a K. Vijay Anandh review
இன்றைய தேதியில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர்களின் உயரங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான சைக்கிள்கள் வந்துவிட்டன. பேலன்ஸிங் வீல்களுடன் வரும் சைக்கிள்கள் குழந்தைகள் சைக்கிள் பழகுவதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்கிற நிலையை ஏற்படுத்தி விட்டன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் சைக்கிள் என்றாலே அது ஒரே சைக்கிள்தான், அந்தப் பெரிய சைக்கிள் மட்டும் தான். பல வருடங்களுக்குப் பிறகு அரை சைக்கிள் எட்டிப் பார்த்தது என்றாலும் குக்கிராமங்களை பொருத்தவரை சிறியவர்களாகட்டும் பெரியவர்களாகட்டும் அந்த ஸ்டாண்டர்ட் சைஸ் சைக்கிளை தான் ஓட்டி பழக வேண்டும், ஓட்ட வேண்டும்.
அப்படி அந்த சைக்கிளை ஓட்டி பழகுவது என்பது கிட்டத்தட்ட ஒரு போர் பயிற்சியில் ஈடுபடுவது போலத்தான் என்றால் மிகை ஆகாது. நிறைய விழுப்புண்களை, விழுந்து பெரும் வலி சுகமானது சுகமானது
சிறியவர்களுக்கு கால் எட்டாது என்கிற நிலையில் முக்கோண வடிவில் இருக்கும் பாரு க்கு நடுவே ஒரு காலை நுழைத்து குரங்கு பெடல் போட்டு கற்றுக் கொண்டது பசுமையான ஒரு நினைவு, இன்று 40க்கு மேல் வயதானவர்களுக்கு.
அந்த பசுமையான இனிமையான காலகட்டத்திற்கு படம் பார்ப்பவர்களை அழைத்துச் சென்று இருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன். சுமீ பாஸ்கரனின் ஒளிப்பதிவும் ஜிப்ரன் வைபோதாவின் அற்புதமான இசையும் படத்தை மிகவும் ரசிக்கும்படி வைத்திருக்கின்றன.
வழக்கம்போல காளிவெங்கட், சைக்கிள் என்றாலே அலர்ஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கி விடுகிறார். படத்தின் மைய கதாபாத்திரத்திமான அவரது மகன் மாரியப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் வேல்முருகன் உள்ளிட்ட சிறுவர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ஜென்சன் திவாகரின் எதிர்பாராத காமெடி விருந்து இரண்டாவது பகுதியை சிறப்பாக நடத்தி இருக்கிறது.
நம்ம எல்லாம் சைக்கிள் ஓட்ட முடியுமாடா என்று சிறுவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அசால்டாக ஒரு சிறுமி சைக்கிளில் செல்வதை அவர்களுக்கு உந்துதலாக வைத்திருப்பதும் மாரியப்பனின் தந்தை ஏன் சைக்கிள் என்றாலே பயப்படுகிறார் என்பதை குபேரனை வைத்து பாவைக்கூத்தில் சொல்லி இருப்பதும் படத்தின் ஹைலைட் காட்சிகளாக அமைந்திருக்கிறது.
இன்றைய குழந்தைகளை முற்றிலும் சோம்பேறியாக்கும் மொபைல் போன்கள் 40 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மாரியப்பன் உள்ளிட்ட நண்பர்கள் கையில் இல்லாதது அவர்களை எந்த அளவிற்கு சுறுசுறுப்பாக வைத்திருந்தது என்பதை இன்றைய பெற்றோர்கள் இன்றைய தங்களது குழந்தைகளுக்கு இந்த படம் மூலம் காட்ட வேண்டும்.
இந்தப் படத்தை வழங்கிய விதத்தில் சிவகார்த்திகேயன் படம் பார்க்கும் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் சைக்கிள் வழங்கியிருக்கிறார் என்றால் மிகை ஆகாது. ஏனென்றால் இந்த படம் பார்க்கும் அனைத்து சிறுவர் சிறுமியரும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற ஆர்வத்திற்கு வருவார்கள், அவர்களுக்கு அவர்கள் உயரங்களுக்கு தக்கவாறு சைக்கிள்களை அவர்களது பெற்றோர்கள் உடனடியாக வாங்கித் தருவார்கள். அந்த வகையில், இந்த கோடை காலத்தில் சைக்கிள் விற்பனை அதிகரிப்பதற்கு சிவகார்த்திகேயனும் ஒரு காரணமாகி விட்டார், குரங்கு பெடலை வெளியிட்டதன் மூலம் .
குரங்கு பெடல், அழகிய நினைவுகளின் ஆவணம் !