TN 2026

Rating 4.5/5

316

a K Vijay Anandh review

இந்தப்படம் ஏதோ ஒரு சில நடிகர்களை, குறிப்பாக அரசியலுக்கு வரும் நடிகர்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்கிற தவறான புரிதல்,  படம் பார்க்கும் வரை தான். உண்மையில், இது, அப்படி ஒரு மாஸ் நடிகனை உருவாக்கி, அடுத்த எம் ஜி ஆர் ஆக்கி, அவனை முதலமைச்சர் நாற்காலியிலும் உட்கார வைத்து  தனக்கு சொந்தமான 1000 ஏக்கர் தோட்டத்தை ஒரு லட்சம் ஏக்கர் தோட்டமாக மாற்ற ஆசைப்படும் ஒரு மன்றாடியார், பொள்ளாச்சி நிலச்சுவான்தாரின் கதை. அந்த ஜமீனின் ஆசை நிறைவேறியதா..? அவரை நம்பி , தங்களது சொத்துக்களையும் இழந்து நிற்கும் அவரது நண்பர்களின் கனவு நிறைவேறியதா..? இவர்கள் ஆசைப்பட்டது போல அந்த நடிகர் அரசியலுக்கு வந்தாரா ? என்பது தான் டி என் 2926 இன் அட்டகாசமான திரைக்கதை.

மத்தியப்பிரதேசத்திலிருந்து  சென்னைக்கு வந்து பீடா விற்று பிழைப்பு நடத்தும் குல்கந்து குமார் – நட்டி நடராஜ், இயக்குநர்  ஜாவா சுந்தரேசன் கண்ணில் பட, அமிதாப்பச்சன் போல இருக்கிறாரே என்று அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கிறது.  அதற்குள்ளாக அவர் தான் அடுத்த எம் ஜி ஆர் என்று யாரோ கிளப்பி விட, அது அந்தப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெறும் பொள்ளாச்சியில் ஜமீனாக இருக்கும் தம்பி ராமையா காதில் விழ,  தீவிர எம் ஜி ஆர் பக்தரான அவர், அடுத்த எம் ஜி ஆரை நாம் உருவாக்கினால் என்ன ? என்கிற கேள்வியோடு, குல்கந்து குமாருக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்து, அவரை வைத்து படங்களும் தயாரித்து, ஒரு மாஸ் நடிகராக்கிவிடுகிறார்.

தனது நண்பர்கள் எம் எஸ் பாஸ்கர், இளவரசு, வேலூர் பாய் ஆகியோருடன் சேர்ந்து, அவரை ஒரு கட்சியும் ஆரம்பிக்க வைத்து, வரும் தேர்தலில் நிற்க வைத்து முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று தீயாய் வேலை செய்கிறார்.

சரி, குல்கந்து குமாரும் ஒரு வேகத்தில் 2026 இல் நான் தான் டா முதலமைச்சர் என்று கோதாவில் குதிக்கலாம் என்று  முடிவு செய்ய, அடுத்தடுத்து அதிரடியாக நடக்கும் சில சம்பவங்களின் பின்னால் இருக்கும் உண்மையை அறிந்துகொண்டு, வேண்டாம்டா நீங்களும் உங்க அரசியலும் என்று ஒதுங்கிக்கொள்கிறார்.

இன்னொருத்தன் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கு , சரியான ஆப்பு அவரவர் வாரிசுகள் மூலமே வைக்கப்படுகிறது.

சரி, குல்கந்து குமாரை ஸ்டாராக்கி முதலமைச்சராகவும் ஆக்கிவிடுவார் போல, இந்த இயக்கு நர் உமாபதி ராமையா என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு, பிராக்டிகலாக ஒரு கிளைமாக்ஸை கொடுத்து ஆச்சிரியப்படுத்தி விடுகிறார்.  ஒரு வேளை குல்கந்து குமார், குல்கந்து குமார் எனும் நான்… என்பதாக கிளைமாக்ஸ் வைக்கப்பட்டிருந்தால், இது வழக்கமான ஒரு படமாக ஆகியிருக்கும்.  மிகவும் யதார்த்தமான விஷயத்தை காட்சிப்படுத்தி , பிராக்டிகலாக கதையை முடித்த விதத்தில் இது ஒரு நேர்மையான படமாக , இந்த வார ஹிட் படமாக உயர்ந்து நிற்கிறது.

குல்கந்து குமாராக, நட்டி நடராஜ், காட்சிக்கு காட்சி பட்டையைக்கிளப்புகிறார். உண்மையில்,  சதுரங்க வேட்டை நட்டியை விட, இன்னும் கொஞ்சம் அதிகமான  கதாநாயக வில்லத்தனத்துடன் ஜொலிக்கிறார்.  ஷிரித்தா ராவ், அற்புதமாக  நடித்திருக்கிறார்.

அவரது, முதல்பட நாயகியாக வரும் சாந்தினி தமிழரசன், அடுத்த 20-25 ஆண்டுகளுக்கும் ஆசை நாயகியாய் தொடர்வது, அக்மார்க் தமிழ் நாட்டு அரசியல். இன்ஷியலுக்கு ஒரு அம்மாஞ்சியும்,  இச்சைக்கு ஒரு அரசியல்வாதியும் இருக்கும்,  இருந்த  நிஜக்கதைகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, இந்த காட்சி நன்றாகவே புரியும்.

பிளாக் & ஒய்ட் பட நாயாகியாக அறிமுகமாகும் சாந்தினி, அற்புதமாக நடித்திருக்கிறார், அந்த படப்பிடிப்பு காட்சிகளில்.

தம்பி ராமையா, பொள்ளாச்சி பண்ணையாராக மனுஷன் வாழ்ந்திருக்கிறார். ஜார்ஜ் கோட்டை கனவுகள் செங்கல் செங்கலாக பிடுங்கப்படும் காட்சிகளில் மனிதர், உடைந்து நொறுங்கும் காட்சிகள் அட்டகாசம்.

சத்யராஜ் – மணிவண்ணன் காம்பினேஷனை நட்டி – தம்பி ராமையா காம்பினேஷன் நினைவு படுத்துகிறது.  நடிகர்களாக அவர்களை ஒப்பிடலாம் என்றால், சத்யராஜ் – இயக்குனர் மணிவண்ணன் காம்பினேஷனை, சத்யராஜ் – இயக்குனர் உமாபதிராமையா காம்பினேஷன் நினைவுபடுத்தியிருக்கிறது.

நெல்லைத்தமிழ் பேசி நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர், வழக்கம் போல அட்டகாசப்படுத்தியிருக்கிறார். ஓம் சக்தி பராசக்தி ஓடிப்போ தீயசக்தி என்று ஒரு இடத்தில் இவர் பேசும் வசனம் கைதட்டல்களை அள்ளும்.

காசுவாங்கிட்டு ஓட்டுப்போட சத்தியம் செய்யும் வாக்காளர்கள் தான் தீயசக்திகள் என்று, தீபா ஓட்டுக்கு பணம் வாங்கும் இடத்தில் வைத்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். சாதி பார்த்து, மதம் பார்த்து, இலவசத்திற்கு ஆசைப்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டை மாற்றும் சக்தி கொண்ட தங்கள் ஓட்டை ஆயிரத்திற்கும் ஐ நூறுக்கும் விற்றுக்கொண்டு இருக்கும் தீயசக்திகளாக வாக்காளர்கள் இருந்தால்,  அவர்கள் ஓட்டுப்போட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்பவன் எப்படி தூயசக்தியாக இருப்பான்!

தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர் மற்றும் இளவரசு ஆகியோர் உள்ளிட்ட வர்கள் போடும் கூவத்தூர் ஆட்டத்தை ஓவர் டேக் செய்யும் ஆட்டமும், இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து போடும் சண்டைக்காட்சியும் அற்புதம்.

கோல்டன் ஸ்டார் குல்கந்து குமாருக்கு கூட சண்டைக்காட்சிகள் இல்லை.

உள்ளூர் இயக்குனராகவும் , பாலிவுட் இயக்குனராகவும் வரும் ஜாவா சுந்தரேசன் கவனிக்க வைத்திருக்கிறார்.

நமக்கு கேப்டன் விஜயகாந்த் மேல் மரியாதை இருக்கிறது, அவர் காறித்துப்பும் அளவிற்கு சில பத்திரிகையாளர்கள் நடந்து கொண்டது துரதிஷ்டம்.

ஆனால், ஒரு காட்சியில், தம்பி ராமையா , எம் எஸ் பாஸ்கர், இளவரசு ஆகியோர் கொடுக்கும் அரசியல் பேட்டியில்,  ஊடகவியலாளராக ஆதித்யா கதிர் அவர்களைப் பார்த்து காறித்துப்பி  நிஜமான ஊடகவியலாளர் சார்பாக அரசியல் பழி தீர்த்துக்கொண்டது போல அமைக்கப்பட்ட அந்த காட்சி அற்புதம்.

நல்ல அரசியல்வாதியாக விஜய்காந்த், காறித்துப்புவதற்கு ஒரு மோசமான ஊடகவியலாளர் இருந்தார் என்றால், நல்ல  ஊடகவியலாளர் காறித்துப்ப பல அரசியல்வியாதிகளும் இருக்கிறார்கள் என்பது நிஜம் தானே!

இந்தப்படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் மனதிலும்  ஒவ்வொரு நடிகர்கள்  வந்து போவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அட வந்துட்டுதான் போகட்டுமே1

கதையை, பழைய தலைமுறையை வைத்து ஆரம்பித்து ஜென்சி தலைமுறையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் டி என் 2026 ஐ இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா!

தலைவர் தம்பி தலைமையில் பட வெற்றியைத் தொடர்ந்து, தலைவர் தம்பி தலைமையில் 2 என்று டைட்டில் வைத்தாலும் பொருத்தமாக இருக்கும் டி என் 2026 படமும் தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு ஒரு வெற்றிப்படமே!

டி என் 2026, வாக்கு எண்ணிக்கை நாள் வரை காத்திருக்கவேண்டியதில்லை, வெளியான நாளே ரிசல்ட் வந்துவிட்டது, படம் வெற்றி!