29

Rating 4/5

95

a K Vijay Anandh review

இந்தப்படத்திற்கு 21 Vs 29 என்று கூட வைத்திருக்கலாம். அந்தளவுக்கு 21 வயது ப்ரீத்தி அஸ்ராணிக்கும் 29 வயது விதுவுக்கும் நடக்கும் ஒரு கவிதையான காதல் போர் தான் இந்தப்படம்.

ப்ரீத்தி அஸ்ராணி , ஐயோ என்ன அழகு ! குறிப்பாக அந்த கடைசி ஷாட் , ஐ ஏ எஸ் மெயின் எக்ஸாம் எழுதும் போது, ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அனுபவித்து படமாக்கியிருக்கிறார், அவரை. எக்ஸாம் எழுதும் போது அப்படி என்ன ஒரு உணர்ச்சி பிரவாகம் ? அதுவும் , குறிப்பிட்ட அந்த ஏரியை சீரமைத்தது யார் என்கிற ஆப்ஷனல் பதில்களில் சத்யா என்கிற பெயரும் இருப்பதை பார்த்து !

முன்பு ஒருமுறை , எதேச்சையாக சொல்கிறார் , உன் எஸ் எக்ஸாமில் நான் கேள்வியாகவோ பதிலாகவோ எப்படியாவது இருந்து உன் கூடவே பயணிக்கணும் என்று., நல்ல திரைக்கதை ரத்னகுமார்.

இவர்களுக்குள் காதலா ? காமமா ? ஊடலா ? என்று எதுவுமே தெரியாத வண்ணம் , ரசிகர்களை மிகவும் யோசிக்க வைத்து , 10 பாகங்களாக , 10 குறுங்கவிதைகளாக படைத்து ஒரு மாதிரியான பொழுதுபோக்கை வழங்கிவிடுகிறார் ரத்னகுமார்.

விது , ரெட்ரோ பட வில்லனாய்யா இவரு..? என்று கேட்கும் அளவிற்கு , ஒரு மென்மையான சராசரி இளைஞனாக கோபப்படும் போது அளவாக கோபப்படும் இளைஞனாக அற்புதமாக நடித்திருக்கிறார். தவெக தலைவர் விஜய் அவ்வளவு பெரிய தேர்தல் வெற்றியை பெற்றபிறகும் , முதல் தடவையாக கவர்னரை பார்க்க செல்லும் போது பூங்கொத்து கூட வாங்கிச்செல்லாமல் தான் சென்றார் . ஆனால், இந்த சாதாரண சத்யா , ஒவ்வொரு முறை தன் காதலி விஜியை சந்திக்கும் போதும் ஏதாவது வாங்கி செல்கிறார். எதுவுமே வாங்கிட்டு வராம இருக்கமாட்டியாடா என்று விஜி கோபித்துக்கொள்ளும் போது , எலைட் டாஸ்மாக்கில் ஒரு உயர்தர சரக்கு அடித்த உணர்வு, ரசிகர்களுக்கு ஏற்படப்போவது உறுதி.

துவரை, அவள் கேட்காமலேயே வாங்கிக்கொடுத்து கொண்டிருந்த நாயகன், கடைசியில் அவள் கேட்ட அவள் தந்தையை வாங்கிக்கொண்டு போவது ஒரு உணர்ச்சிரமான காட்சி அமைப்பு . தந்தையாக நடித்திருக்கும் பிரேம் குமாரும் கண்கலங்க வைத்து விடுகிறார்.

இந்த பிரபஞ்சத்தில் ஏற்கனவே இருப்பது தான் என்றாலும் , ஒருவர் கண்டுபிடிக்காத வரை மற்றவர்களுக்கு தெரியாமால் இருந்திருப்பதை , யாரொருவர் கண்டுபிடிக்கின்றார்களோ, அதன் பிறகு அது அவர்கள் பெயரால் அழைக்கப்படும்.

அந்த வகையில் 29 படம் வெளியானபிறகு மெரினா கடற்கரையில் ரத்னகுமார் கோடு என்று ஒன்று உருவாகக்கூடும்.

நாயகன் விது மற்றும் நாயகி பிரீத்தி அஸ்ராணி மெரினா கடற்கரையில் சந்தித்து கொள்ளும் இருவருக்கிடையில் நடைபெறுவதாக அமைந்த அந்த காட்சியில் , நாயகன் ஒரு குறிப்பிடட இடத்தில் நின்றுகொண்டு காற்றின் ஒலியை அனுபவித்துக்கொண்டு இருப்பான் .

அந்த குறிப்பிடட புள்ளியில் நாயகியை நிற்க வைத்து , ” இதுக்கு அந்தப்பக்கம் என்றால் வாகன இரைச்சல் , இந்தப்பக்கம் என்றால் கடல் அலைகளின் சத்தம் , ஆனால் , இந்த குறிப்பிடட புள்ளியில் நின்றால் , காற்றின் ஒலி மட்டுமே கேட்கும் ..”என்று கூறுவான். நாயகியும் அந்த இடத்தில் நின்று அவன் சொல்வதை அனுபவித்து மகிழ்வாள்.

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வந்துசெல்லும் மெரினா கடற்கரையில் , இப்படி இடம் இருக்கிறது என்று சோதித்த பார்த்து கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார் , இனிமேல் அது ரத்னகுமார் கோடு என்று அழைக்கப்படலாம்!

சொந்த ஊரில் , நிஜமான சமூக நல ஆர்வலர் மற்றும் போராளியாக நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரையும் கவனிக்க வைக்கிறார். அம்மாவின் , போராளித்தனம் ஆரம்பத்தில் பிடிக்காமல் போனாலும் , கடைசியில் அதுதான் நம்மை அடையாளப்படுத்தும் என்று களமிறங்கி, விது ஏரியை மீட்கும் காட்சி அருமை.

நல்லவேளையாக , பிரீத்தி அஸ்ராணியே கலெக்ட்ராக அமர்ந்து , பேப்பர் வெயிட்டை தள்ளிவிட்டு அத்தை ஆதிரை காலில் ப்ரீத்தி விழுந்துழுவது போன்ற காட்சிகள் இல்லை. கலெக்டராக திருநங்கை அனுஸ்ரீ வேலனை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எப்படி ப்ரீத்தி அஸ்ராணியின் அழகை அனுபவித்து அனுபவித்து காட்சி படுத்தியிருக்கிறாரோ அதற்கு நானும் சற்றும் சளைத்தவன் இல்லை என்கிற அளவிற்கு , ரத்னகுமாரின் திரைக்கதையை அனுபவித்து அனுபவித்து இசையை கொட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன், அடடாகாசம் ஐயா !

மேல கை வைக்கணும்னு தான் காய்ச்சல்னு பொய் சொல்றார் , அப்புறம் எல்லாவற்றையும் பார்க்கணும் அது தான காதல் என்று அங்கலாய்க்கிறார். ஒருதடவை குஸ்கா சாப்பிட்ட பிறகு , திடீர்னு , நீ ஏன் இப்படியே இருக்க ? அடுத்து என்ன ? என்று சம்பந்தமே இல்லாமல் புலம்புகிறார் பிரீத்தி அஸ்ராணி.

மும்பை வீதிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று இசைக்கப்படும் பாடலை இசைத்து அதற்கு பிரீத்தி அஸ்ராணி குழுவினரை அட்டகாசமாக ஆடவைக்கும் போது என்னங்கடா இது தமிழ்ப்படந்தானா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே , பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிசில் செய்யப்படட விநாயகரை கரைக்க வருபவர்களை தட்டிக்கேட்கும் நாயகன் என்று ஒரு காட்சி . அற்புதமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்கள்.

ஒரு காதல் , ஒரு நீர் நிலை மீட்பு என்று யாருமே யூகிக்க முடியாத வகையில் வழக்கம் போல தான் ஒரு திரைக்கதை ஜாம்பவான் ஆகும் தகுதி பெற்றவன் என்று நிரூபித்திருக்கிறார் ரத்னகுமார்.

29, கவிதை தொகுப்பு !