நினைவெல்லாம் நீயாடா

mysixer rating 3.5/5

256

a K.Vijay Anandh review

நிச்சயமாக சோகம் என்பதும் அற்புதமான உணர்வு தான். சோகத்தில் இருந்து தான் அன்பு அரவணைப்பு அனைத்தும் பிறக்கிறது. அந்த சோகம் என்கிற உணர்வுக்கு மரியாதை தரும் படமாக நினைவெல்லாம் நீயாடா வெளியாகி இருக்கிறது.  கிட்டத்தட்ட இரண்டாவது பாதி முழுவதும் சோகத்தில் பிழிந்து எடுத்திருந்தாலும் இங்கே குறிப்பிட்டது போல அந்த சோகத்தில் இருந்து அன்பும் அரவணைப்பும் பிறக்கின்றது கதையும் சுமூகமாக சுகமாக முடிகிறது. எண்பதுகளில் சிவக்குமார் மற்றும் மோகன் ஆகியோர் நடித்த படங்களை பார்த்த ஒரு உணர்வு. இன்றைய தலைமுறையினர் அதே ரசனையுடன் இருப்பார்களா ? என்கிற கேள்வி எழுந்தாலும் இன்றைய பெண்களின் பிரதிநிதியாக ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனிஷா யாதவ் காதலுக்காக தொடர்ந்து பைத்தியமாகவே இருந்துவிட முடிவு செய்கிறார் என்கிற இடம் இந்த படத்தை இன்றைய தலைமுறையினரும் கொண்டாடுவார்கள் என்று கூறுகிறது. காதல் பைத்தியம் கேள்வி பட்டு இருப்போம் காதலுக்காகவே பைத்தியமாக நடிப்பது ஒரு புதிய சிந்தனை அதனை நன்றாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

முதல் பாதியில் கௌதம் ஆக வரும் பிரஜனின் பள்ளி கால காதல் வாழ்க்கை படத்தை ராக்கெட் வேகத்தில் நகர்த்துகிறது. வழக்கம் போல என்றாலும் இந்த படத்தில் வரும் பள்ளி காதல் வழக்கத்தை விட அதிகமாகவே ரசிகர்களை வசிகரிக்கும்.

தனக்காக காத்திருப்பான் என்று நம்பி தான் செல்ல இயலாத நிலையில் தனது தோழியை தனது இடத்தில் அனுப்பி வைக்கும் பிரியங்கா ஆகட்டும் பிரியங்காவிற்காக இங்கே வந்து பிரஜனின் வாழ்க்கையில் நுழைய முற்பட்டாலும் ஆனந்தி என்கிற அப்பாவி பெண்ணிற்காக தனது காதலை தியாகம் செய்துவிட்டு அமெரிக்கா திரும்பும் சினாமிகா ஆகட்டும், உண்மை தெரிந்து தான் நேசித்த மலர்விழி கிடைக்காவிட்டாலும் தன்னை நேசித்த ஆனந்தியை அரவணைத்துக் கொள்ளும் பிரஜன் ஆகட்டும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பள்ளி தோழர்களாக வரும் மதுமிதா, ரெடின் கிங்ஸ்லி, அமலன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வெட்டு குத்துகள் போதை கடத்தல் சமாச்சாரங்கள் ஆகியவை நீக்கமற நிறைந்துவிட்ட திரைப்படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மென்மையான காதல் கதையை கொடுக்க வேண்டும் என்கிற படக்குழுவினரின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.