ஒரு தவறு செய்தால்

mysixer rating 5/5

1,250

a K.Vijay Anandh review

மாற்றுத்திறனாளி நடிகரான விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை வைத்து,  ஓட்டுக்கு காசு வாங்குவது எவ்வளவு ஆபத்து மற்றும் கேவலமான செயல் என்பதையும், காசு வாங்காமல் ஓட்டு போடும் பொழுது ஆர்வமும் திறமையும் இருந்தால் ஒரு சாமானிய வீட்டுப் பிள்ளைக்கும் இந்த நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் இறுதிக்காட்சியாக வைத்து இந்த தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி இருக்கும்  ஒரு தவறு செய்தால் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பார்த்து மகிழ வேண்டும்.

வறுமையும் சமூக கோபமும் ஒருங்கே சேர்ந்த பாரதியாரை ஒத்த ஒரு உதவி இயக்குனர் மற்றும் அவரது நண்பர்கள்  என்று எளிமையான கதாபாத்திரங்களை வைத்து ஒரு வலிமையான ஆயுதமாக ஒரு தவறு செய்தால் படத்தை இயக்கியிருக்கிறார் மணி தாமோதரன்.

வாடகை கொடுக்க முடியாமல் வீட்டை விட்டு விரட்டி விடப்படும் உதவி இயக்குனர் ராம் மற்றும் அவரது நண்பர்கள் அவரோடு புதிதாக இணைந்து கொள்ளும் ஸ்ரீதர் அன்றைய இரவை எங்கே கழிக்கலாம் என்று அலைந்து கொண்டு இருக்கும் நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் இருக்கு இலவச சிகிச்சை கிடைக்கும் என்று ஒரு whatsapp ஃபார்வேர்ட் மெசேஜை நம்பி சென்னை வந்து ஏமாந்த முன்னாள் காதலி தஷ்மிகா தனது குடும்பத்தோடு தங்குவதற்கு போடும் ஒரு ரூமில் அவர்கள் ஊருக்கு சென்று விட்ட நிலையில் நடக்கிறது முழுக்கதையும் .

ராம் மற்றும் தஷ்மிகா ஆகியோருக்கு இடையில் நடக்கும் பள்ளிப்பருவ காதலும், வேறு ஒருத்தரை திருமணம் செய்து தாய்மை அடைந்து விட்ட நிலையிலும், நீ ஒரு நாள் ஜெயிப்படா என்று தனது நண்பனை தஷ்மிகா ஊக்குவிக்கும் இடத்திலும், ஒவ்வொரு இடத்திலும் அவன் வறுமையில் வாடுகிறான் என்பதை அறிந்து கொண்டு தலையணை உறைக்குள மூவாயிரம் ரூபாய் வைத்துவிட்டுச் செல்லும் காட்சியிலும் அழகான குறுங்கவிதை சொன்ன இயக்குனர் மணி தாமோதரன், அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு விறுவிறுப்பான படமாக ஒரு தவறு செய்தாலை கொண்டு போயிருக்கிறார்.

எந்த ஒரு துறையைச் சேர்ந்தவர்களையும் விட  வறுமையில் உழல்கின்ற நிலையிலும் சமூக முன்னேற்றத்திற்காக யோசிக்கும் உதவி இயக்குனர்கள் அரசியலுக்கு வருவதற்கு முதன்மையான தகுதியானவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த படம்.

அடுத்த நாள் அறையை காலி செய்வதற்குள் கோடீஸ்வரன் ஆவதற்கு ஸ்ரீதர் மற்றும் அவரது காதலியாக வரும் உபாசனா ஆகியோரை வைத்து, தேர்தல் பிரச்சாரம் முடிந்த அந்த ஒரு நாளில் அவர்கள் போடும் திட்டமே ஒரு தவறு செய்தால் திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

சமூக வலைத்தள டிஜிட்டல் தேர்தல் பிரச்சாரங்கள் யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதை விட யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த எல்லைக்கும் சென்று வேலை செய்யும் என்பதை இந்த படம்,  படம் பிடித்து காட்டுகிறது.

ராம், தஷ்மிகா , ஸ்ரீதர் , உபாசனா மற்றும் அவரது நண்பர்களாக வரும் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சுயேச்சையாக போட்டியிடும் நமோ நாராயணன் மற்றும் அவரது லீகல் அட்வைஸராக வரும் எம் எஸ் பாஸ்கர் ஆகிய வரும் வழக்கம் போல சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள். குறிப்பாக எம்எஸ் பாஸ்கர், கோவணம் கட்டிக்கொண்டு ஒரு கிராமத்து தாத்தாவாகவும் நடிப்பார் டிப் டாப்பாக பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு காலில் ஷூ டக்கின் செய்யப்பட்ட முழுக்கை சட்டை என்று ஒரு லீகல் அட்வைஸருக்கே உரித்தான கெத்தான உடல் மொழியுடன் அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

ஒரு தவறு செய்தால், அடுத்த ஐந்து வருடங்கள் உங்களுக்கு அவஸ்தை தான் என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாக இந்த படம் தேர்தல் நேரத்தில் வெளியாகியிருப்பது வாக்காளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!