மூக்குத்தி அம்மன் 2

Rating 3.5/5

57

a K Vijay Anandh review

நமது ஆலயங்களில் அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூ டிய அளவில் சிறிய மற்றும் பெரிய அளவிலான கோபுரங்கள் இருந்தாலும், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று ஆன்றோர்கள் சொல்லி வைத்தாலும், கோபுரங்களை கொஞ்சம் நிமிர்ந்து கூட பார்க்காமல் கடந்து போகிறவர்கள் தான் இங்கே ஏராளமாக இருக்கிறோம்!

மூக்குத்தி அம்மன் 2 படம் பார்த்த பிறகு, நிச்சயம் அந்த நிலை மாறும், சிறியதோ பெரியதோ நின்று நிதானமாக பார்த்து ரசித்து வணங்கி பரவசமடைவோம். இது மூக்குத்தி அம்மன் மகிமையை சொல்லும் படமா ? கோபுரங்களின் மகிமைகளை சொல்லும் படமா ? என்கிற குழப்பம் வேண்டாம்.  மூக்குத்தி அம்மனின் மகிமையால் தான் இப்படி ஒரு விஷயமே எனக்கு தோன்றியது. ஆம், அந்த இடைவேளைக்கு முந்தைய   காட்சி ஒன்றில், மயிலாஞ்சிக்கு சக்தி வடிவல் வந்திருப்பது அந்த மூக்குத்தி அம்மனே என்று உணர்ந்து கொண்ட சித்தர் போன்ற ஒரு பெரியவர் அவரை அழைத்து வரும் போது, கருப்பசாமியும் குதூகலிக்கிறார், அவரது குதிரைகளும்  குஷியாகின்றன. அங்கே இருக்கும் ஒரு கோயில் கோபுரத்தில் அமைந்திருக்கும் அழகான சிற்பங்கள் திடீரென்று உயிர்ப்புற்று மேள தாளங்கள் வாசிக்க, நடன மங்கையர் ஆட என்று ஒரு அற்புதமான காட்சி.

இந்த காட்சியை கருவாக்கி உருவாக்கிய அத்தனை பேருக்கும் முதலில் பாராட்டுக்கள்.

காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் சக்தி என்கிற நயன் தாரா , மயிலாஞ்சியில்  எப்படி ஊரைக்காக்கும் மகாசக்தி மூக்குத்தி அம்மனாக அவதாரம் எடுக்கிறார் என்பதே படத்தின் ஒரு வரிக்கதை. நயன் தாரா வழக்கம் போல, அசத்தியிருக்கிறார். அம்மன் கோவில் திருவிழா பந்தோபஸ்துக்கே மட்டம் போடும் அவர் பின்பு அம்மனாகவே மாறுவது, மயிலாஞ்சியில் மணல் திட்டுகளால் மூடிவிட்ட மூக்குத்தி அம்மன் கோயிலில் ஒரு சிம்ம வாகனத்தில் கம்பீரமாக அமர்வது, பின் மழை வந்து மணல் கரைந்து சிம்மம் தோன்றுவது, இனியாவுக்கு, இறந்து பிறக்கும் குழந்தை நயனின் மடியில் தவழ்ந்தவுடன் உயிரோடு எழுவது எல்லாம் அற்புதமான காட்சிகள்., மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

நயனின் கனவுகள், அதில் ஊர்வசியும் சிக்கிக்கொண்டு பயப்படுவது போன்றவை சுவராஸ்யமான காட்சி அமைப்புகள். ஒரு வழியாக மயிலாஞ்சிக்கு செல்லும் பொழுது அங்கே காவல் தெய்வங்களாக வீற்றிருக்கும் குஷ்பூ மற்றும் சினேகா சம்பந்தப்பட்ட காட்சியும் அற்புதம். குஷ்பூவுக்கு பதிலாக இன்னொரு புதுமுகம் அல்லது மீனா போன்று யாரைவாது பயன்படுத்தியிருக்கலாம்.

துஷ்ட சக்தியாக வரும் ரெஜினா கசண்ட்ரா மிரட்டியிருக்கிறார். அவரது ஜோடியாக இரண்டாயிரம் வருடங்களாக தொடரும் துணியா விஜய், இதில் துணிந்து மூக்குத்தி அம்மனுடன் மோதி, வாங்கி வந்த வரத்தின் அடிப்படையில் பலியாகிறார். மிகவும் நொடிப்பொழுதில் வந்து போகும் அந்த ஷாட்டை கவனமாக பார்த்தால் தான் அவர் எப்படி பலியாகிறார் என்பதை ரசிகர்கள் உணர முடியும்.

நம்மூரில் சமீபத்தில் நடந்த தூயசக்தி Vs  தீயசக்தி  மாதிரி மூக்குத்தி அம்மன் நயன் தாராவுக்கும் ரெஜினாவுக்கும் நடைபெறும் சண்டைக்காட்சிகளில் கிராபிக்ஸில் மிரட்டியிருக்கிறார்கள்.

கிராபிக்ஸுக்கு அடுத்து ஹிப் ஹாப் ஆதியின் இசை படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

இது வழக்கத்திற்கு மாறான சுந்தர் சி படம் போல தெரிகிறது.  ஒன்று, சுந்தர் சி படங்களில் பொங்கி வழியும் நகைச்சுவை காட்சிகள் இதில்  கொஞ்சம் குறைவாகவே காணப்படுகின்றன, அதுவும் ஊர்வசி புண்ணியத்தில். இன்னொன்று, கோபுரம் இடிந்துவிழுந்து 30 பேர் பலி, தேரோட்டத்தில் தீ, ஆன்மீக பெரியவா படுகொலை என்று  ஓவர் நெகட்டிவான விஷயங்களுடன் படம் ஆரம்பிப்பது. சுந்தர் சி ஒரு பாசிட்டிவான கலகலப்பான மனிதர், கலகலப்பு கொடுத்த இயக்குனர் இவரா இப்படி..? என்று ரசிகர்கள் யோசிக்கக்கூடும்.

மற்றபடி,  நயன் தாராவுக்குள் மூக்குத்தி அம்மன் இறங்கியது போல சுந்தர் சிக்குள் ஹரி இறங்கிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு சிங்கம் 1,2,3 படங்கள் போல சீறிப்பாய்ந்து ஜெட் வேகத்தில் செல்கிறது மூக்குத்தி அம்மன் 2, அட அவள் சிம்ம வாகினி தானே!