a K.Vijay Anandh review
விக்ரமின் முந்தைய படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலச் சோழனாக அரச உடைகளுடன், நேர்த்தியான தலை முடியுடன் வசீகரித்தார் விக்ரம். இந்தப் படத்தில் தங்கலானாக, ஒரு முழ துணியை மட்டும் கோவனம் ஆக இடுப்பில் கட்டிக்கொண்டு பொன்னை எடுக்க புறப்பட்டு பின் அதை காத்து நிற்கும் பொன்னின் செல்வனாக அதைவிட அதிகமாகவே வசீகரித்து இருக்கிறார், ஒரு கலைஞனாக .
ஆதித்ய கரிகால சோழனுக்கு இருந்த கம்பீரமோ காதலோ தங்கலானுக்கும் ஒரு துளி குறைவில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
பெயரை தங்கலான் என்று வைத்திருந்தாலும் ஒரு முறை கூட தங்கம் எடுப்பதற்கு என்கிற வார்த்தையை உச்சரிக்காமல் பொன் பொன் என்றே அனைவரும் உச்சரிப்பது அழகு. வெள்ளைக்காரன் சொல்வது போல பொன்னை எடுத்து கொடுத்து விட்டால், தங்களது சமூகத்தின் வாழ்க்கை மாறும் என்று மூச்சு விடாமல் பேசி அனைவரையும் நம்பிக்கையுடன் அழைத்துச் செல்லும் தங்கலான் விக்ரம், ஆதித்திய கரிகால சோழனுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல என்பதை நிரூபிக்கிறார்.
அவரது நோக்கம் நிறைவேறியதா ? பொன்னை எடுத்தார்களா ? என்பதே மர்மங்கள் நிறைந்த இரண்டாவது பகுதி.
தங்கலானாகவும் , அவரது கொள்ளு தாத்தாவும் அரசனுமான காடையனாகவும் இரண்டு வேடங்களிலும் விக்ரம் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் கொள்ளு தாத்தா காடையனாக வரும் விக்ரம் மழைச்சாரல் என பேசும் தமிழ் வசனங்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன. அதிலிருந்து சில நூறு ஆண்டுகளில் தங்கலான் விக்ரம் காலத்தில் பேசப்படும் தமிழ் எவ்வாறு சிதைந்தது அல்லது கேட்பவர்களுக்கு புரியாமல் போனது என்பது புரியாத புதிர்.
விக்ரம், இந்திய திரை சுரங்கத்தில் கிடைத்த விலைமதிப்பிட முடியாத அல்லது நிகர் இல்லாத ஒரு பொன் என்று சொன்னால் அது மிகையாகாது.
படத்தில் காட்டப்பட்டிருக்கும் விக்ரமின் இனத்திலிருந்தே ஒரு கங்கு பட்டர், பசுபதி. உடல் முழுவதும் திருநாமங்கள் இட்டுக்கொண்டு ஸ்ரீ ராமானுஜரின் ஆன்மீகப் புரட்சியை சிக்கென பிடித்துக் கொண்டு தனது சகாக்களுக்கு – இன மக்களுக்கு அனந்தாய நமக அச்சுதாய நமக என்று கூறிக் கொண்டே பூணூல் போட்டுவிடும் அழகே அழகு. எந்த ஒரு வலதுசாரி படைப்பாளிகளுக்கும் இல்லாத துணிச்சல் பா ரஞ்சித்திடம் இருப்பது போற்றத்தக்கது. அதிலும் அவரது பேனா அனந்தாய நமக அச்சுதாய நமக என்று எழுதியிருக்கிறது என்றால் அதனை நாம் மெச்சியே ஆக வேண்டும். அனைவருக்கும் இறைப்பேறு கிடைப்பதற்கான சம உரிமை உள்ளது என்கிற ஸ்ரீ ராமானுஜரின் கருத்தை பசுபதி சம்பந்தப்பட்ட ஒரே காட்சியில் அற்புதமாக விளக்கியிருக்கிறார். முன்பே குறிப்பிட்டது போல, சிதைந்து போய்விட்டது போல இருக்கும் தமிழை இன்னும் கொஞ்சம் சிதைத்து சிதைத்து பேசும் பசுபதி இந்த படத்தில் தனித்து நிற்கின்றார்.
பொன்னை எடுக்க வருபவர்களை, தனது மாயாவி கூட்டத்துடன் வந்து வேட்டையாடும் ஆர்த்தி, மாளவிகா மோகனன் இன் கதாபாத்திர படைப்பாகட்டும், அவரது ஒப்பனைகள் மற்றும் உடைகள் ஆகட்டும் மிகச்சிறப்பாக மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போராளியாக பொன்னை எடுக்க வருபவர்களுடன் சண்டை போடும் காட்சிகள், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிது. அதிலும் அவரது வயிற்றில் எதிரியின் கத்தி பாய்ந்து அருவி போல குருதி பீச்சிடும் காட்சிகள், ஹாலிவுட்டில் கூட கற்பனை செய்யாதது.
மகளிர் அணியில், தங்கலான் மனைவி கெங்கம்மாள் ஆக வரும் பார்வதி , அரசனியாக வரும் ப்ரீத்தி கான் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவரை மேலாடைகள் இன்றி இயல்பாக தோன்றும் அவர்கள், விக்ரம் கொண்டு வரும் மேலாடைகளை அணிந்து கொண்டு தங்களது முலைகளை பிடித்துப் பார்த்து மகிழும் காட்சிகள் விரசமில்லாத அழகு. அதிலும் என்னடி முலை பெரிதாக இருக்கிறதுனால தூக்கி காண்பிக்குதோ என்று வெட்கமும் மகிழ்ச்சியுமாக பார்வதி பேசும் வசனங்கள் சுவராசியமானவை என்றால், அனைத்து பெண்களுக்கும் அவரவர் அளவில் உடைகளை விக்ரம் எப்படி எடுத்து வந்தார் என்று யோசிக்க தோன்றாமலும் இல்லை.
மிராசுதாரராக வரும் முத்துக்குமார் கவனிக்க வைத்திருக்கிறார்.
வழக்கமாக பா ரஞ்சித் படங்களில் ஒரு அரசியல் இருப்பதாக அவரது ரசிகர்களும் மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள். அப்படி ஒரு அரசியல் இருப்பதாக எடுத்துக் கொண்டால், இந்தப்படத்தில் இருக்கும் அரசியல் ஒரு ஆன்மீக அரசியல் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே இனத்தில் ஒருபுறம் இறை நம்பிக்கைகளே அல்லது இறைவன் என்பதை உணராமலே இருக்கும் கூட்டத்திற்கும், அதே இனத்தில் இருந்து கொண்டு பெருமாளை வணங்கும் கூட்டத்திற்கும் எந்த சச்சரவுகளும் காணப்படவில்லை. ஆனால், கையில் பைபிளும் சிலுவையையும் சுமந்து கொண்டு எந்நேரமும் ஜீசஸை வழிபட்டுக் கொண்டிருக்கும் வெள்ளைக்காரன், இங்கு இருப்பவர்களை எப்படி கொடுமைப்படுத்துகிறான், சாகடிக்கிறான் என்பதை காட்சிகள் வாயிலாக அருமையாக விளக்கி இருக்கிறார் பா ரஞ்சித். நமக்குள் ஒற்றுமையாக இருந்து விட்டால் அவர்களிடம் ஏண்டா நாம் அடி வாங்க போகிறோம்? என்று கேட்பது போல ஒரு ஆன்மீக அரசியல் ஒளிந்து இருக்கிறது. இங்கே ஒருவர் மற்றவரை அறியாமையில் நீச சாதி என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால் லண்டன் கிறிஸ்தவனுக்கோ இந்தியர்கள் அனைவருமே தீண்டத்தகாதவர்களே. உயர் சாதி என்று சொல்லப்படும் ஒருவரை மாட்டு வண்டியில் பின்புறம் கட்டப்பட்டிருக்கும் ஒரு நாயோடு நடக்க வைப்பதாகட்டும், அவரால் நீச சாதி என்று சொல்லப்படும் கூட்டத்தை நாயை விட கேவலமாக அடித்து நொறுக்குவதாகட்டும் வலி நிறைந்த அர்த்தமுள்ள பாடங்களை புகட்டும் காட்சி அமைப்புகள்.
பற்றே துன்பங்களுக்கு காரணம், ஆம் பொன்னின் மீது பற்று கொண்டு எடுக்க வருபவர்களும் துன்புறுகிறார்கள் , இந்தப் பொன்னை யாரும் எடுக்க விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் துன்புறுகிறார்கள். இதில் ஒரு முரண் காணப்படுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக,
எடிட்டர் ஆர் கே செல்வா முதலிடத்தில் நிற்கின்றார். அருவி போல கொட்டும் காட்சிகள் மிக நேர்த்தியாக கோர்த்த விதத்தில் எடிட்டிங்கை பாராட்டலாம்.
ஒளிப்பதிவாளர் ஏ கிஷோர் குமார் தனது பங்கை சிறப்பாக வழங்கி இருக்கிறார்.
இசை, படத்தில் ஆரம்பத்தில் வரும் அறுவடை காட்சிகளில் வரும் பாடலாகட்டும், ஆடைகளை அணிந்து கொண்டு மகிழ்ச்சியில் மகளிர் பாடி ஆடும் அன்னக்கிளி ஆகட்டும், படத்தின் ஒட்டுமொத்தமான பின்னணியை செய்ய ஆகட்டும் ஜிவி பிரகாஷ் குமார் மிகச் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
முத்தாய்ப்பாக ஒப்பனைகளும் உடைகளும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது என்றால், அந்த கிராமம் முதல், பெருமாள் கோயில், குளம் என்று கே ஜி எஃப் வரை கலை வடிவமைப்பும் ஆகச்சிறந்ததாக கையாளப்பட்டிருக்கின்றது. கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்திக்கு பாராட்டுகள். தூரமாகத் தெரிகின்ற மிகப்பெரிய யானை அமர்ந்திருப்பது போன்று தோற்றமளிக்கும் ஆனைமலை ஐ VFx இல் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் மலைகளைத் தோண்டும் வேகத்தை பார்த்தால் எதிர்காலத்தில் VFx மூலம் மட்டுமே மலைகளை உருவாக்கி இதுதான் மலை என்று அடுத்த சந்ததிகளுக்கு பாடம் நடத்த முடியும் என்கிற நிலை வரலாம் என்கிற பயமும் தொற்றிக் கொள்கிறது.
தங்கலான், தமிழ் சினிமாவின் கழுத்தில் சூட்டப்பட்டிருக்கும் ஒரு பொன் ஆரம்!