கிடா

சைவர்களுக்கும் பிடித்த கிடா விருந்து

225

a K Vijay Anandh review

வழக்கமாக தீபாவளி பண்டிகை அன்று திரைப்படங்கள் வெளியாகும். கிடா தீபாவளிக்காகவே வெளியான படம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அத்துடன் தீபாவளி அன்று சஸ்பென்ஸ் திரில்லர் படங்களும் வெளியாகலாம். ஆனால் எளிய மக்களுக்கு தீபாவளி கொண்டாடுவதே ஒரு பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் தான், குழந்தைகள் கேட்ட புது துணியை வாங்கி கொடுத்து விட மாட்டோமா வெடிப்பதற்கு சிறிது பட்டாசு வாங்கி விட மாட்டோமா கறி எடுத்து விட மாட்டோமா பலகாரம் செய்து விட மாட்டோமா என்று நொடிக்கு நொடி சஸ்பென்ஸாகவே வைத்திருந்து, பண்டிகை  அன்று அல்லது பண்டிகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எல்லாவற்றிற்குமான ஒரு விடை தருவது தான் தீபாவளி எங்கள் தீபாவளி.  அந்த கஷ்டங்கள் ஏழைகளுக்கு தீரா வலி என்றாலும் அந்த மக்கள் பண்டிகைகளை விட்டு விடுவதில்லை என்பதே கலாச்சாரம் செழித்த இந்த மண்ணின் தனிச்சிறப்பு என்பதை அட்டகாசமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட்.

ஆடுகளுக்கு பிடிக்காத கதிர் இருக்கிறதா என்ன? இந்த கதிரை அந்த கருப்புக்கு பிடிக்காமல் இருக்குமா ? கதிராக நடித்திருக்கும் மாஸ்டர் தீபன் மற்றும் கருப்பாக நடித்திருக்கும் ஆட்டுக்குட்டிக்கு இடையிலான உறவு, ஒரு கவிதை, நாகரீகம் நிரம்பி இருப்பதாக சொல்லப்படும் இந்த நகரத்தானை விட , அந்த நகரத்தானின் பார்வையில் நாகரீகம் அற்றவனாக தெரியும் கிராமத்தான் ஒரு படி மேலானவன் என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். தெய்வமாக பாவிக்கும் பசுக்களையும், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பாட்டுக்கு உதவும் ஆட்டுக்குட்டிகளையும் குப்பை மேடுகளில் மேய விட்டு வேடிக்கை பார்க்கிறான் நகரத்தான். அதே ஆட்டுக்குட்டிக்கு டீக்கடையில் காசு கொடுத்து பணியாரம் வாங்கி ஊட்டி விடுகிறான் கிராமத்தான், இந்த கதிர்.

அட ஆமா எல்லோரும் ஆட்டுக்குட்டிகளை தேடிக் கொண்டிருக்கும் பொழுது இவன் கருப்பு என்று அழைத்திருந்தால் ஓடி வந்திருக்குமே என்று ரசிகர்களும் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, தாத்தா செல்லையா வாயிலாக அழகான பதிலையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு மட்டுமல்ல கதையின் முதல் பாதியில், போடப்படும் அத்தனை முடிச்சுகளுக்கும் சுவராஸ்யமான விடைகளை கொடுத்து, கிடாவை ஒரு விருந்தாக்கி இருக்கிறார் இயக்குனர்.

பூ ராம், கிட்டத்தட்ட 80 கோடிக்கும் அதிகமான இந்திய தந்தைகளின் பிரதிநிதியாக, அவர்கள் ஒவ்வொருவரும் தீபாவளிக்கு முன் தினங்களில் அனுபவிக்கும்  வேதனைகளை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.  அவருக்கு துணை மீனம்பாளாக வரும் பாண்டியம்மா வழக்கம்போல வசீகரித்து இருக்கிறார்.

தீபாவளிக்கு இத்தனை கோடிகள் மது விற்பனை என்று டார்கெட் வைத்து செயல்படும் அரசுக்கு, குடிக்கு அடிமையான ஒருவன் தீபாவளி முதல் திருந்துகிறான் என்பதாக காட்சி அமைத்து, எதாலயோ அடித்திருக்கிறார் ரா வெங்கட். இவரின் பேனாவுக்கும் கெத்து இருக்கிறது என்பது தெரிகிறது.

இந்த வயதில் ஒரு காலத்தில் சார்லி சின்னி ஜெயந்த் போன்றோர் அவர்களை விட மூத்த நடிகைகளுக்கு நண்பர்களாகவே நடித்துக் கொண்டிருந்ததை பார்த்து ரசித்த நமக்கு, ஒரு வாலிப வயது மகனுக்கு தந்தையாக நடித்து இன்றைய தலைமுறை குணச்சித்திர நடிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை பெற்று தந்திருக்கிறார் காளி வெங்கட். படத்திற்கு படம் இப்படி அற்புதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டாரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் மிகை அல்ல. அவர் ஆரம்பிக்கும் ஆட்டுக்கறி அரசியல் எங்கே பாதை மாறி போய்விடுமோ என்று பதைபதைத்து கொண்டிருக்கும் நிலையில், அவரது மனைவி விஜயா வாக வரும், லட்சுமியை வைத்து சுபமாக முடித்தும் இருக்கிறார் ரா வெங்கட்.

அட கிராமத்துல வெவ்வேறு சாதிக்காரன் காதலிச்சா தான் பிரச்சனை என்று பார்த்து பழக்கப்பட்ட நமக்கு சொந்த அத்தை பையன் மாமா பொண்ணு காதலிச்சாலும் பிரச்சனை தான் என்று பாண்டி மற்றும் ஜோதியை வைத்து காட்டிய விதம் ஒரு குறுங்கவிதை.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரையும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார், ரா வெங்கட்.

ஆயிரம் ரூபாய் சில்லறைகளை எண்ணி பார்க்காமலே 2,  500 ரூபாய் தாள்களாக கொடுக்கும் ராஜேஷ், அவருக்குத் தெரியாமல் சுருக்கு பையில் இருந்து ஒரு 500 ரூபாய் எடுத்து கொடுக்கும் அவரது தாய், பேரனுக்கு தெரியாமல் வெளியே எடுக்கிறோமே என்று தயங்க கூட இரண்டு பட்டாசுகளை எடுத்துப் போடும் அந்த பேரன், டீக்கடைக்கார கருப்பு, ஜவுளிக்கடை முதலாளியாக வரும் ரமேஷ் ரங்கசாமி,  ஆத்தாடி ஹூம்…. என்கிற ஒரே வார்த்தையில் கவனம் பெற வைக்கும் கார்த்திக் , நான்கு திருடர்கள் என்று ஒவ்வொருவரையும் ரசிகர்கள் மனதில் விதைத்து விடுகிறார் ரா வெங்கட்..

தீசனின் இசையில் வரும் ஏகாதசியின் பாடல்கள், M ஜெகபிரகாஷின் ஒளிப்பதிவு. ஆனந்த் ஜெரால்டினின் எடிட்டிங் என்று தொழில்நுட்பக் கலைஞர்களும் போட்டி போட்டு தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

பரமக்குடியில் இருந்து கிளம்பிய குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசனுக்கு களத்தூர் கண்ணம்மா மூலம் தேசிய விருது கிடைத்தது, பரமக்குடிக்கு பக்கத்து ஊரான ஆப்பனூரை பூர்வீகமாக கொண்ட தீபனுக்கு கிடா தேசிய விருதை பெற்றுத் தரலாம்.

ஒட்டு மொத்தமாக இந்த கிடா பல விருதுகளை ஏற்கனவே வென்றிருக்கிறது ரசிகர்களின் பேராதரவையும் பெற்று விட்டால், அதைவிட பெரிய விருது  வேறு என்ன இருக்கப் போகிறது?

இந்த தீபாவளிக்கு கிடா விருந்து,  சைவர்களின் வீடுகளிலும்,

mysixer rating 5/5