BirthMark

mysixer rating 4.5/5

210

a K.Vijay Anandh review

குழந்தை பெறுவது நவீன மருத்துவம் மூலம் சிசேரியன் என்கிற அறுவை சிகிச்சையினால் மிகவும் எளிதாகி விட்ட இந்த காலகட்டத்தில், பெண்கள் பிரசவ வலி என்பதையே கிட்டத்தட்ட மறந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இயற்கையான முறையில் குழந்தையை பிரசிபிக்கும் பொழுது ஏற்படும் பிரசவ வலியை விட, சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சைகளால் அவர்களுக்கு ஏற்படும் நீண்ட கால வேதனைகளை மறந்து விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படியான ஒரு காலகட்டத்தில் இயற்கை பிரசவம் என்கிற ஒரு களத்தை மையப்படுத்தி அதற்குள் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் ஒரு சில மோதல்களை கோர்த்து அழகான படமாக பர்த் மார்க்கை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன்.

கணவனாக –  ராணுவ வீரர் டேனியாக சபீர் மற்றும் நிறை மாத கர்ப்பிணி மனைவியாக மிர்னா ஆகியோர்தான் முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் அவர்களை தவிர வெறும் நான்கே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேர படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

எல்லையில் ஒரு போர், அதனைத் தொடர்ந்து எழும் மன உளைச்சல்கள் அதை நிவர்த்தி செய்ய எடுத்துக் கொள்ளும் தொடர் மதுபானங்கள், ஆகியவை சபீரின் மனதை தொடர்ந்து குழப்பத்தின் மேல் குழப்பமாக வைத்திருக்கின்றன. அதன் காரணமாக தன் மனைவி வயிற்றில் வளரும் குழந்தை தனது குழந்தை அல்ல  என்கிற முடிவுக்கு வருவதோடு மட்டுமல்லாமல், அந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அவர் மனைவியுடன் மறுபடியும் முதலில் இருந்து சந்தோஷமான வாழ்க்கையை தொடங்கலாம் என்று கூறும் இடங்களில் உச்சகட்ட சைக்கோ தனத்தை மேலும் தனது மனைவி மீது வைத்திருக்கும் காதலையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் சபீர்.

தனது கணவன் தன்னை அன்பாக பார்த்துக் கொள்கிறானா அல்லது பழிவாங்குகிறானா என்பது தெரியாமல் ஒரு பலியாடாக அவனது இழுப்புக்கு எல்லாம் ஈடு கொடுக்கும் நிறைமாத கர்ப்பிணி மனைவியாக மிர்னா, மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். கணவனின் சைக்கோ தனம் தெரிந்து இது நம்ம குழந்தை தான் என்று அழுது அவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் எப்படியாவது தன் சைக்கோ கணவனிடம் இருந்து தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று துடித்து இயற்கை மருத்துவமனையில் இருந்து வெளியே தப்பித்து ஓடும் காட்சிகளிலும் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயற்கை மருத்துவமனையில், மூத்த மருத்துவச்சியாக நடித்திருப்பவரும் அவருக்கு உதவியாக இருக்கும் தீப்தி மற்றும் பொற்கொடி :  குறிப்பாக இந்திரஜித் பேச்சு குறைபாடுடன் வரும் இந்த ரஜித் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

உதய் தங்கவேலின் ஒளிப்பதிவு மற்றும் விஷால் சந்திரசேகரின் இசை இரண்டும் இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன.

நேச்சுரல் பெர்த்திங் என்கிற கான்செப்ட் உடன் தொடங்கும் படம் சூப்பர் நேச்சுரல் பெர்த்திங் ஆக முடிவது மிக மிக சுவாரசியமான அனுபவத்தை கொடுத்திருக்கின்றது.

முன்பே குறிப்பிட்டது போல மனைவி மீது ஏற்படும் ஒரு சந்தேகம்  என்பதாக படம் ஆரம்பித்து, இயற்கை முறையிலான பிரசவத்தை ஊக்குவிக்கும் படமாக பயணிப்பது நிச்சயம் இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவத்தை  கொடுக்கும் என்றால் மிகையாகாது.

Birth Mark truly a Bench Mark in terms of “conceiving” and executing !!