கொட்டுக்காளி

mysixer rating 3.5/5

218

a K Vijay Anandh review

படம் என்னவோ அதிகாலை தான் ஆரம்பிக்கின்றது, ஆனால், அன்னா பென்னின் நிலையை நினைத்து அந்த குடும்பம் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அழுது புலம்பிய சோர்வு, பயம், கோவம் ஆற்றாமை அனைத்தும் முதல் பிரெமிலிருந்து பிற கதாபாத்திரங்களின் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. Halfway opening  என்று சொல்லுவார்கள், திரைமொழியில்.

கருக்கல் மறைந்து பொழுது விடிந்து , அன்னா பென்னின் வாழ்க்கையில் ஒரு விடியல் வந்துவிடாதா அதாவது நிஜமான விடியல் வந்துவிடாதா என்று இன்னொரு கிராமத்து வைத்தியரிடம் அழைத்து செல்ல ஆயத்தமாகிறது, அந்த குடும்பம். நகர்ப்புறம் என்றால் செத்தாலும் தனியாகத்தான் சுடுகாட்டிற்கு செல்ல முடியும் என்கிற நிலை விரைவில் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. கிராமங்களில் அப்படியில்லை ஆத்தா , அப்பன் , அக்காக்கள் , அக்கா கணவன், பங்காளிகள், முறைமாமன் என்று ஒரு படடாளமே கிளம்புகிறது.

பொழுது விடிந்தது முதல் வைத்தியரிடம் சென்று சேரும் வரையிலான அவர்களின் பயணமே கொட்டுக்காளி.

அனாந்திர காட்டில் நடக்கும் குலதெய்வ வழிபாடு , ஒற்றையடிப்பாதையில் ஆட்டோவை அப்படியே அலாக்காக தூக்கி திருப்பி வைப்பது, ஜாக்கெட்டிற்குள் வைத்திருந்த பர்ஸை எடுப்பது போல மாதவிலக்கிற்கான பேடை எடுத்து வழியில் காட்டிற்குள் சென்று மாற்றுவது, உயிர்ப்பலி கொடுக்கபோகும் சேவலை நான்கைந்து பேர் சேர்ந்து உயிரைக்கொடுத்து ஆசுவாசப்படுத்துவது போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் ஆகாமல் நிற்கும் ஆட்டோவை, கயிறை கட்டி இழுத்து ஸ்டார்ட் ஆக்கும் போது ஆட்டோவின் பின் புறத்திற்கு ஷாட் வைத்திருக்கின்றார்களா ? அல்லது நேரம் ஆகிக்கொண்டிருப்பதை நிழல் மூலம் உணர்த்தவா ?

Halfway opening என்பதற்கிணங்க முந்தின நாள் இரவு முழுவதும் கத்தி கத்தி சூரிக்கு தொண்டை கட்டி போயிருக்கவேண்டும். ஒரு தங்கை கழுத்து பட்டை போல சுண்ணாம்பு போட்டுவிடுகிறாள். அன்றைய பயணம் முழுவதும் சூரி கரகரத்த குரலிலேயே பேசிக்கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் கோபத்தில் வெடிக்கும் சூரி, ஆற்றுப்படுத்தும் குடும்பத்தார் என்று , வேடிக்கை பார்ப்பது போல ஒரு கேளிக்கை.

அன்னா பெண்னுக்கு ஏன் அப்படி ஆனது , என்று பயணம் முழுவதும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் யூகங்கள், ரசிகர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனால் , அவளின் அம்மாவிற்கு மட்டும் அனைத்தும் தெரியும் போல ஏனெனில் , அவளுக்கு புரிவது அம்மாவின் மொழி மட்டுமே.

அன்னா பென்னுக்கு அங்கேயே என்ன வைத்தியம் கிடைக்கப்போகிறது என்பதை முல்லை அரசி க்கு கொடுக்கப்படும் வைத்தியம் வாயிலாக சூரிக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் உணர்த்திவிடுகிறார் இயக்குநர் பி எஸ் வினோத் ராஜ். வைத்தியரின் வினோதமான தடவல்கள் முழுவதும் முல்லை அரசி, பார்வை குத்திக் கொண்டு நிற்கிறார், சூரியும் .

வைத்தியம் அன்னா பென்னுக்கா அல்லது சூரிக்கா என்பதை ரசிகர்களிடமே விட்டுவிடுகிறார்கள் .

சக்தியின் யதார்த்தமான ஒளிப்பதிவு , பிரத்யேக பின்னணி இசை இல்லாத இயற்கை சத்தங்களை மட்டுமே பின்னணி இசையாக கொண்ட கொட்டுக்காளி ஒரு நல்ல முயற்சி , ரசிகர்களுக்கு இது போதுமா ? காசு கொடுத்து தியேட்டருக்கு வந்து இந்தப்படத்தை பார்க்கும் ரசிகர்களே முடிவு செய்யட்டும்.