a K.Vijay Anandh review
சுன்னத் திருமணத்தில் ஆரம்பித்து முடி வெட்டுவதாக பயணித்து சதுப்பு நிலங்களை காப்பாற்றுவதற்காக குரல் கொடுத்து பறவைகள் தங்கும் மரங்களை வெட்டாதீர்கள் என்கிற செய்தி சொல்லி முடிகிறது சிங்கப்பூர் சலூன்.
சமகால ஆர்ஜே பாலாஜி, படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை சோகமும் இறுக்கமும் கலந்த கலவையாகவே வந்தாலும் அவரது பால்ய கால ஆர் ஜே பாலாஜி யாக வரும் சிறுவர்கள் அதாவது எட்டு வயது மற்றும் பத்து வயது ஆர் ஜே பாலாஜியாக வரும் சிறுவர்கள் அவரது நண்பன் பஷீர் ஆக வரும் சிறுவர்களும் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ரசிகர்களை ஒரு முடிவுக்கு வர வைத்து விடுகிறார்கள்.
எட்டு வயதில் சக நண்பனுக்கு சுன்னத் கல்யாணம் நடைபெற்ற நிலையில் ஊரே பார்க்குது நான் பார்த்தா என்னடா தப்பு….? என்று கேட்கும் போதும், 13 வயதில் நிலாவின் அருகில் அமர்வதற்காக டியூஷனுக்கு வரும்போது நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் சார் என்று டியூஷன் வாத்தியார் இமானிடம் வம்பு பண்ணும் போதும் சரி படத்தை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்துகிறார்கள். டியூசன் வாத்தியாராக உட்கார்ந்து கொண்டே ரசிகர்களை உட்கார வைக்கும் காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார் இமான் அண்ணாச்சி.
சச்சா ஸ்டைலில் கத்தரி பிடிக்க வேண்டும் என்ற முடிவு செய்த பிறகு, அது சுன்னத் திருமணத்திற்கா ஹேர் ஸ்டைல் ஆவதற்காக என்பதை சிறுவன் கதிரிடம் கேட்காமல், முன்னதில் வாய்ப்புகள் லிமிடெட், பின்னதில் அன்லிமிடெட் என்று இயக்குனர் கோகுலாகவே முடிவு செய்திருப்பார் போலும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான் நாவிதராக ஆக வேண்டுமா என்ன இன்று ஹேர் ஸ்டைலிஸ்ட் என்பது ஒரு கார்ப்பரேட் வியாபாரம் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் விதமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆர் ஜே பாலாஜி, லால் – சச்சாவின் ஸ்டைலில் கவரப்பட்டு பிஇ படித்துவிட்டு நம்பர் 1 ஹேர் ஸ்டைலிஸ்ட் வேண்டும் என்ற முடிவுடன் சென்னைக்கு பயணமாகிறார்.
தான் விரும்பிய லட்சியத்தை அடைந்தாரா? என்பதுதான் இரண்டாவது பாதி.
இதற்கு நடுவே சிறுவாபுரி முருகன் பக்தராக வரும் சத்யராஜ் இடைவேளைக்கு முன் படத்தை செட் வேகத்தில் உந்தித் தள்ளுகிறார். பொம்மனாட்டிக்கு பிறந்த கம்மனாட்டி என்று கூறிக் கொண்டே ஒய் ஜி மகேந்திராவும் அதே நக்கலுடன் பதிலடி கொடுக்கும் சத்யராஜுமாக இடைவேளை நெருங்க நெருங்க ரசிகர்களின் இடுப்பு எலும்பு முறிவது நிச்சயம், சிரித்து சிரித்து.
ஒரு முடி திருத்துபவரால் ஒருவனின் முகத்தையே திருத்தி விட முடியும் என்பதாக குடிசை வாசிகளில் வசிக்கும் இளைஞர்களை மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ஒன்றில் இறுதி போட்டி வரை செல்ல வைக்கும் ஆர் ஜே பாலாஜி, முடி திருத்துபவர்களுக்கு ஒரு உத்வேகம் தந்திருக்கிறார்.
அவரது சகலையாக வரும் ரோபோ சங்கரும் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பி இருக்கிறார்.
படத்தில் ஒரு உண்மையான தீர்வு ஏற்படுவதாக காட்டுவதற்காக, நிஜமான முதலமைச்சரையே முதலமைச்சராகவே நடிக்க வைத்திருப்பது சுவாரசியமான விஷயம். அதே சமயம், சுரேஷ் மேனனுக்கு ஒரு மேக் ஓவர் செய்து அனுப்புவது போல, மு க ஸ்டாலினுக்கு சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் முறுக்கு மீசையும் ஒரு முதிர்ந்த லுக்குடன் கூடிய ஸ்டைலுமாக மேக் ஓவர் செய்து அனுப்பி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். ஏனென்றால் , அவரைப் பார்த்தால் கல்லூரி மாணவனாக தெரிகிறது என்று பிறர் சொல்வதாக அவரே ஆதங்கப்பட்டிருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரை விட வயது குறைந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் காணப்படும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக புள்ளி வைத்த கூட்டனையாளர்கள் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட பலமாடி கட்டிடங்கள் இடிவதற்கான காரணமாக ஒரு சிறு நிலநடுக்கத்தை வைத்திருக்கலாம். முதல் சலூனையே ஐந்தரை கோடி செலவில் அமைக்கிறாரே என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, திருவண்ணாமலையில் இருந்து ஒரு சித்தரே – அரவிந்த்சாமி புறப்பட்டு வந்து ஆர் ஜே பாலாஜிக்கு அறிவுரை சொல்வது போன்ற காட்சி பதிலாகவும் புதிதாகவும் அமைந்திருக்கிறது.
தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நிலை நிறுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. இந்தக் கலை ஆர் ஜே பாலாஜிக்கு கைகூடி இருக்கிறது.
அவரை நம்பி இந்த படத்தை தயாரித்திருக்கும் ஐசரி கணேஷ் மற்றும் இயக்கி இருக்கும் கோகுல் ஆகியோருக்கு சிங்கப்பூர் சலூன் ஏமாற்றத்தை தராது.