Boat

mysixer rating 3.5

77

a K Vijay Anandh review

” எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் எங்கள் மண்ணை திருப்பிக் கொடுத்து விடுங்கள் ” என்று 1943இல் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியை பார்த்து யோகி பாபு  கேட்பது,  2024  மறு குடியிருப்பு என்கிற பெயரில், சென்னையின் அன்றைய மெட்ராஸின் பூர்வ குடி மக்களை அவர்களது இடங்களில் இருந்து வெகுதூரத்திற்கு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி குடியமர்த்தப்படுவதின் வலியை முன்கூட்டியே அதாவது 80 வருடங்களுக்கு முன்பே பறைசாற்றியிருப்பது போல இருக்கிறது.

சிம்பு தேவனுக்கு, பீரியட் ஃபிலிம் என்று சொல்லப்படும் வகையான படங்கள் கைவந்த கலை என்று சொல்ல வைக்கும் வகையில் போட் வெளியாகி இருக்கிறது.

1943இல் நடைபெற்ற இரண்டாவது உலகப் போர், பிரிட்டிஷ்க்கு எதிரான இந்திய சுதந்திரப் போர் ஆகியவற்றின் பின்னணியில் சென்னையில் விழவிருக்கும் ஜப்பான் வெடிகுண்டுகளுக்கு பயந்து ஒரு படகில் தற்காலிகமாக தப்பித்துச் செல்லும் எலி உட்பட 10 பேரின் 48 மணி நேர அனுபவத்தை அற்புதமாக அத்தியாயம்  அத்தியாயமாக காட்சிப்படுத்திருக்கிறார் சிம்பு தேவன்.

கரையில் இருந்து கடலுக்குள் சென்றதிலிருந்து ஒரு காட்சி கூட படகிலிருந்து விலகிச் செல்லாமல் முழுக்க முழுக்க கடல் பயணத்தையே காட்டியிருப்பது நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றது.

மயிலாப்பூர் அக்ரஹாரத்து சின்னி ஜெயந்த் , அவரது மகள் கௌரி கிஷன், மலையாள மனோரமாவில் கட்டுரை எழுதி வரும் ஷா ரா, ஐந்து வயது மகனுடன் நிறைமாத கர்ப்பிணியான மதுமிதா, சி ஐ டி ஆபிஸர் ஆக எம் எஸ் பாஸ்கர், ராஜஸ்தான் சேட்டாக சாம்ஸ் ஆகியோரை ஏற்றுக்கொண்டு மீனவராக யோகி பாபு அவரது அம்மாவும் ஆக  கிட்டத்தட்ட ஒரு சாகச பயணமாக போட் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய பொழுதுபோக்கை தரும் என்றால் மிகை அல்ல.

இவர்களுடன் நடுவே இணைந்து கொள்ளும் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி மற்றும் எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரத்தில் ஏற்படும் ஒரு டிவிஸ்ட் என்று,  விறுவிறுப்பான ஒரு கதை சொல்லலுக்கு தேவையான இயக்குனரின் மெனக்கடலில் தெரிகிறது.

ஒரு லிப்ட்டிற்குள் அதிகப்படியாக ஏறிக்கொண்ட மூன்று பேர் வெளியே செல்ல வேண்டும் என்றால் எளிதாக வெளியே சென்று விடலாம். ஆனால், நடுக்கடலில் மூன்று பேர் பட படகிலிருந்து குதித்தால்தான் படகு பாதுகாப்பாக கரை சேரும் என்கிற நிலையில் யார் அந்த மூன்று பேர் என்கிற பதை பதைப்பை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.

போட்டை, ரெண்டு ஆக்கிடாதடா என்று ராஜா முகமது என்கிற முகமது அலி ஜின்னாவின் தீவிர தொண்டரான சாராவை பார்த்து யோகி பாபு சொல்லும் போது என்ன பாத்தாடா அந்த வார்த்தை சொன்ன இன்று ராஜா முகமது யோகி பாபுவை அடிக்க கிளம்பும் பொழுது, அதான்  ரெண்டாக்கிட்டீங்களேடா என்று கத்த தோன்றுகிறது.

மங்கள் பாண்டேவுக்கு 100 வருடங்களுக்கு முன்பே,  சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்து விட்டது என்று தமிழின உணர்வோடு கூவும் அறிவாளிகள், இந்த சுதந்திர போராட்டம்  கிறிஸ்துவன் – அதாவது பிரிட்டிஷ்காரன்  வந்த பிறகு தான் ஆரம்பிக்கிறது என்கிற மாயையை  விதைத்துக் கொண்டே  இருக்கிறார்கள்.  உண்மையில் இந்த மண்ணில் முகலாயன் காலடி வைத்ததிலிருந்தே கிட்டத்தட்ட  1200 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது என்பதை மறந்து விடுகிறார்கள், அல்லது திட்டமிட்டு மறைக்க பார்க்கிறார்கள்.

முத்தாய்ப்பாக…

‘இது என் படகு நானும் என் அம்மாவும் குதிக்க மாட்டோம் நீங்க யாராவது தான் படகிலிருந்து குதிக்க வேண்டும் . ‘  வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டே வரும் யோகிபாபுவும் அவரது அம்மாவும் இறுதி காட்சியில்  கொடுக்கும் எதிர்பாராத டுவிஸ்ட்  படகில்  இருக்கும் மற்றவர்களை மட்டும் அல்லாது ரசிகர்களையும் ஒரு நொடி கண்கலங்க வைக்கும்.

Boat, பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு சாகச கடற்பயணம்.