மனிதன் தெய்வமாகலாம்

Rating 3/5

57

a K Vijay Anandh review

அட …. இது பழைய கதைப்பா என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கும் கிராமங்கள் ஆகியவை இன்றைய தேதியிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட அராஜகங்கள் தலை தூக்கும் பொழுது அவற்றை முறியடிக்க கிருஷ்ணர்கள் அவதாரம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தப் படத்தில் ராகவன் என்கிற பெயரில் அவதாரம் எடுத்திருக்கும் கிருஷ்ணர், செல்வராகவன்.

முந்தைய காக்கி சர்க்கஸ் விமர்சனத்தில் குறிப்பிட்டது போல, இந்தப் படத்திலும் அழகான ஒரு ஓபனிங் காட்சி. அமுதா என்கிற சிறுமி உள்ளிட்ட அந்த கிராமத்து சிறுவர் சிறுமியர் ஏரிக்கரையில் அமர்ந்திருக்க, நூறு என்னும் வரை தண்ணீருக்குள் மூச்சை பிடித்துக் கொண்டு இருந்து வெளியே வரும் செல்வராகவன்.  உறவு என்று யாரும் இல்லாத அவரை மாமா மாமா என்று அந்த குழந்தைகள் பின்தொடர்வதும் அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக போட்டோ எடுப்பது முதல் பெண் பார்க்க செல்வது வரையிலான காட்சிகள் அழகு!

அவருக்குப் பெண் கிடைக்காமல் இருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கலாம், அன்றாடம் காய்ச்சி , உறவுகள் இல்லாமல் தனி மரமாக இருப்பது, அவர் வாழும் ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது போன்றவைகளை பிரதானப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவரது தோற்றத்தை வைத்து எனக்கெல்லாம் யார் பெண் கொடுப்பார்கள் என்று அவரையே பேச வைத்திருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கின்றது. ஏனென்றால் செல்வராகவன் ஒரு சாதனையாளர், மிகச் சிறந்த இயக்குனர் மிகச் சிறந்த நடிகராகவும் இன்று வலம் வந்து கொண்டிருக்கிறார்க Raw அதிகாரியாக என்றாலும் சரி Raw ஆக என்றாலும் சரி எந்தவிதமான கதாபாத்திரத்திற்குள்ளும் அட்டகாசமாக பொருந்தி நடிக்கக் கூடிய நடிகராக இன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் குஷி ரவி பெரிய ஆசைகள் எதுவும் இல்லாத நல்ல மனிதனை கணவனாக அடைய வேண்டும் என்கிற ஒற்றை இலக்கு கொண்ட நாம் பெரும்பாலும் பார்த்து மகிழ்ந்து போற்றும் பெண்களின் பிரதிநிதியாக அழகாக நடித்திருக்கிறார். செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு சென்ற பிறகு, அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதலான ஜோடியான கௌசல்யாவையும் ஆர் எஸ் சதீஷையும் ஒவ்வொரு காட்சியிலும் சாப்பிட்டுப் போங்க சித்தப்பா சாப்பிட்டு போங்க சித்தி என்று சொல்வது மிகவும் யதார்த்தமாக இருக்கின்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யாவை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது, அவரது கணவராக நடித்திருக்கும் ஆர் எஸ் சதீஷும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நேர்மையான அரசியல்வாதி ர பார்த்திபனாக, ஒய் ஜி மகேந்திரா வழக்கம் போல மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.  அவரது மைத்துனராக அவர் வீட்டுக்குள் நுழைந்து அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வில்லனாக மைம் கோபியும் இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

செல்வராகவனை, மாமா மாமா என்று அழைத்துக் கொண்டே சுற்றி வரும் வாண்டுகள் அருமை. அப்படி நம்மை நம்பி வரும் குழந்தைகளிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று செல்வராகவன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு பாடமே எடுத்திருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். கிளைமாக்ஸ் இல் மூன்று அசுரர்களை வதம் செய்த பிறகு செல்வராகவன் தெய்வமாகும் முன்பே இந்த குழந்தைகளிடம் அவர் பழகும் முறையிலேயே தெய்வமாகத்தான் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஊருக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று நடையாய் நடந்து ஒரு கட்டத்தில் அந்த போராட்டத்தில் வெல்லும் நேர்மறை கதாபாத்திரமாக நடித்திருக்கும் பெரியவர் கவனிக்க வைத்திருக்கிறார்.

முன்பே குறிப்பிட்டது போல, அசுர வதம் செய்து, மனிதனாக இருந்து தெய்வமாக மாறுகிறார் செல்வராகவன்.

பாகாசுரன் படத்திலும் இதே போன்ற கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்து விட்டபடியால், ஒரு ரிப்பீட் படமாக இந்த படமும் தோன்றி விடாத படி மெனக்கெட்டு வேறு ஒரு களத்தில் பயணித்திருக்கிறார்கள்.

மனிதன் தெய்வமாகலாம், நிஜம்!