கண்ணகி

mysixer rating 5/5

236

a K.Vijay Anandh review

“திருமணம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு..” என்கிற வார்த்தைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதை, கண்ணகி.

இந்த வயதில் இப்படி ஒரு சமூகப்பொறுப்புள்ள சிந்தனையை , அதுவும் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்கிற பயணத்தை, இவ்வளவு நேத்தியாக எழுதி அதை இயக்கி, அதனை இன்றைய தலைமுறையினரும் கொண்டாடும் படமாக கொடுக்க முடியுமா..? என்றால், இந்த இளம் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் சாதித்து காட்டியிருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட கதைக்கரு, அமைத்திருக்கும் அட்டகாசமான திரைக்கதை, அதனை ரசிகர்களுக்கு கொடுத்த விதம் அத்துடன் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஷோவா, மெளனிகா, மயில்சாமி ஆகியோரின் வசீகரிக்கும் திரைமொழிகள் என்று அனைத்துக்குமாக சேர்த்து இப்படத்திற்கு முழுமையான ஸ்டார்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கொங்கு மண்டலத்தில், சமூக கட்டுப்பாடுகளுடன் வளரும் அம்மா – கொஞ்சம் முற்போக்காக வளரும் அப்பா ஆகியோருக்கு பிறக்கும் ஒரே செல்ல மகள், அவர்களின் சுற்றம் மற்றும் நட்பு என்று அழகாக ஆரம்பிக்கும் கதை, இன்னும் ஒரு மூன்று அனுபவங்களுடன் பரவசப்படுத்துகிறது.

இது தான் கதை, இப்படித்தான் நடக்கப்போகிறது என்று முதல் காட்சியிலேயே ஒரு வசனம் மூலம் சொல்லி விட்டு, யாருமே யூகிக்கமுடியாத அளவிற்கு திரைக்கதையை நகர்த்தியிருக்கும் விதம் பாரட்டுதற்குரியது. பழைய ஜாம்பவான் விசு முதல் இன்றளவும் திரைக்கதை மன்னனாக ஜொலித்து கொண்டிருக்கும் கே பாக்யராஜ் வரை உச்சிமுகரத்தக்க திரைக்கதை விருந்தாக கண்ணகியை கொடுத்திருக்கிறார் யஷ்வந்த் கிஷோர்.

மெளனிகா, பாலுமகேந்திரா பட்டறையில் செதுக்கப்பட்ட இன்னொரு வைரம், அசால்ட்டாக நடித்திருக்கிறார். கணவன் இருக்கும் வரை காட்சிக்கு காட்சி காட்டும் கெத்து, அவனில்லாத நிலையில் உடைந்து போகும் காட்சிகள் என்று அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அட, சீக்கிரமா போயிட்டீங்களே ஐயா மயில்சாமி, இந்தப்படம் அவருக்கு இன்னொரு இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்திருக்கும். அந்தளவிற்கு இதுவரை பார்க்காத மயில்சாமி, அன்பான அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.

அம்மு அபிராமி, வித்யா பிரதீப் வெவ்வேறு அனுபவங்களை அழகாக பிரதிபலித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஷாலின், 80-90 களில்  புரட்சிகரமான கதாபாத்திரங்களில் ஜொலித்த – பார்த்து மகிழ்ந்த தமிழ் சினிமா  நாயகிகளின் மொத்த உருவமாக  ஒத்தையில் வந்து மிரட்ட்யிருக்கிறார்.

கீர்த்தி பாண்டியன், அட சட்டென்று வேறு ஒரு கியரில் பயணிக்க ஆரம்பித்திருப்பதிலிருந்து இவரது சினிமா மீதான காதலுக்கு ரசிகர்கள் மரியாதை செய்ய ஆரம்பிக்கப்போகிறார்கள், இந்தப்படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான் அங்கீகாரத்தை வழங்கும்.

கண்ணகி, பழைய தமிழ் சினிமாக்களின் கிளாசிக் திரைக்கதையையும் புதிய தமிழ் சினிமாவின் பட ஆக்கத்தையும் சரியாக கலந்து வெளிவந்திருக்கும் அட்டகாசமான திரைப்படம்.