து, அவன் வளர்ந்து சீதையை திருமணம் செய்வது, வனவாசம் செல்வது, சீதையை இராவணன் கடத்தி செல்வது என்று ஒவ்வொரு இந்தியனையும் தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லிவிடும் கதைதான்.
ஆனால், அந்த கதையை திரைக்கதை ஆக்கி, அதை பிரமாண்டமாக திரையில் கொண்டு வந்த விதத்தில் தொழில் நுட்ப குழுவினரும் நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு உழைத்திருக்கிறார்கள்.
இந்திரனின் வாகனமான ஐராவதம் எனும் வெள்ளை யானை, இராவணனின் அரக்கர் சேனை யுத்தம் ஆகியவை பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
இராமன் வனவாசம் வந்த பிறகு காட்டிற்குள், சூர்பனகையின் சேனையுடன் நடக்கும் யுத்தம் இன்னும் அற்புதம்.
முதல் பாகத்தின் முத்தாய்ப்பாக, ஜடாயு – இராவணன் சண்டை அதுவும் பறந்து கொண்டிருக்கும் புஷ்பக விமானத்தில் வைத்து, கிட்டத்தட்ட வானத்திலேயே நடக்கும் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட்டை மிஞ்சும் ரகம்.
இராமனாக, ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
இராவணனின் தாயாக வரும் ஷோபனா முதல், தசரதன், லட்சுமணன் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிகவும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
PAN INDIA படமாக எடுக்கப்பட்ட சர்வதேச அளவில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் இராமாயண முதல் பாகத்தில் நமது தமிழகத்திலிருந்து இராவணின் தாயாக ஷோபனா, இராவணனின் தம்பி விபீஷணனாக ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் இராமனின் தந்தை தசரதனுக்கு தமிழில் குரல் கொடுத்த இயக்குனர் நடிகர் ஆஷிப் குரைசியுமாக அற்புதமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். தமிழ் வசனம் எழுதிய பாலாஜி மாதவன் அவருடன் இணைந்து இணை எழுத்தாளராக பணியாற்றிய கெளசல்யா தேவி ஆகியோரின் அற்புதமான தமிழ் வரிகளால் இப்படம் நேரடித்தமிழ்ப்படம் போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கிறது என்றால் அது மிகையல்ல. கம்பனின் சார்பாக பணியாற்றிருக்கிறார்கள் என்றும் சொல்லிக்கொள்ளலாம்!
லாரா தத்தா, கையேகியாகவும் ராகுல் பிரீத் சிங் சூர்ப்பனையாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பிரமாண்ட அரண்மனைகள், காடுகள், நீர் வீழ்ச்சிகள், இராவணின் வித்தியாசமான விலங்குப்படை என்று கிராபிக்ஸில் மிரட்டியிருக்கிறார்கள்.
GenZ மற்றும் Alpha என்கிற முக்கியமான இன்றைய இரண்டு தலைமுறைகளுக்கு இராமாயணம் எனும் அற்புதமான இதிகாசத்தை கொண்டு செல்லும் பெரிய கடமை தனக்கு இருப்பதை இயக்குனர் நிதேஷ் திவாரி நன்கு உணர்ந்து அதற்கேற்றவகையில் சில சில புதிய விஷயங்களை சேர்த்திருக்கலாம் அல்லது முற்றிலும் மாறுபட்டு கூட சில காட்சிகளை அமைத்திருக்கலாம். அதையெல்லாம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டிய அவசியமோ, பரிகசிக்கவோ தேவையில்லை.
2026 தீபாவளியை அர்த்தமுள்ளதாக்கிய இந்த அற்புதமான படைப்பை கொண்டாடுவோம், தீபாவளியுடன் சேர்த்து!