a K Vijay Anandh review
பிரதீப் ரங்கநாதனின் முந்தையை படங்களை பார்த்தாலே தெரியும், இறங்கி வந்து ந(அ)டிப்பது மற்றும் உடல்மொழிகளை பார்த்தாலே தெரியும், அந்த மேனரிசம் உடல்மொழி எல்லாமே , ஜென் சி, எஸ் ஜே சூர்யாவை பார்ப்பது போலவே இருக்கும். இந்தப்படத்திலோ, பிரதீப் ரங்கநாதனை எஸ் ஜே சூர்யாவுடனேயே மோத விட்டிருக்கிறார்கள். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு பட்டையைக்கிளப்பியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, பிரதீப் ரங்கநாதன், சீமானுடன் வேறு மோதுகிறார், அந்த சில நிமிட கராத்தே சண்டைக்காட்சி அருமை.
எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று ஒரு மக்கள், எனக்கென்று ஒரு மொழி, எனக்கென்று ஒரு இயற்கை சார்ந்த பழக்கவழக்கம் என்று திருவிளையாடல் படத்தில் முருகன் கோபித்துக்கொண்டு சென்று உருவாக்கிய ஒரு இடம் இருந்தது என்றால், அது இந்தப்படத்தில் சீமான் உருவாக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் பசுமை உலகமாகத்தான் இருக்கவேண்டும். அந்த உலகத்திற்குள், சீமான் தூய தமிழில் பேசுவது போலவே, அந்த உலகிற்குள் தண்டனைக்கைதிகளாக வருபவர்களும் மொபைலை விடுப்பது போல, அந்நிய மொழிக்கலப்பையும் விடுத்து அவரைப்போலவே தூய தமிழில் பேசுவது போல அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!
தனது மொபைல் ஆப்பால் பலபேர் வாழ்க்கையில் ஆப்பு வைத்துக்கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யாவும் சீமானும் மோதிக்கொள்ளும் காட்சி, அடிதடி சண்டையாக அல்ல, வாக்கு வாதம் செய்யும் காட்சி அருமை.
“ நான் மேற்கத்திய அலோபதி மருத்துவமுறையில் செய்யப்படும் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற சோதனைகளையே ஏற்றுக்கொள்ள மாட்டேன் … ஏனென்றால், உலகம் முழுவதும் உள்ள 800 கோடி மக்களுக்கும், உடலில் அவன் சொல்லும் அளவில் அனைத்தும் இருக்கவேண்டும் என்று நினைப்பதே ஒரு மருத்துவ கொள்ளை.. அப்படி இருக்கும் போது, இருவர் மனதை கணித்து காதலைச் சொல்லும் உன் செயலியை எப்படி ஏற்றுக்கொள்வேன்…” என்று சீமான் பேசுவதாக ஒரு வசனம் வைத்திருந்தால், அது LIK க்கு எதிரான பிரதீப் ரங்க நாதனின் போராட்டத்திற்கும் ஒரு வலு சேர்த்திருக்கும்1
எதிர்காலத்தில் அதாவது 2040 ல் சென்னையின் கட்டுமானம் மற்றும் போக்குவரத்து எல்லாமே மாறிப்போயிருக்கிறது, உண்மையில் அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய சிந்தனை. படைப்பாளிக்கு வந்திருக்கிறது, விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள். ஆனால், டிரோன் ஷாட்டில் காட்டப்படும் போது, கூவம் அதே அழுக்காகத்தான் இருக்கிறது, அது ஒரு நெருடல். அந்தத்தண்ணீரை கண்ணாடி மாதிரி பளபளப்பாக்கியிருந்தால், சரி கூவத்தை சாக்கடையாகவே வைத்திருக்கும் அரசியல்வாதிகள் அப்பொழுது நிரந்தர ஓய்வுக்கு மக்களால் அனுப்பப்பட்டிருப்பார்கள் என்று ஒரு ஆறுதலாகவாவது இருந்திருக்கும்!
அப்படி எல்லாமே இயந்திரத்தனமாக ஆகிப்போயிருந்தாலும், மனிதர்கள் மொபைலுக்குள் மூழ்கிப்போயிருந்தாலும், பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் காதலும், உறவுகளின் பாசப்பிணைப்பும் குறிப்பாக பெற்றோர்கள் – குழந்தைகளின் பாசப்பிணைப்புகளும் மாறாதது என்பதாக கதை சொன்ன விதம் அருமை.
பேசுவதற்கு மட்டும் பயன்படும் கைபேசியில் இருந்து, நிறைய செயலிகளைக் கொண்ட ஸ்மார்ட் போனுக்கு மாறியபோது, மனிதர்களிடமும் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டது. நேர்மறையாக கொஞ்சம் என்றாலும், பெரும்பாலும் எதிர்மறையான , இந்த மானுட சமூகத்துக்கு கேடான விஷயங்களாக நடந்துகொண்டிருக்கின்றன.
கண்முன் பார்க்கும் பெரிய உதாரணம். கண், காது, மூக்கு என்று ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளைக் கூட அவற்றின் குழந்தைத்தனத்திற்கு உரிய சேட்டைகளுக்கு தடைபோடுவதாக நினைத்துக்கொண்டு, அவர்கள் கைகளில் சகல வசதிகளும் அடங்கிய ஸ்மார்ட் போனைக்கொடுத்து, சில வருடங்களில் அவர்களின் கண்களை ஊனமாக்கி, கண்ணாடி போட வைத்துவிடுகிறோம். அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடித்து, சில நேரங்களில் புத்திசுவாதீனம் இல்லாதவர்களாக ஆக்கிவிடுகிறோம்.
சோறு இருந்தால் தான் சாப்பிடுவேன், குழம்பு இருந்தால் தான் சாப்பிடுவேன், சத்தான காய்கறிகள், இறைச்சிகள் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்பது போய், கையில் மொபைல் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்கிற நிலைக்கு குழந்தைகளை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறோம்.
எவ்வளவு பெரிய மகாபாவம் அது! இந்த பிரபஞ்சத்தின் வருங்காலத்தை இருட்டாக்கலாமா? என்கிற கேள்வியுடன், அவர்களை மொபைலில் இருந்து விடுதலை வாங்கித்தரும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப காட்சிகள் அற்புதம், சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை, அடிக்கப்பட்டிருக்கும் அபாய மணி.
அப்படி ஆரம்பித்து, இணையும் இருமனங்களிடம் குழப்பம் விளைவிக்கும் LIK ஆப்புக்கு ஆப்பு வைப்பதுதான் படம்.
பிரதீப் ரங்க நாதனுக்கு, யானைப்பசிக்கும் சோளப்பொரி போன்று, கொஞ்சம் பத்தலயோ என்று நினைக்கத்தோன்றும் திரைக்கதை, ஏனென்றால், இதற்கு முன் மூன்றே படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும், அந்தளவிற்கு நடித்திருப்பார்.
நாயகி க்ரித்தி ஷெட்டி, பாபிடால் போல வந்து போகிறார், அவ்வப்போது அழுகிறார்.
யோகிபாபு, மாளவிகா காலத்தில் இருந்து காத்திருப்பார் போல ஓபன் பிரண்டாக, கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
இன்றைய தேதியில் தமிழ் பேசி நடிக்கும் ஒரே நடிகர் – அரசியல்வாதியாக சீமான், அன்புக்கடலாக நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா, சொந்தபிரசினையை சமாளிப்பதற்காக செயலி ஆரம்பித்து, பின் அதனை முழுவதுமாக இழந்து நொந்து போய் நிற்கும் கதாபாத்திரம் அருமையாக நடித்திருக்கிறார்.
கெளரி ஜி கிஷன், முற்றிலும் மாறுபட்ட கெளரி ஜி கிஷனை பார்த்து ரசிக்கலாம்.
எஸ் ஜே சூர்யாவின் உதவியாளராக வரும் ஆனந்த்ராஜின் மூக்குக்கண்னாடி பிரேம், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அனைத்தையும் மீறி திரும்பிப்பார்க்க வைக்கும். ஹெச் என்று இனிஷியல் அவருக்கு இருப்பதால், பல இடங்களில் அவரை எச்சை என்று அழைத்து அழகு பார்க்கிறார் எஸ் ஜே சூர்யா! சீமானோ ஹெச் மட்டுமல்லடா ஆங்கில எழுத்துக்கள் அத்தனையுமே எச்சை தான் டா என்று சொல்லாமல் சொல்லி தூய தமிழில் பேசிக்கொண்டு போய்க்கிட்டே இருக்கார்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை ஆகியவை படத்திற்கு பெரியபலம்.
LIK, மொபைலில் மூழ்கிப்போன குழந்தைகள், இளைஞர்கள் முதல் அவர்கள் கைகளில் மொபைலைக்கொடுக்கும் பெரியவர்கள் வரை பார்த்து விழிப்புணர்ச்சி பெற வேண்டிய படம்!