a K.Vijay Anandh review
ஈஸ்வரன், பழனி நகராட்சியில் ஒரு அலுவலர். நகரை சுத்தமாக வைத்திருப்பது, தெருவிளக்குகளை பராமரிப்பது என்று நாம் அன்றாடம் பார்த்து கடக்கும் ஒரு கதாபாத்திரம், அந்த கதாபாத்திரத்திற்குள் சித்தார்த்.
சக்தி |தினமும் அதிகாலையில் நகராட்சி அலுவலகத்தில் குவியும் தூய்மை பணியாளர்கள், அப்படி ஒரு பணியாளராக கதாநாயகி நிமிஷா சஜயன்.
கணவனை இழந்த நிலையில், தனது எட்டு வயது மகளுடன் பலகாரங்கள் செய்து விற்று வாழ்க்கையை ஓட்டும் ஒரு நடுத்தர வயது அண்ணியாக, அஞ்சலி நாயர்.
இயக்குனர் அருண்குமாரின் சகோதரர் பாலாஜி க்ரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரி ஆக.
சட்டென்று மாறுது வானிலை என்பது போல தமிழ் சினிமாவில் ஒரு அருமையான கதாபாத்திர வடிவமைப்பை சித்தா படத்தில் பார்க்க முடிகிறது.
மேற்கண்ட கதாபாத்திரங்களுடன் சுந்தரி மற்றும் பவானி ஆகிய சிறுமிகள்.
சிறுமிகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது பெரும்பாலும் அவர்களை சுற்றி இருக்கும் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆகியோராலேதான்.
அப்படி சித்தார்த் அடிக்கடி வந்து போகும் தனது உயிர் நண்பன் வீட்டில் இருக்கும் பவானி பாலியல் சீண்டப்களுக்கு ஆளாக, அது சித்தார்த்த்தான் என்கிற முடிவிற்கு வரும் அத்தனை பேராலும் சித்தார்த் படும் வேதனைகள் மிகவும் யதார்த்தம்.
உண்மை தெரிந்து நிலைமை சகஜமாக மாறுவதற்குள் சித்தார்த் வீட்டு சின்ன குழந்தை காணாமல் போகிறாள். அதனைத் தொடர்ந்து அஞ்சலி நாயர் உள்ளிட்ட அனைவர் படும் வேதனைகளும் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.
அந்த குழந்தை மீட்கப்பட்டதா உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்கள் என்பது தான் பதை பதைக்க செய்யும் இரண்டாவது பாதி.
குழந்தைகளுடன் நாம் தான் நேரடியாக நேரங்களை செலவிட வேண்டுமே ஒழிய தெரிந்தோ தெரியாமலோ மொபைல் மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவற்றிற்கு அவர்களை அடிமையாக்கி விடக்கூடாது.
அப்படி நேரங்களை நாம் அவர்களுடன் செலவிட தயங்கும் பட்சத்தில், அவர்களுக்கு பிடித்த அற்ப விஷயங்களுக்காக அந்த குழந்தைகள் அந்நியர்களிடம் நம்பி ஏமாந்து விடுகிறார்கள்.
அந்த ஏமாற்றம் அவர்களை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள், சித்தா படத்தில். அந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் காட்சிகளை காண்பித்து யாரையும் முகம் சுளிக்க வைத்து விடாமல், அவர்கள் படும் வேதனைகளை மட்டும் காட்சிப்படுத்தி, அதிலும் மிகவும் பொறுப்போடு கண்ணியமாக காட்சிப்படுத்தி ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார் SU அருண்குமார்.
நடித்த அத்துனை நடிகர்களும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றால் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் மிகவும் நேர்த்தியாக தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
உதாரணமாக விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, வினோத் தணிகாசலத்தின் ஒலிப்பதிவு இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை ஒரு சர்வதேச தரத்தில் நிறுத்தி இருக்கின்றன. வகுப்பில் சுந்தரியுடன் சேர்ந்து மான் பார்க்கச் செல்லலாம் என்று பவானி திட்டமிடும் காட்சியில் இருந்து சுந்தரி திரும்பவும் கிடைக்கும் வரையிலான காட்சிகளின் பின்னணி இசை ஆகச் சிறந்த திகில் படங்கள் கொடுக்காத பயத்தை ரசிகர்களுக்கு கொடுத்து விடுகின்றது.
பழனிக்கு சென்றால் முருகன் அருள் பெறலாம், பழனியில் எடுக்கப்பட்ட இந்த சித்தா படத்திற்கு சென்றால் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக பெண் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வு பெறலாம்.
mysixer rating 5/5