நூறுசாமி

Rating 5/5

40

a K Vijay Anandh review

கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராயம், உயிர் பலி, இளம் விதவைகள் இப்படி ஒரு கதை ஏ ஆர் முருகதாஸிடம் கிடைத்திருந்தால், கள்ளச்சாராயம் பெற்றவன் அதற்கு உதவி செய்தவன் அவர்களுக்கு மேல் இருக்கும் அரசியல்வாதி என்று ஒவ்வொருத்தனின் மனைவியரும் விதவையாக்கப்பட்டிருப்பவர்கள், கதாநாயகனால்.

அப்படி ஒரு மாஸ் படமாக அமைந்திருக்கலாம்.

ஆனால் இது 100% உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம் என்பதால் உண்மையை விட்டு விலகாமல் அதே நேரம் ரசிகனை கட்டிப்போட வைக்கும் திரைக்கதையுடன்  இந்த கதையை இயக்கும் பொறுப்பு படைப்பாளிகளுக்கு வந்து விடுகிறது. அதிலிருந்து இம்மியளவு கூட பேசாமல் மிகவும் நேர்த்தியாக  நூறுசாமியை இயக்கி இருக்கிறார் சசி.

ஒரு பெண் மறுமணத்திற்காக எடுத்து வைக்கும் முதல் அடி 100 பெண்களை அவளை பின்தொடர வைக்கலாம் என்கிற மகனின் விருப்பத்தின் பேரில், மறுமணத்திற்காக தயாராகும் இளம் தாய், எவ்வளவு பெரிய போராட்டங்களை சந்தித்து உறவுகள கிராமத்தினர் ஆகியோரின் கோபங்களுக்கிடையே அந்த மறுமணம் சாத்தியமாகிறது என்பதை ரசிகன் கொண்டாடும் வகையில் எடுத்திருப்பதால் சசியின் ஆகச்சிறந்த திரைக்கதை.

சுவாசிகா, லப்பர் பந்து படத்தில் கோவக்காரியான கதாநாயகியின்  தாய்., இதில் அதைவிட அதிக கோபக்கார 2 வாலிப மகன்களின் தாய் என்று அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

சிவாஜி முதல் தனுஷ் வரை யார் வேண்டுமானாலும் அல்லது எல்லோரும் இவருக்கு மகனாக நடித்தாலும் அவர்களின் தாயாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அற்புதமான ஆற்றல் கொண்டவராக சுவாசிகா, இந்தப் படத்திலும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

கை குழந்தைகளோடு விதவையாகி விட்ட அவளுக்கு அவள் வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பது அவள் வீட்டு பேனும் அவளுக்கு அவளே போட்டுக் குடிக்கும் வரக்காப்பியம் தான்.

பரிமாறப்பட்டும் பசியாறப்படாத மூன்று இலைகளுடன் ஆரம்பிக்கும் படம் நான்கு இலைகளாக பரிமாறப்பட்டு குடும்பமாக, அப்பாவுடன் ஆறு அமர ரசித்து ருசித்து சாப்பிடும் காட்சியுடன் முடிவது கவிதை.

இந்த படத்தில், ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம், ஒவ்வொரு நடிகர்களும் அவர்களது கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

வன்மமும் கோபமும் கொண்ட தாய் மாமனாக வரும் கருணாஸ், என்ன ஒரு நடிகர் யா  , நீங்கள் தேர்தலில் தோற்றது ரசிகர்களுக்கு நல்லது.  உங்களுக்கு சமமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க, கண்ணுக்கெட்டிய தூரம் .வரை நடிகர்கள் இல்லை

மகன்களாக நடித்திருக்கும் அஜய் தீசன் மற்றும் சக்தி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் அண்ணனும் கோபப்பட்டு இருக்கிறான் என்பதை உணர்ந்த தம்பி தானும் ஐந்து வருடம் காத்திருந்து பக்குவப்பட்டால் அம்மாவின் வாழ்க்கை ஐந்து வருடம் வீணாக போய்விடும் என்று ஒரு போன் காலில், நான் அண்ணனோட தான் நிற்பேன் என்று முடிவெடுக்கும் காட்சி அற்புதம்.

கிராமத்து பெரிய மனிதராக வரும் பாலாஜி சக்திவேல், அவர்தான் வில்லனும் கூட. பெண்களின் மறுமணத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரது கிராம மக்களோடு சேர்ந்து அவரும் தோற்றுப் போகிறார்.

மோட்சம் மால் ஆக வரும் தாமரை, இவர் கொஞ்சம் தாமதித்து இருந்தால், கிணற்றில் விழுந்த சுவாசிகா மோட்சத்துக்கே சென்றிருப்பார்.

இவர் மூலம்,  சுவாசிகாவின் உயிரும் காப்பாற்றப்படுகிறது, ஏழுமலை என்கிற அற்புதமான வாழ்க்கைத் துணையையும் கண்டுபிடிக்க முடிகிறது.

ஏழுமலையாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, வழக்கம் போல சிறப்பாக நடத்தி இருக்கிறார். படம் முழுவதும் வர வேண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற வழக்கமான ஃபார்முலாவுக்குள்  சிக்கிக் கொள்ளாமல், நல்ல படத்தில் நாம் இருக்க வேண்டும் என்கிற இவரை போன்ற நடிகர்களின் எண்ணம் சிறந்த படைப்புகளை உருவாக்க உதவும், நூறுசாமியை போல.

கிளைமாக்ஸ்.

இதுபோன்ற கதைகளில், கோயிலில் திருமணம் நடைபெறுவதற்கு திட்டமிட்ட பிறகு அதனை தடுப்பதற்கு நிச்சயம் 100 பேர் வருவார்கள். அவர்களை எதிர்ப்பதற்கு நாயகன் தரப்பில் இன்னொரு 100 பேர் வருவார்கள். இரண்டு தரப்பினரும் அடித்துக் கொண்டு அந்தப் பக்கம் 10 பேர் இந்த பக்கம் 10 பேர் கொல்லப்படுவார்கள் பலர் கை கால்களில் இழந்து அவதிப்பட நேரிடும்.

அப்படி ஒரு போர்க்களம் போன்ற ஒரு காட்சியை, அதைவிட வீரியமாக படமாக்கி இருக்கிறார்,  சசி. நாலு ட்ரோன் கேமரா,  ஒரு youtube சேனல், ஒரு லைவ் அவ்வளவுதான், முன்பு குறிப்பிட்டது போல இருதரப்ப  சண்டை போடுவதாக இருந்தால் அந்த இடத்திலேயே எல்லாம் நடந்து முடிந்து போய் இருக்கும். ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தின் உன்னதம் என்னவென்றால், குறிப்பிட்ட பிரச்சினை நேரலையாக அந்த இடத்திலிருந்து பல ஊர்களுக்கும் ஏன் உலகம் முழுவதற்கும் செல்லும் பொழுது இந்த 100 பேருக்கு எதிராக 10 லட்சம் பேர் கமெண்ட் போட்டடே அவர்களை காலி பண்ணி விடுவார்கள்.

அது மட்டுமல்லாமல், நாலு பேரை வெட்டி போட்டு விட்டு எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டும் வெளியே நடமாட முடியாது.

பகவதி, வினோதினி வைத்தியநாதன், மற்றும் இரண்டு நாயகிகள் காவியா அனில், பாடினி குமார் உள்ளே களமிறங்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அட்டகாசம்.

நேரலையை பார்த்து, மாவட்ட நிர்வாகமே கதிகலங்கி போய், முனிஸ் டான்ஸ் தலைமையிலான காவலர்களை விரைந்து அனுப்பி வைப்பதும் வேடிக்கையின் உச்சகட்டம்.

பின்பு அவரே தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

எஸ் பி தர்ஷன் கிரிலோசின் ஒளிப்பதிவு மற்றும் பாலாஜி ஸ்ரீ ராமின் இசை இரண்டும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.

விஜய் ஆண்டனி – சசி இணை ஏற்கனவே வெற்றி கொடி கட்டிய காம்போ. அவர்கள் இணைந்து இன்னொரு சிறப்பான படத்தை வழங்கி இருக்கிறார்கள்.

நூறு சாமியை தரிசனம் செய்ய தவறாதீர்கள்…

பரிகாரம்.

நம்மூரில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மத்தியிலும் பரிகாரம் என்கிற வார்த்தை பரிச்சயம். கோயிலுக்கு போய் நாலு சூடம் ஏற்று என்பது முதல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் பழைய துணிகளை அவிழ்த்து போட்டு விட்டு வா என்பது வரை ஏகப்பட்ட பரிகாரங்கள் அன்றாட ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்பட்டு மக்களால் நிறைவேற்றப்பட்டு அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டும் வருகிறது.

தாய்க்கு  தான் பயன்படுத்திய பழையதாகிபோன மொபைல் போனை கொடுப்பவன் – இளம் வயதில் விதவை ஆகிப்போன இளம் தாய்க்கு, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை பற்றி யோசிக்காமல் காதலிகளின் கரம் பிடித்து திரிபவன் -ஆகியோருக்கான நிஜமான பரிகாரமாக இந்த படத்தை பார்ப்பது அமையும்.

அம்மாவை நேசிக்கும் ஒவ்வொரு மகனும், அப்பாவை நேசிப்பவர்களும் பார்க்க வேண்டிய வேண்டிய படம்.

சமூகத்தில் பெரிய தாக்கத்தை, ஏற்படுத்தப் போகும் நூறுசாமியை, தயாரித்து இயக்கிய நடித்த தொழில்நுட்ப ரீதியாக பங்கெடுத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!!

நிஜ கதாநாயகர்கள் பாஸ்கர் மற்றும் விவேகிற்கும் பாராட்டுக்கள்!