a K.Vijay Anandh review
வினோதாவிற்கும் ஷகீராவிற்கும் இடையில் காதல் மலரும் காட்சிகள் அற்புதம். தைரியமான, சுதந்திர பறவையான டாக்குமென்டரி பிலிம் மேக்கர் சுருதி பெரியசாமி. இஸ்லாமிய மார்க்கத்திற்கே உரிய கட்டுக்கோப்பான கூண்டுக்கிளியாக நிரஞ்சனா நெய்தியர்.
ஷகீராவாக வரும் நிரஞ்சனாவை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அழகு அவரை பார்க்கும் எந்த ஆணும் முதல் பார்வையிலேயே காதல் வயப்படுவது நிச்சயம். ஆனால் அந்த அழகுப் பெண்ணிற்கு, சுருதி பெரியசாமிக்கு காதல் வருவதில், அர்ஷத் போன்று ரசிகர்களுக்கும் அதிர்ச்சியே.
பொதுவாக இது போன்ற படங்களில் காட்டப்படும் சமூக பின்னணிகள் நாம் அறிந்ததே. ஆனால், மிகவும் துணிச்சலாக தன் பால் ஈர்ப்புக்கு உள்ளாகும் பெண் ஒரு இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறார் என்று காட்சிப்படுத்தி இருப்பதும், இது நம் மார்க்கத்திற்கு எதிரானது என்று நிரஞ்சனாவின் தந்தை மற்றும் அர்ஷத்தின் நண்பர்கள் கூறும்போது, இது நம்ம மார்க்கத்திற்கு மட்டுமல்ல அனைத்து மார்க்கங்களுக்கும் எதிரானது தான், மார்க்கங்களும் வெறுத்து ஒதுக்குவது தான் என்று அர்ஷத் பேசும் வசனங்கள் மிகவும் எதார்த்தம் எந்த மார்க்கத்திற்கும் எதிரானதாகவும் இல்லாமல் எந்த மார்க்கத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகவும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஜெயராஜ் பழனியுடன் இணைந்து வசனம் எழுதி இருக்கும் சதீஷ் சிவாவையும் பாராட்டியே ஆக வேண்டும்.
கடற்கரை கிராமமான தரங்கம்பாடியின் அழகும் குறிப்பாக சுருதி பெரியசாமிக்கும் நிரஞ்சனாவுக்கும் நள்ளிரவில் நட்சத்திர ஒளியில் கடலில் தனியாக பயணிக்கும் ஒரு படகில் காதலும் துளி காமமும் மலரும் இடம் மிகவும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எஸ். கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவிற்கு சபாஷ் போடலாம். கூடவே அந்த காட்சியை துளி விரசமின்றி அற்புதமாக காட்சிப்படுத்திய இயக்குநர் ஜெயராஜ் பழனியையும் பாராட்டியே ஆக வேண்டும்.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, திரைக்கதை மற்றும் தர்ஷன் ரவிக்குமாரின் அற்புதமான இசை, அளவான வசனங்கள் என்று ஒரு சர்வதேச தரத்திலான தமிழ் படத்தை தயாரித்திருக்கிறார்கள் நீலிமா இசை குடும்பத்தினர்.
தன் பால் ஈர்ப்பு மனித குலத்தின் பெருக்கத்திற்கு தடையாக இருக்குமா என்று யோசித்தால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற அளவிற்கு தனபால் ஈர்ப்பினரின் சதவிகிதம் உலக மக்கள் தொகையை ஒப்பிடும் பொழுது மிக மிக குறைவானதே! அப்படியானால் இந்த தன் பால் ஈர்ப்பு இயற்கைக்கு முரணானதா என்று யோசித்துப் பார்த்தால், இல்லை அங்கும் ஒருவர் ஆணாகவும் பெண்ணாகவுமே தங்களைப் பாவித்துக் கொள்கிறார்கள். அது இரு ஆண்களுக்கு இடையேயான ஈர்ப்பிலும் சரி இரண்டு பெண்களுக்கு இடையேயான ஈர்ப்பிலும் சரி.
ஹார்மோன் குறைபாடாகவோ குரோமோசோம் மரபணுக்களின் வேலையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், இவர்களால் ஒட்டுமொத்த மனித குலத்திற்கோ பிரபஞ்சத்திற்கோ அச்சுறுத்தல்கள் இல்லை எனும் பொழுது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடந்து போவது தான் நாகரீக மனித குலத்தின் அடிப்படை கடமையாக இருக்க முடியும்.
வாழ்வு தொடங்குமிடம் நீதானே, தமிழ் சினிமாவில் சிறந்த & வித்தியாசமான படைப்புகளின் தொடங்குமிடமாக அமைந்திருக்கிறது என்றால் மிகை அல்ல !
Shortflix தளத்தில் கண்டு மகிழுங்கள்.
mysixer rating 4.5/5