a K.Vijay Anandh review
மூன்றே படங்கள், தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம், தன் படங்களுக்கென்று ஒரு பார்வையாளர் வட்டம் என்று தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர் விஜயகுமார். இந்தப்படத்தில் கிரியேட்டிவ் இயக்கு நராகவும் நாயகனாகவும் ஏற்றுக்கொண்ட இருவேறு பொறுப்புகளில் சிறப்பாக முத்திரை பதித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க அந்த நாயகன் பள்ளிச்சீருடையிலும் செட் ஆகவேண்டும், ஆக்ரோஷமான வாலிபனாகவும் வலம் வரவேண்டும். ஒரு நடிகனாக, விஜயகுமாருக்கும் அந்த வரம் வாய்த்திருக்கிறது. தானுண்டு தன் ஃபுட்பால் விளையாட்டு உண்டு என்று போய்க்கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையையும் – தனது சக நண்பர்கள் வாழ்க்கையையும் தவறான கூட்டாளிகளின் கோரப்பிடியில் சிக்கி தடம் புரண்டு விடாமல் காக்கும் மிகப்பெரிய பொறுப்பை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.
பெஞ்சமினாக வரும் கார்த்திகேயன் சந்தானம், கிருபாவாக வரும் சங்கர் தாஸ், ஜோசப்பாக வரும் அவினாஸ் ரகுதேவன் என்று இந்த மூவர் கூட்டணி கவனிக்க வைக்கிறது.
வடசென்னையில், கிறுத்துவம் நுழைய ஆரம்பித்ததிலிருந்து அங்கே நடக்கும் அவலங்களை மிகவும் துணிச்சலாக கண் முன் காட்டியிருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான சிவாலயங்கள், மிகப்பெரிய சித்தர் பீடங்களை கொண்ட வட சென்னையில் இன்று எங்கு பார்த்தாலும் சிலுவை, சர்ச் என்று ஒரு திரைப்படம் எடுக்கும் போது கூட அவை இல்லாமல் ஒரு பிரேம் கூட வைக்க முடியாத அளவிற்கு ஆகிப்போனதுடன், மணியடிக்கும் நேர பைபிள் வசனம் என்று முற்றாக மாறிப்போயிருக்கிறது வடசென்னை. உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தியதில் இயக்குனர் அபாஸ் அ ரஹ்மத், எழுத்தாளர் சசி, ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஆகியோரை பாராட்டியே ஆகவேண்டும்.
குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் வரும் சண்டைக்காட்சிகளை ஜெட் வேகத்தில் பயணித்து காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ.
Fight Club அல்லது Football Club இரண்டே வாய்ப்புகள தாம் அந்த இளைஞர்களுக்கு எனும் நிலையில், ஆரோக்கியமான ஒன்றை தேர்ந்தெடுத்து சுபமாக முடித்திருக்கிறார்கள்.
வெற்றிமாறன் முதல் ப. ரஞ்சித் வரை வடசென்னையை பல்வேறு கோணங்களில் ஏற்கனவே காட்சிப்படுத்தியிருந்தாலும், இந்த இளைஞர் படை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் காண்பித்து அசத்தியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.